அழகான ராட்சசியே -40

40 ரோஜாவில் முள் இருந்தால் ரோஜாவையே விலக்கி வைக்கும் அழகான ராட்சசி நீ.... அது ஒரு அப்பட்டமான சவால்..! அதை அகல்யா சோமசுந்தரத்த...


40
ரோஜாவில் முள் இருந்தால்
ரோஜாவையே விலக்கி வைக்கும்
அழகான ராட்சசி நீ....


அது ஒரு அப்பட்டமான சவால்..! அதை அகல்யா சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்தாள்.. உன் மகளை.. என் கணவரின் மூத்த தாரத்தின் மகனுக்கு மணமுடித்து என் மருமகளாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறாயா..? இரு.. அவளை நான் ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன்..
இப்படியொரு அர்த்தம் பொதிந்த 'அவளை நான் பார்த்துக்க மாட்டேனா..?' என்ற சொற்றொடரில் பூங்குழலி துடித்துப் போய் விட்டாள்..
சோமசுந்தரம் புருவங்கள் சுருங்க.. எதிரே நின்ற அகல்யாவை கூர்ந்து பார்த்தார்.. எந்தவொரு தைரியத்தில் அவர் சொல்லாத வார்த்தைகளைச் சொல்லியதாக அவள் நரேந்திரனின் முன்னால் சொல்கிறாள் என்ற சினம் அவருக்குள் எழுந்தது.. இதுபோன்ற செயலைச் செய்பவளின் முன்னால் அவள் சொன்னதை இல்லை யென்று சொன்னால் அது அவளைக் காட்டிக் கொடுத்ததைப் போல ஆகிவிடாதா என்று அவருடைய மனம் அவரைக்கேட்டது.. அப்படி அவர் காட்டி கொடுத்து விட மாட்டார் என்ற தைரியத்தினால்தானே அவ்வளவு தைரியமாக அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவருடைய அறிவு சுட்டிக் காட்டியது..
இதை வளர விடக்கூடாது என்று சோமசுந்தரம் முடிவெடுத்தார்.. இதுபோன்ற விசமச் செயல்களை துளிரிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.. இல்லையென்றால் இது தொடர்கதையாகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது..
"நான் எப்பங்க அப்படிச் சொன்னேன்..?" நிதானமாக அகல்யாவை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டார் சோமசுந்தரம்..
அவளுக்கு 'சுரீர்' என்று ஆகிவிட்டது.. சோமசுந்தரம் இடக்கு மடக்கானவர்தான்.. முதல்நாளே அர்ச்சனாவிடம் அவளை மாட்டி விட்டவர்தான்.. இருந்தாலும்.. அழையாத விருந்தாளியென்று அறிவுறுத்தினால் ரோசப்பட்டுக் கொண்டு வீட்டுக்கு வராமல் அப்படியே போய் விடுவார் என்று அவள் நினைத்திருந்தாள்.. என் வீட்டுக்கு வராதே என்று மறைமுகமாக சொல்லி விட்டால்.. அவள் முகத்தில் கூட விழிக்காமல் பஸ் ஏறி விடுவார்கள் என்றுதான் அவள் விடாமல் பேசி வைத்தாள்..
அதை அவர் முறியடித்து விட்டதில் முன்தினம் போல  'என்ன தைரியம்..! இந்த ஆளு பொண்ணு வீட்டுக்காரனா.. இல்லை மாப்பிள்ளை வீட்டுக்காரனா..? என்று' மனதுக்குள் ஆத்திரப்பட்டாள்..
"நாங்க உயிருக்குயிரா வளர்த்த பொண்ணும்மா.. கல்யாணம் முடிச்சுக் கொடுத்த கையோட மண்டபத்தை விட்டு வெளியேற.. நாங்க என்ன முன்னே.. பின்னே தெரியாத மூணாம் மனுசங்களா..? பெத்தவங்கம்மா.. எங்க பொண்ணு எந்த வீட்டில.. எப்படியாப்பட்ட மனுசங்க மத்தியில வாழப் போகுதுன்னு தெரிஞ்சுக்காம பெங்களூரை விட்டு ஒற்றை அடியை எடுத்து வைக்க மாட்டோம்.. எங்க பொண்ணு இருக்கிற வீட்டோட அட்ரஸைக் கூடத் தெரிஞ்சுக்காம விட்டு விட்டு போறதுக்கு நான் என்ன கேணையனா..?"
சோமசுந்தரத்தின் கோபத்தில் நரேந்திரன் திரும்பி அகல்யாவை தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்தான்.. அவள் முகம் விழுந்து விட்டது.. சமாதானமாக எதையோ சொல்லப் போனவளை முகச்சுளிப்புடன் கையமர்த்தினான்..
"அருண்.. அம்மாவைக் கூப்பிட்டுக்கிட்டு போ.."
அவன் குரல் கொடுத்ததில் முகம் இறுக வந்த அருண்குமார் விழிகளால் அகல்யாவை அதட்டியபடி அழைத்துக் கொண்டு போனான்..
"ஐ ஆம் ஸாரி.." குற்ற உணர்வுடன் சொன்னான் நரேந்திரன்..
"பரவாயில்லைன்னு நான் சொல்ல மாட்டேன்.. எங்க கிட்டேயே இப்படிப் பேசறவங்க என் பொண்ணுகிட்ட எப்படிப் பேச மாட்டாங்க..? இதுக்குத்தான் நான் வெளியூரில் பெண் கொடுக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.."
நரேந்திரனின் முகம் கருத்து விட்டது.. புது மனைவியை அருகில் வைத்துக்கொண்டு அவன் கேட்க நேர்ந்த வார்த்தைகளில் கோபம் கொண்டவனாக.. அவன் அர்ச்சணாவிடம் எரிந்து விழுந்தான்..
"அம்மாவை தனியே விடாதேன்னு சொன்னேனில்ல.. கூட இருக்காம எங்கே போன..?"
"இல்லேண்ணா.. என் பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அவங்ககூட பேசிக்கிட்டு இருந்ததில அம்மாவை மறந்திட்டேன்.."
"இப்பப்பாரு.. அவங்க ஊர்மிளாவோட பேரண்ட்ஸ் மனதை ஹர்ட் பண்ணியிருக்காங்க.. ஏன் அர்ச்சனா..? நீ கூட இருந்திருந்தா இதை அவாய்டு பண்ணியிருக் கலாமில்ல.."
"ஸாரிண்ணா.."
"ஸாரி சொன்னா எதுவும் சரியாகி விடாது.. புரிஞ்சுக்க.."
சோமசுந்தரத்தை ஜாடையாகப் பார்த்தபடி சொன்னான் நரேந்திரன்.. அவன் மன்னிப்புக் கேட்டானாம்.. அவர் அதை பொருட்படுத்தவில்லையாம்.. அவன் சொல்லிக் காட்டுவதை புரிந்து கொண்டார்சோமசுந்தரம்..
"சரியாகித்தானேங்க ஆகனும்..? எங்க பொண்ணை உங்க கையில பிடிச்சுக் கொடுத்திருக்கேன்.. எங்க பொண்ணுக்காக எதையும் பெரிசு பண்ணாம அனுசரிச்சுத் தானே ஆகனும்..? விடுங்க.. அவங்க மனசில என்ன இருக்கோ.. யாருக்குத் தெரியும்..?"
அகல்யாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்த நரேந்திரனும் மௌனம் சாதித்தான்.. அர்ச்சனாவும் அமைதி காத்தாள்.. ஊர்மிளா சங்கடத்துடன் கணவனையும்.. நாத்தனாரையும் பார்த்தாள்..
பஸ் கிளம்பியது.. தன்பக்க சொந்தங்களுக்கு கையசைத்து விடை கொடுத்த ஊர்மிளாவின் முகத்தில் திருச்சியை விட்டுப் பிரிந்து வந்து விட்ட பிரிவுத் துயர் தெரிந்தது..
அதை அறிந்தவனைப் போல நரேந்திரன் அவள் தோளில் கை போட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..
"ஸ்ஸ்.. அப்பாம்மா.. அர்ச்சனா.." முகம் சிவக்க அவன் கைகளை விலக்க முனைந்தாள் ஊர்மிளா..
"இதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் அண்ணி.." குறும்புடன் கண்சிமிட்டினாள் அர்ச்சனா..
மனைவிக்காக கையை விலக்கிய நரேந்திரன்.. கை அசைத்ததில் வரிசையாக கார்கள் வந்து நின்றன..
"அர்ச்சனா.. அத்தையையும்.. மாமாவையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வா.." நரேந்திரன் ஊர்மிளாவுடன் காரில் ஏறிக் கொண்டான்..
கார் நகர்ந்ததும்... சோமசுந்தரம் எதையோ தேடுவதைப் போல பாவனை செய்தார்..
"என்னங்க..?" என்றாள் பூங்குழலி..
"உன் மாப்பிள்ளை மாமான்னு சொன்னாரே.. யாரைச் சொன்னார்ன்னு தேடிப் பார்த்தேன்.." என்றார் சோமசுந்தரம்.
கணவரின் நையாண்டியில் பூங்குழலிக்கு சிரிப்பு வந்தாலும் அவள் சிரிக்கவில்லை.. சும்மாவே வெளுத்துக் கட்டுகிற மனிதர் அவள் சிரித்து வைத்தால் பிரித்து மேய்ந்து விடுவார் என்பதினால் அவள் அடக்கி வாசித்தாள்..
"பேசாமத்தான் வர்றீங்களா.. நம்ம மாப்பிள்ளையோட தங்கச்சியும் இங்கதான் நிக்குது.. தப்பா நினைச்சுக்கப் போகுது.." பயம் காட்டினாள் பூங்குழலி..
"ஊஹீம்.. அந்தக் கவலையே உங்களுக்கு வேணாம் அங்கிள்.. என்ஜாய் யுவர் ஷெல்ப்.. ஆக்சுவலா நீங்க போடற அதிரடி வெடி குண்டுகள் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுது.." ரசித்தபடி சொன்னாள் அர்ச்சனா..
"சொல்லிட்டியா..? இனி இவரை பிடிக்க முடியாது.. சும்மாவே சாமியாடுவார்.. நீ வேற சாம்பிராணி காட்டி வைச்சிட்ட.. ஆட்டம் அதிகமாகப் போகுது.."
பூங்குழலியின் கவலையில் அர்ச்சனா சிரித்தாள்.. அவளை பூங்குழலிக்குப் பிடித்திருந்தது.. அகல்யாவின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இருவரும் தங்கமாக இருந்ததில் அவளுக்கு ஆச்சரியம்.. ஆச்சரியமாக இருந்தது.
அர்ச்சனாவுடன் அவர்கள் காரில் ஏறினார்கள்.. பெங்களூரின் மையப் பகுதியிலிருந்த நரேந்திரனின் பிரம்மாண்டமான பங்களா அவனுடைய செல்வச் செழுமையைக் காட்டியது..
வீட்டின் போர்டிகோவில் நின்றிருந்த அகல்யாவின் மமதையான பார்வை.. என்னைப் பார்.. என் செல்வத்தைப் பார் என்று பெருமை பேசியது..
சோமசுந்தரம் அதை கண்டு கொள்ளாமல் இயல்பாக வீட்டுக்குள் நுழைந்தார்.. அதில் அகல்யாவின் கர்வம் அடி வாங்கியது..
'இதுபோல வீட்டை இவன் கண்ணால் கூடப் பார்த்திருப்பானா..? என்னவோ.. என் ரேன்ஜீக்கு இதெல்லாம் கம்மி என்கிறதைப் போல.. என்ன தெனா வெட்டா உள்ளே வர்றான்..?' அவள் மனம் குமைந்தது..
சோமசுந்தரம் வீட்டைச் சுற்றி இயல்பாக பார்வையை ஓட விட்டபடி கால்மேல் கால் போட்டு சோபாவில் உட்கார்ந்தார்.. அதில் அகல்யா மனதுக்குள் பொங்கினாள்.
'இந்த வீட்டுக்கு நான் எஜமானியா..? இல்லை இவன் எஜமானனா..?'
கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் அவள் வீட்டில் இருந்த வேலையாள்களின் மேல் எரிந்து விழுந்தாள்..
"என்ன.. இங்கே தூசி இருக்குது..? இதோட மதிப்பு என்னான்னாவது உனக்குத் தெரியுமா..? போன ஜென்மத்தில புண்ணியம் பண்ணியிருக்க.. இந்த வீட்டுக்குள்ள காலடி வைச்சிருக்க.. அதை நினைச்சுப் பார்த்து எங்கே எப்படியிருக்கனும்னு அடக்க ஒடுக்கமாக இருந்து பழகு.. ஆட்டம் போடாதே.. அதுக்கெல்லாம் உனக்கு தகுதி பத்தாது.."
பேச்சு என்னவோ வேலையாளிடம்தான்.. ஆனால் அவளுடைய பார்வையெல்லாம் சோமசுந்தரத்தின்மீதே இருந்தது..
நல்லவேளையாக பூங்குழலி ஊர்மிளாவுடன் வீட்டுக்குள் போயிருந்தாள்.. சோமசுந்தரத்தின் செவிகளில் மட்டும் அகல்யாவின் பேச்சு விழுந்து வைத்தது.. பூங்குழலியின் செவிகளில் மட்டும் அந்தப் பேச்சு விழுந்திருந்தால் அந்த வீட்டின் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாது என்று வீட்டை விட்டு வெளியேறி யிருப்பாள்..
'அதுதானே இந்தம்மாவின் திட்டம்..!'
சோமசுந்தரம் யாருக்கு வந்த விருந்தோ என்று அகல்யா பேசும் வார்த்தைகளுக்கும் அவருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்ற ரீதியில் அலட்டிக் கொள்ளாமல் அவளைக் கத்தவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்..
கத்திக் கத்தி தொண்டை தண்ணீர் வற்றிப் போன அகல்யா தான் கத்திய கத்தலுக்கு யாதொரு பிரயோசனமும் இல்லையென்பதில் வெறியாகிப் போனாள்..
சோமசுந்தரம் சும்மாவும் இருக்காமல்..
"ஏம்மா.. உங்களுக்கு பிளட் பிரசர் இருக்கோ..?" என்று துக்க்ம விசாரித்து வைத்தார்..
"எதனாலே அப்படிக் கேட்கறிங்க அங்கிள்..?"
அகல்யாவிடம் ஒரு பாட்டில் குளிர் தண்ணீரைக் குடுத்தபடி விசாரித்தாள் அர்ச்சனா..
"வேலை செய்றவங்ககிட்டப் போய் இந்த அளவுக்கு கத்தறாங்களே.."
சோமசுந்தரம் நினைத்திருந்தால் அதை சப்தம் போடுகிறார்களே என்று கேட்டிருக்கலாம்.. அவர் அப்படிக் கேட்கவில்லை.. அகல்யாவிடமெல்லாம் அதுபோன்ற நாகரிகத்தைக் கடைபிடிக்க முடியாது என்ற முடிவோடு அவர் கேட்டு வைத்ததில் உண்மையாகவே அகல்யாவின் ரத்த அழுத்தம் எகிறி விட்டது.. அதை உணர்ந்தவளாக...
"முதல்ல தண்ணியைக் குடிங்கம்மா.." என்று அதட்டினாள் அர்ச்சனா..
அகல்யா தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டு ஆசுவாசமானதும் அடுத்து அவள் வாயை திறப்பதற்குள்.. அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்ட போய் விட்டாள் அர்ச்சனா..
'நல்ல பொண்ணு.. அருமையான வேலையைச் செஞ்சிருக்கு..' அர்ச்சனாவை மனதுக்குள் பாராட்டிக் கொண்டார் சோமசுந்தரம்..
புயலடித்து ஓய்ந்த அமைதி அந்த இடத்தில் இருந்ததில் அவருக்கு சிரிப்பு வந்தது.. எதனால் அகல்யாவுக்கு இந்த அளவுக்கு கோபம் வருகிறது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. காரணம் எதுவாக இருந்த போதிலும் ஒரு மனுசிக்கு இந்த அளவுக்கு பொடிப்புத்தி இருக்கக் கூடாது என்ற வெறுப்புணர்வு அவர் மனதில் படிந்தது..
"அங்கிள்.. உங்களுக்கு ரூம் ரெடியா இருக்கு.."
அருண்குமார் வந்து அவரை அழைத்துக் கொண்டு போனான்.. அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையின் அளவு.. திருச்சியிலிருந்த அவரது வீட்டின் பரப்பளவை ஒட்டி இருந்ததை கவனித்தவருக்கு இதனால்தான் அகல்யாவிற்கு இந்த அளவிற்கு தலைக்கனம் வந்திருக்கிறது என்று தோன்றியது..
அவருடைய பெட்டிகளை வேலையாள் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான்.. பூங்குழலி எங்கே என்று அவனிடம் கேட்கலாமா என்று நினைத்தவர்.. அந்த யோசனையை கைவிட்டார்.. குளியலறைக்குள் புகுந்து முகம் கழுவி உடை மாற்றியவர் கட்டிலில் படுத்து ஊர்மிளாவின் எதிர்காலத்தைக் குறித் யோசனையில் ஆழ்ந்தார்.. அப்படியே தூக்கம் கண்களைச் சுழற்றியதில் சொக்கிப் போனவராக தூங்கிவிட்டார்..
"என்னங்க.. எழுந்திருங்க.."
பூங்குழலியின் குரலில் எழுந்து அமர்ந்தார்.. அவள் கையில் காபிகப் இருந்தது.. அதற்குள் அவள் சுவாதீனமாக காபிக் கோப்பையை கொண்டு வரும் அளவிற்கு அந்த வீட்டில் பழகி விட்டதை நினைத்து அவருக்கு ஆச்சரியமாக இருந்தது..
'இவ எப்படி அகல்யா வாயில விழுகாம தப்பிச்சா..?'
பூங்குழலி.. உடைமாற்றி.. லேசான ஒப்பனையுடன்.. வெளியே செல்வதற்குத் தயாரான தோற்றத்தில் இருந்தாள்.
"காபியைக் குடிச்சிட்டு சீக்கிரமா கிளம்புங்க.." என்றும் சொன்னாள்..
"அதிருக்கட்டும்.. அந்த அகல்யா எங்கே..?"
"மதியத்தில ரூமுக்குள்ள போனவங்கதான்.. இன்னும் ரெடியாகிக்கிட்டு இருக்காங்க.. ஊர்மிளாவுக்கு கூட அலங்காரம் முடிஞ்சிருச்சு.. அர்ச்சனாவும் கிளம்பியாச்சு.. இந்தம்மா இன்னும் கிளம்பலை.."
"ஓ.. அதனாலதான் நீ சுதந்திரமாக உலா வரயா..?"
"தெரியுதில்ல.. காபியைக் குடிங்க.."
சோமசுந்தரம் காபியைக் குடித்து விட்டு எழுந்தார்.. புருவங்களை உயர்த்தியபடி மனைவியிடம் விசாரித்தார்..
"எல்லாம் சரிடி குழலி.. எங்கே போக எல்லோரும் ரெடியாகிக்கிட்டு இருக்கீங்க..?"
"சரியாப் போச்சு போங்க.. இது கூடத் தெரியாம துங்கிக்கிட்டு இருந்தீங்களா..? நம்ம ஊர்மிளாவோட கல்யாண ரிசப்சன் நடக்கப் போகுது.."
"எங்கே..? அந்த மண்டபத்திலேயா..?"
"ஊஹீம்.. ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில நடக்கப் போகுதாம்.. பங்சனுக்கு சினிமா ஸ்டாரெல்லாம் வருவாங்களாம்.."
அவ்வளவு முக்கியமான விழா நடப்பதாக இருக்கும் போதா அவர்களை அந்த விழாவில் கலந்து கொள்ள விடாமல் ஊருக்கு அனுப்பி வைக்க அகல்யா முயற்சி செய்தாள்..?
"பார்த்தியாடி பூங்குழலி.."
"ம்ம்ம்.. எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்தாச்சு.. இனிமே இதைப்பத்தி பேசி பிரயோசனமில்லை..நம்ம பொண்ணையும்.. மாப்பிள்ளையையும் மறுவீட்டு விருந்துக்கு அழைச்சிட்டு நாளைக்கே நாம ஊரைப் பாக்கக் கிளம்பிப் போயிரலாம்.."
பூங்குழலியின் கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது..










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -40
அழகான ராட்சசியே -40
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-40.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-40.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy