அழகான ராட்சசியே -38

38 என் மனதில் முள்ளை வைத்து.. பிரிந்துபோகும் சொல்லை வைத்த.. அழகான ராட்சசி நீ.... யதேச்சையாக திரும்பிய அகல்யா அவர்களைப் பார்த்து...


38
என் மனதில் முள்ளை வைத்து..
பிரிந்துபோகும் சொல்லை வைத்த..
அழகான ராட்சசி நீ....

யதேச்சையாக திரும்பிய அகல்யா அவர்களைப் பார்த்து விட்டாள்.. நொடிப் பொழுதில் அவள் முகத்தில் பூத்து நின்ற மலர்ந்த புன்னகையில் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சூன்யக்காரியைப் போல பார்த்துக் கொண்டிருந்த தேவமாது இவள்தானா என்று பூங்குழலி தடுமாறிப் போனாள்..
சோமசுந்தரத்திடம் அப்படியெல்லாம் தடுமாற்றம் வந்து விடவில்லை.. அவர் உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்ற ரீதியில் மௌனப்பார்வையுடன் நின்றார்...
அதுவரை நரேந்திரனையும், ஊர்மிளாவையும் உறுத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அகல்யா வாத்சல்யத்துடன் அவர்களை திரும்பிப் பார்த்து விட்டு எழுந்து வந்தாள்..
"கிட்ட வருகிறாங்கங்க.." பூங்குழலி பயந்தாள்..
"வந்து என்ன செய்யப் போறாங்க..? உன்னைத் தூக்கி விழுங்கப் போகிறாங்களா..? பயப்படாம நில்லு பூங்குழலி.. அச்சமே நரகம்.. இந்த சோமசுந்தரத்தோட பெண்டாட்டி அச்சப்பட மாட்டா.."
"ஆனா.. ஊர்மிளாவோட அம்மா அச்சப்படுவா.."
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே அகல்யா அவர்களை சமீபித்து விட்டாள்.. அவளின் புன்னகை விரிந்தது..
"பாருங்க இவங்களை.. சாப்பிடப் போகனும்ங்கிற நினைப்பில்லாம பேசிக்கிட்டு இருக்காங்க.." குறை பட்டாள்..
"எவங்க..?" சோமசுந்தரம் சுற்று முற்றும் பார்த்தார்..
"அண்ணனுக்கு எல்லாமே ஜோக்தான்.." அகல்யா சிணுங்குவதைப் போல சொன்னாள்..
'கொடுமை..' சோமசுந்தரம் ஆற்ற மாட்டாமல் பூங்குழலியைப் பார்த்தார்.. அவள் அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் ஊர்மிளாவைப் பற்றிய கவலை யோடிருந்தாள்..
'இந்தம்மா வயசுக்கு.. இவங்களுக்கு நான் அண்ணன்ங்கிறதே ஜோக்தான்.. இதில தனியா வேற ஜோக் வேணுமா..?'
"அவங்கன்னா.. நம்ம பிள்ளைகள் அண்ணா.." தேனொழுக அகல்யா பேசினாள்..
"ஓ.. நீங்க மாப்பிள்ளையையும், ஊர்மிளாவையும் சொன்னீங்களா..?" என்றார் சோமசுந்தரம்..
"வேற யாரைச் சொல்லியிருப்பேன்னு நீங்க நினைக்கறிங்க..?" அகல்யா அப்பாவி போல கேட்டாள்..
இதற்கு அவள் சூனியக்காரியைப் போலவே முகத்தை வைத்திருக்கலாம் என்று சோமசுந்தரத்திற்குத் தோன்றியது..
அவளிடம் சொன்னால்.. ஆஹா.. அதற்கென்ன அண்ணா (?) என்று கேட்டுக் கொள்ளவா போகிறாள்..?  என்ற ஞானோதயம் வந்த காரணத்தினால் அவர் லேசாக தலையை அசைத்து வைத்தார்..
"பாருங்களேன்.."
'எதைப் பார்க்க..?'
"நானும் அப்போப்பிடிச்சு இவங்களைப் பார்த்துக் கிட்டு இருக்கேன்.."
'அதைத்தான் நாங்க பார்த்தோமே..'
"இவங்க பேசிக்கிட்டே இருக்காங்க.."
'அதில உங்களுக்கென்னம்மா பிரச்னை..?'
"நிறுத்தின பாடாய் இல்லை.."
'ஓ..! உங்களுக்கு அந்த ஐடியா வேற மனசில இருக்கா..?'
"நானும் இப்போ பேச்சை முடிச்சுக்குவாங்க.. அப்போ பேச்சை முடிச்சுக்குவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்.."
'உங்களுக்கேன்ம்மா அந்த வேலை..? அவங்க வயிறை அவங்க பார்த்துக்க மாட்டாங்களா..? நீங்க உங்க வயிறைப் பார்த்துக்கிட்டு சாப்பிடப் போக வேண்டியது தானே..?'
"பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க..?"
'எதைப் பார்க்கிறவங்க..?'
"என்னடா.. மாப்பிள்ளைக்கு அம்மாவாய் இருந்துக்கிட்டு.. பெண்ணையும், பையனையும் சாப்பிட அழைச்சுக்கிட்டுப் போகாம அவங்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கான்னு சொல்லிற மாட்டாங்களா..?"
அதற்கு மேலும் 'மைண்ட் வாய்ஸ்' கொடுக்க முடியாத சோமசுந்தரம் நேரடிப் பேச்சுவார்த்தையில் இறங்கி விட்டார்..
"யார் சொல்வாங்க..?"
"பார்க்கிறவங்கதான்.."
"யாரும் இங்கே பார்க்கலையே.. நாங்க வந்தப்ப நீங்கதான் ஊர்மிளாவையும்.. மாப்பிள்ளையையும் பார்த்துக் கிட்டு இருந்தீங்க.."
சோமசுந்தரத்தின் பேச்சில் அகல்யாவின் முகம் கருத்து.. உடனடியாக மலர்ந்த நிலைக்கு வந்தது..
"அண்ணனுக்கு இதிலும் ஜோக்தான்.."
அவள் அதையும் நகைச்சுவையாக்கி சிரித்ததில் பூங்குழலியின் மனதில் பயம் மிகுந்தது.. அகல்யாவின் புன்னகை சாதாரணப் புன்னகையாக இல்லாமல்..
சாகசப் புன்னகையாக இருந்ததில் அவளின் அடிவயிறு கலங்கியது..
"அவங்கபாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்காங்க.. நாம அதில குறுக்கிட்டா நல்லா இருக்காது.. வயிறு பசிச்சா அவங்களே சாப்பிட வரப் போறாங்க.. நீங்க உட்காருங்க.."
சோமசுந்தரம் சாப்பிடப் போகாமல் அங்கேயே உட்கார்ந்து அகல்யாவுக்கும் ஒரு சேரைக் காட்டியதில் அவளின் கடுப்பு அதிகரித்தது.. அவளால் நரேந்திரனும், ஊர்மிளாவும் தனித்துப் பேசிக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.. அதை சோமசுந்தரம் தம்பதியினரின் முன்னால் காட்டிக் கொள்ள முடியாமல் கடனே என்று உட்கார்ந்தாள்.. அந்தச் சமயம் பார்த்து அருண்குமார் அந்தப் பக்கம் வந்தான்..
"அருண்.." ஆனந்தமாய் அழைத்தாள்..
அருண்குமார் அவர்களின் பக்கத்தில் வர..
"என் மகன்.." என்று பெருமையுடன் சொன்னாள்..
"ஓ.. இவர்தான் நீங்க பெத்த மூத்த மகனா..?"
சலனமில்லாமல் சோமசுந்தரம் கேட்ட கேள்வியில் அகல்யாவின் முகம் பயங்கரமாக மாறியது.. இப்போது அவள் பழைய மலர்ந்த முகமூடிக்குத்திரும்ப சில நிமிடங்களாகின.. அவள் தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் வரையில் நிதானமாக காத்திருந்தார் சோமசுந்தரம்..
"இவன் நரேந்திரனின் தம்பிங்க.. நரேன்தான் எனக்கு மூத்தமகன்.."
கவனமாக 'பெற்ற மகன்' என்ற வார்த்தையைத் தவிர்த்தாள் அகல்யா..
"அப்படிங்களா..?" சோமசுந்தரத்தின் பார்வை அருண்குமாரை அளவெடுத்தது..
அகல்யாவின் ஜாடையிலிருந்த அவன் சிநேகிதமாக சிரித்தான்.. பொய் முகமூடியில்லாத அந்த இணக்கமான சிரிப்பில் அவருக்குள் ஆச்சரியம் வந்தது.. அகல்யாவின் வயிற்றில் பிறந்த மகன் எப்படி பொய்மையில்லாத இயல்போடு இருக்கிறான்..?
"வணக்கம் மாமா.." என்றான் அருண்குமார்..
"வணக்கம் தம்பி.." மனதார சொன்னார் அவர்..
"அருண்.. அங்கே பாரு.. உன் அண்ணன் சாப்பிட மறந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறதை.. போய் சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டு வா.." என்றாள் அகல்யா..
"புரிஞ்சுதான் பேசறிங்களா அம்மா..?"
அருண்குமார் தாயை அதட்டியதில் பூங்குழலிக்கு ஆச்சரியம் வந்தது..
"அண்ணனே.. அண்ணி கூடப் பேச இப்பத்தான் சான்ஸ் கிடைச்சிருக்குன்னு உட்கார்ந்திருக்கிறார்.. இப்பப் போய் அங்களை டிஸ்டர்ப் பண்ணச் சொல்றீங்களே.. அவங்களுக்கு பசியெடுத்தா சாப்பிட வரமாட்டாங்களா..?"
"இப்ப நீதான் புரியாம பேசற அருண்.. விடிந்தால் கல்யாணம்.."
"அதுக்கு..?"
"உன் அண்ணன் ரெஸ்ட் எடுக்க வேணாமா..?"
"கல்யாணம்ன்னு வந்துட்டாலே யாராலேயும் ரெஸ்ட் எடுக்க முடியாது.. இன்னைக்கான ரெஸ்டை இனிமே வரப் போகிற நாள்களில எடுத்துக்குவாரு.. நீங்க கவலைப் பட்டுக்காதீங்க.."
"சாப்பிட லேட்டாகுதேடா.."
"ஊஹீம்.. நீங்க மணி பார்க்கலைன்னு நினைக்கிறேன்.. அதிக நேரமாகலை.. இன்னும் நிறைய நேரமிருக்கு.. அண்ணன் பேசி முடிக்கட்டும்.. தானாய் அவர் எழுந்து வருகிற வரைக்கும் யாரும் அவரை நெருங்கக் கூடாது.."
தாயின் கட்டளையை மறுத்துவிட்டுப் போன அருண் குமாரின் செய்கையில் அவன் மீது சோமசுந்தரத்திற்கும், பூங்குழலிக்கும் மதிப்பு வந்தது.. அவர்களின் முன்னிலையில் மகன் அவளின் கட்டளையை நிராகரித்து விட்டதில் தோல்வியுணர்வை உணர்ந்தாள் அகல்யா..
அதை உணராதவர்கள் போல இயல்பாக அவளுடன் பூங்குழலியும், சோமசுந்தரமும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
அடுத்து.. அர்ச்சனா அகல்யாவின் பார்வைக்கு தட்டுப்பட..
"அர்ச்சனா.." என்று அழைத்தாள் அவள்..
அவளும் பக்கத்தில் வந்தாள்.. பூங்குழலியிடம் சொந்தமான சிரிப்புடன்..
"சாப்பிட்டுட்டீங்களா ஆண்ட்டி..?" என்று வினவினாள்..
"அவங்க எங்கே சாப்பிட்டாங்க..? எல்லாம்.. உன் அண்ணனும் அண்ணியும் செய்கிற வேலை.. அவங்க ரெண்டு பேராலே நாங்க மூன்று பேரும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கிறோம்.."
அகல்யா அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டதில் பூங்குழலிக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவள் கலவரத்துடன் சோமசுந்தரத்தைப் பார்க்க.. அவர் பொறுமையாக இருக்கச் சொல்லி சைகை செய்தார்..
அகல்யாவின் நாடகத்தை பார்க்கப் பார்க்க.. அவருக்குள் கோபம் பெருகியது.. இது போன்ற சாகசங்களை அவருக்குப் பிடிக்காது.. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக பேச வேண்டும் என்ற கொள்கையை உடையர் அவர்.. நரேந்திரனும், ஊர்மிளாவும் மெதுவாக பேசிவிட்டு வரட்டும்.. அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரும் பூங்குழலியும் சொல்லிக் கொண்டிருக்க.. அவர்கள் பேசிக் கொண்டிருப்பதினால் தான் அவரும், பூங்குழலியும் சாப்பிடாமல் உட்கார்ந்திருக் கிறார்கள் என்று கொஞ்சம் கூடத் தயக்க மில்லாமல் அகல்யா சொல்லிக் கொண்டிருக்கிறாளே.. அந்த வார்த்தைகளையும்.. அவரையும், பூங்குழலியையும் வைத்துக் கொண்டு சொன்ன அசாத்திய துணிச்சலில் பூங்குழலியின் முகம் வெளுத்து விட்டது..
"அண்ணனும்.. அண்ணியும் செய்கிற வேலையா..? அப்படி அவங்க என்ன வேலையைச் செய்தாங்கம்மா..?"
"அங்கே பாரு.."
அகல்யா சுட்டிக் காட்டிய திசையில் திரும்பிப் பர்த்தவள்..
"பேசிக்கிட்டுத்தானே இருக்காங்க..?" என்றாள் குழப்பமாக..
"சாப்பிடாம பேசிக்கிட்டு இருக்காங்கடி.." என்றாள் அகல்யா..
"ஸோ வாட்..? அவங்களுக்கு வயிறு பசிச்சா சாப்பிடப் போறாங்க.. அதுக்காக நீங்க மூணுபேரும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கீங்களா..? குட் ஜோக்..! முதலில் ஒன்னைத் தெரிஞ்சுக்கங்க.. அண்ணனும் அண்ணியும் மறைவாகப் போய் பேசலாம்ன்னு நினைக்காம நம்ம கண்ணுக்கு முன்னாலே உட்கார்ந்து பேசறதே பெரிய விசயம்.. அது அவங்க நமக்குக் கொடுக்கிற மரியாதை.. அதைக் கண்காணிச்சுக்கிட்டு உட்காராம பெரியவங்க நீங்கள்ளாம் கண்டும் காணாததைப் போல விலகிப் போகிறதுதான் நாகரிகம்.. அதுதான் நீங்க அவங்களுக்குக் கொடுக்கிற மரியாதை.. வெறும் பேச்சுக்குக்கூட இங்கே 'தடா'வா..? ஏன் அங்கிள்.. நீங்களுமா இப்படி..? அம்மாவுக்குத்தான் இங்கிதம் தெரியலை.. நீங்களாவது எடுத்துச் சொல்லக் கூடாதா..? அதை விட்டுட்டு இவங்ககூட கூட்டணி போட்டுக்கிட்டு இருக்கீங்க.."
அர்ச்சனாவின் பேச்சில் பூங்குழலிக்கு போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது.. பரவாயில்லையே என்று அவள் நினைத்துக் கொண்டாள்..
"நான் எங்கேம்மா உங்கம்மாவோடு கூட்டணி போட்டேன்..?" என்று சோமசுந்தரம் சொன்னதும் அகல்யாவின் முகம் கருத்து விட்டது..
பெண்ணைப் பெற்றவர்.. சம்பந்தகார அம்மாவைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று அவள் கணக்குப் போட்டிருந்தாள்.. அவள் பொய்யே சொன்னாலும்.. அதை மறுத்துப் பேசுவது மரியாதையாக இருக்காது என்ற எண்ணத்தில் அவர் மௌனமாக இருந்து விடுவார் என்பது அவளின் எண்ணம்.. பல தருணங்களில் இதுபோன்ற சாதுர்யமான கணக்குள் சரியாக குறிபார்த்து அடித்து வென்றிருப்பதை அவள் கண்கூடாக கண்டிருக்கிறாள்.. வெல்வதற்காக அவள் கையாளும் யுக்திகளில்
இதுவும் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.. எப்படி இல்லையென்று சொல்வது என்று வாய் மூடி மௌனமாக பழியை ஏற்றுக்கொள்ளும் வாயில்லாப் பூச்சிகளின் மத்தியிலே நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று நேருக்கு நேராக கேள்வி கேட்டும் மனிதரை முதல் முறையாக அப்போதுதான் அவள் சந்தித்திருக்கிறாள்..
"நீ என்ன சொன்னயோ.. அதைத்தான் நாங்களும் உங்க அம்மாகிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தோம்.. அவங்க மெதுவா சாப்பிட வரட்டும்.. தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு சொன்னேன்.. உங்க அம்மாதான் கேட்கலை.. அவங்க பேசிக்கிட்டு இருக்கிறதைக் கூட நாங்க கவனிக்கலைம்மா.. எங்க பக்கத்து சொந்தக் காரங்களை சாப்பிட விட்டு.. படுக்க வசதி பண்ணிக் கொடுத்துட்டு இப்பத்தான் இங்கே வர்றோம்.. உங்க அம்மாதான் எங்களைக் கூப்பிட்டு அவங்க பேசிக்கிட்டு இருக்கிறதைக் காண்பிச்சாங்க.."
சோமசுந்தரம் சொல்லச் சொல்ல.. அர்ச்சனா.. தலையில் அடித்துக் கொண்டு அகல்யாவை பார்த்தாள்..
"ஏம்மா.. நீங்க மாறவே மாட்டிங்களா..?" கேள்வி கேட்டபடி அவள் நகர்ந்து விட..
'என்ன ஒரு தைரியம்..!' என்று சோமசுந்தரத்தை நினைத்து மனதுக்குள் வெகுண்டாள் அகல்யா..
'கொஞ்சமாவது மாப்பிள்ளையோட அம்மாங்கிற பயமிருக்கா..? இந்த ஆளே இப்படின்னா.. இவரு பெத்து வளர்த்து வைச்சிருக்கிற மகள் எப்படியிருப்பாளோ.. கல்யாணத்துக்கு முன்னாடியே நரேந்திரனை வசியம் பண்ணி வைச்சிட்டா.. இனிமே.. காலமெல்லாம் அவ காலடியிலதான் நாங்க இருந்தாகனுமா..?'
அவளை அதிக நேரத்துக்கு சோதிக்காமல் நரேந்திரனும்.. ஊர்மிளாவும் எழுந்து விட்டார்கள்.. சிறு தலையசைவுடன் நரேந்திரன் போய் விட்டான்.. அகல்யாவைக் கவனிக்காமல் ஊர்மிளாவிடம் தலையை அசைத்து விட்டு அவன் போய் விட்டதில் தனது அதிகாரம் பறிபோவதை உணர்ந்தாள் அகல்யா..
அவளை கண்டு கொள்ளாமல் ஊர்மிளாவை நோக்கி சோமசுந்தரமும்.. பூங்குழலியும் விரைந்து விட்டதில் தான் தனிமைப் பட்டு விட்டதைப் போன்ற சினம் அவளுக்குள் உருவானது..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -38
அழகான ராட்சசியே -38
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy