அழகான ராட்சசியே -37

37 ஓடும் நதியினிலும்.. உன் தடத்தை பதித்துச் செல்லும் அழகான ராட்சசி நீ... அகல்யா.. அமைதி தவழும் முகத்துடன்.. சாந்த சொரூபியாக ப...


37
ஓடும் நதியினிலும்..
உன் தடத்தை பதித்துச் செல்லும்
அழகான ராட்சசி நீ...


அகல்யா.. அமைதி தவழும் முகத்துடன்.. சாந்த சொரூபியாக பூங்குழலியிடம் கை குவித்தாள்..
"வாங்க.. சம்பந்தியா ஆகப் போகிறோம்.. இப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடிஞ்சிருக்கு.. நரேன் பண்ணின வேலையில நாம ஒருத்தரையொருத்தர் பார்த்துக்க முடியாமலே போயிருச்சு.."
பாந்தமாக பேசியவள்.. அகலக் கரையிட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் ஒளிர்ந்தாள்.. உடலில் பூட்டியிருந்த வைர நகைகளின் ஒளிர்வில் அவளின் சாத்வீகம் கூடியிருப்பதைப் போல தோன்றியது..
"நாம நினைச்ச அளவுக்கு மாப்பிள்ளையோட சித்தி கடுமையானவங்க மாதிரி தெரியல.." பூங்குழலி சோமசுந்தரத்தின் காதைக் கடித்தாள்..
"நான் எங்கேடி நினைச்சேன்.. நீ நினைச்சிருப்ப.." அவர் கடுப்படித்தார்..
அளவான ஒப்பனையுடன்.. அதீதமான அலங்கார மில்லாமல்.. பட்டும் வைரமுமாக தனிக்களையுடன் இருந்த அகல்யாவிடம் பூங்குழலிக்கு மரியாதை ஏற்பட்டது..
"வணக்கம் சம்பந்தி.." அவள் பதிலுக்கு கை குவித்தாள்..
"சம்பந்தியா..? அண்ணின்னு கூப்பிடுங்க.. என்னதான் உயரத்தில இருந்தாலும்.. நமக்குன்னு சில பழக்க வழக்கங்கள் இருக்கு.. அதை மாத்த முடியுமா..?" மென்மையாக முறுவலித்தாள் அகல்யா..
"அதைச் சொல்லுங்க.." பூங்குழலியின் முகம் மலர்ந்து விட்டது..
அடுத்து "அண்ணா.." என்று அகல்யா கிளை கொண்டாட.. அவளுடைய அண்ணன் அந்த அறைக்குள் இருக்கிறாரா என்று சுற்று முற்றும் தேடிப் பார்த்தார் சோமசுந்தரம்..
அவரைத் தவிர வேறு எந்த ஆணும் அந்த அறைக்குள் இல்லை.. நரேந்திரன் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அழைத்த 'ஆண்ட்டி' யை பின் பற்றியிருந்தான்..
'வேற யாரை இந்தம்மா அண்ணான்னு பாசமலர் சாவித்திரியைப் போல அழைச்சு வைக்குது..?' அவர் யோசிக்க ஆரம்பிக்க..
"உங்களைத்தன் அண்ணா.." என்று அவரைத்தான் அண்ணனாக வரித்திருப்பதை உறுதி படுத்தினாள் அகல்யா..
'அண்ணனா..?'
சோமசுந்தரத்திற்கு அந்த விளிப்பை பிடிக்க வில்லை.. 'தம்பி' என்ற உறவு முறையைப் பற்றி அகல்யாவுக்குத் தெரியாதா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டார்.. அகல்யாவுக்கு அண்ணனாகும் வயதா அவர் வயது என்று மனதுக்குள் கோபம் கொப்புளிக்க..
"சொல்லுங்கம்மா.." என்று அகல்யாவை தனக்கு அம்மாவாக்கி மனதை அமைதிப் படுத்திக் கொண்டார் சோமசுந்தரம்..
"நரேனுக்குத்தான் ஊர்மிளான்னு அந்த கடவுள் எழுதி வைச்சிருக்கார்.."
"அப்படியா..? உங்களுக்கு போஸ்ட் பண்ணினாரா..?"
இப்படிக் கேட்டு விட்டு சோமசுந்தரம் கையில் ரகசியமான பூங்குழலியின் கிள்ளலை வாங்கினார்.. அது வலித்த வலியில் பூங்குழலியின் கோபத்தின் பரிணாமம் வெளிப்பட்டது..
'அடிப்பாவி..! இப்படி பிராண்டி எடுத்துட்டாளே.. போன ஜென்மத்தில இவ பூனையாய் பிறந்திருப்பாளோ..'
பூங்குழலியின் முகம் அவள் புலிப்பரம்பரையில் பிறந்திருப்பாள் என்று அறிவித்தது..
'பெண்ணுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளையோட சித்திகிட்ட பேசற லட்சணமா இது..? கொஞ்சமாவது பெண்ணைப் பெற்றவரைப் போல பேசி வைக்கிறாரா..? இந்தம்மா கேலி செய்கிறார்ன்னு கோவிச்சுக்கிட்டா என்ன பண்றது..?'
நல்ல வேளையாக அகல்யா அப்படியெல்லாம் கோபப்படவில்லை.. மாறாக மலர்ந்து சிரித்தாள்..
"அண்ணனுக்கு ஹியுமர் சென்ஸ் அதிகம் போல.."
அவள் சொன்ன வார்த்தைகளை ஆமோதித்த பூங்குழலிக்கு..
"இல்லையா அண்ணி..?" என்று அகல்யா தன்னை சின்னவாளாக்கிக் கொண்டதை ஆமோதிக்க முடிய வில்லை.. புன்னகையுடன் தலையசைத்து சமாளித்தாள்..
ஊர்மிளா குளித்து உடைமாற்றி ஒப்பனைக்கு அமர்ந்தாள்.. நிச்சய தாம்பூலத்திற்கான விலையுயர்ந்த பட்டுச்சேலை அவளுக்காக காத்திருந்தது.. அதை உடுத்தி மண்டபத்திற்கு அவள் அழைத்து வரப்பட்ட போது வைர அட்டிகையை மேடையில் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தாள் அகல்யா..
வைரத்தில் கலவரமான ஊர்மிளாவின் முகபாவனையில் அகல்யாவுக்குள் சிந்தனை எழுந்தது..
'வைரத்தை விரும்பாத பெண்ணும் இருப்பாளா..?'
ஊர்மிளா அப்படியிருந்ததில் அவளது குணாதி சியத்தைப் பற்றிய முதல் மதீப்பிடு அகல்யாவின் மனதில் விழுந்தது..
"இவதான் உன் நாத்தனார் ஊர்மிளா.."
தனது மகளை ஊர்மிளாவுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்.. கண்களில் லேசான அச்சரேகை இழையோட அர்ச்சனாவைப் பார்த்த ஊர்மிளாவின் மருண்ட பார்வையில் அவளைப்பற்றிய அடுத்த மதிப்பீடு அகல்யாவின் மனதில் பதிவானது..
'பயந்தவளா இருக்கிறா..'
மேடையில் நலங்கு முடிந்து எழுந்த ஊர்மிளா பூங்குழலியின் அறிவுரையின்படி அகல்யாவின் பாதம் தொட்டு வணங்கியபோது அவளைப் பற்றிய மூன்றாவது மதிப்பீடு அகல்யாவின் மனதுக்குள் வந்தது..
'மாமியார்ங்கிற பவரை மதிக்கிறா...'
அகல்யாவுக்கு அவையே போதுமானவையாக இருந்தன.. ஊர்மிளாவை நரேந்திரனின் வாழ்விலிருந்து அகற்ற அவள் அதிகமாகச் சிரமப்பட வேண்டியிருக்காது என்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள்..
அலட்சியமாக.. நரேந்திரனின் ஒட்டு மொத்த காதலுக்கும் நானே சொந்தக்காரி என்ற இறுமாப்புடன்.. அகல்யாவை ஒரு பொருட்டாக நினைக்காத ஆணவக் காரியாக ஊர்மிளா இருந்திருந்தால் அகல்யா அவளைக் கண்டு பயந்திருப்பாளோ என்னவோ..
அப்படியில்லாமல்.. நேர்மையாக.. கணவனின் உறவினர்களை மதிக்கத் தெரிந்தவளாக.. உறவுகளுக்கு மரியாதை கொடுப்பவளாக ஊர்மிளா இருந்ததில் அகல்யாவுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது..
அதுநாள்வரை அவள் பார்த்திருந்த நரேந்திரனின் முகத்தில் சிரிப்பிருக்காது.. கடுமையும்.. கண்டிப்பும் மட்டுமே அங்கே தாண்டவமாடும்.. அவனுக்குச் சிரிக்கத் தெரியுமா என்ற சந்தேகம் அகல்யாவின் மனதில் நிலைத்திருந்தது...
அன்றைய நரேந்திரன் அதை உடைத்தான்.. நொடிக் கொரு முறை அவன் பார்வை ஊர்மிளாவைத் தேடி.. அவள்மீது படிந்து மீண்டது.. கண்கள் சந்தித்த அந்த நொடியில் அவர்களுக்கு இடையே தோன்றிய பார்வையின் பரிமாற்றத்தில் அகல்யாவின் மனதில் அக்கினி எழுந்தது..
நரேந்திரன் ஊர்மிளாவை பார்த்து ரகசியமாக கண் சிமிட்டினான்.. அகல்யாவின் விழிகள் விரிந்தன..
'இவனுக்கு கண் சிமிட்டக்கூடத் தெரியுமா..?'
அவளறிந்த நரேந்திரனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.. அவன் பெண்களை என்னவோ.. 'ரோபா' போல பார்த்தபடி பேசிவிட்டு நகர்கிறவன்..
அவனா ஒரு பெண்ணின் கண்ணசைவில் கண்ணடிக்கிறான்..?
ஊர்மிளாவின் ரோஜா வண்ணக் கன்னங்கள் அவளின் வெட்கத்தைப் பறைசாற்றின.. அகல்யா முகம் மாறாமல் பெருந்தன்மையே வடிவமானவளாக பூங்குழலியிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள்..
நலங்கு முடிந்தவுடன் திருமண மண்டபத்தில் கூட்டம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருந்தது.. ஊர்மிளா மேடையை விட்டு இறங்கினாள்.. நரேந்திரன் அவளருகில் போனான்.. தேங்கி நின்றவளிடம்..
"இப்படி உட்கார்.." என்று ஒரு நாற்காலியைக் காட்டி விட்டு அருகில் அமர்ந்தான்..
தனிமையில் பேசாமல் திருமண மண்டபத்தில் மற்றவர்களின் கண் பார்வையில் அவர்கள் உட்கார்ந்து பேசியதில் விகல்பம் ஏதுமில்லாததால் சோமசுந்தரமும்.. பூங்குழலியும்.. அவர்களின் உறவினர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்ற பந்தி விசாரிப்பில் ஈடுபட்டபடி அங்கிருந்து அகன்று விட்டார்கள்..
அகல்யாவும் அதைப்போல நகர்ந்தாக வேண்டிவர.. அவள் அருண்குமாரிடம் திருமண ஏற்பாடுகளைப் பற்றி ஆழ்ந்து பேசுவதைப் போல பாவனை செய்தபடி தள்ளி அமர்ந்து கொண்டாள்.. அங்கொருவரும்.. இங்கொரு வருமாக இருந்த திருமண மண்டபத்தில் நரேந்திரனும்.. ஊர்மிளாவும்.. ஆளில்லாத சினிமாத் தியேட்டரில் படம் பார்க்க வந்திருப்பதைப் போல உணர்ந்தார்கள்..
அவர்களைச் சுற்றிக் கவிந்திருந்த இதமான அந்த தனிமையை இருவருமே விரும்பி நுகர்ந்து ரசித்தார்கள்..
இது போன்ற தனிமைகள் வெகு அரிதாகத்தான் வாய்க்கும்.. சந்தடிகளின் மத்தியில் கிடைக்கிற மௌனம் ஒரு வரம்..! கூட்டத்தின் மத்தியில் கிடைக்கும் தனிமை அதிலொரு விதம்..
மணப்பெண் அலங்காரத்தில் ஊர்மிளா ஜொலித்தாள்.. அதீத அழகுடன் இருப்பவளின் அழகு கூடியிருந்தததில் நரேந்திரனுக்குள் கிறக்கம் உண்டானது..
"கோபமாடி..?" மென்குரலில் வினவினான்..
"இல்லைன்னு சொல்ல மாட்டேன்.." என்றாள் ஊர்மிளா..
"அதானே.. சோமசுந்தரம் பெற்றிருக்கிற குலக் கொழுந்துக்கு கோபம் வராமல் எப்படியிருக்கும்...?
ஊர்மி... நான் எதைச் சொல்லியிருந்தாலும்.. அதை.. உன் மீதிருக்கும் காதலினாலதான் சொன்னேன்டி.. புரிஞ்சுக்க.."
ஊர்மிளாவுக்கு புரிந்திருந்தது.. அவளின் கன்னம் சிவந்தது... மெதுவாக இமை உயர்த்தி அவனைப் பார்த்தாள்... அந்தப் பார்வை நரேந்திரனின் மனதை கொள்ளை கொண்டது..
அந்த முன்னிரவைத் தாண்டிக் கொண்டிருந்த இரவுப் பொழுதில் தோன்றிய அந்த மயக்கம் அவனை ஆட்டி வைத்தது.. அவன் முன்னால் அமர்ந்திருக்கும் பேரழகி, அவனது காதலி.. அவனுக்கு மனைவியாகப் போகிறவள்.. விடிந்தால் அவனுக்கும்.. அவளுக்கும்.. திருமணம் என்ற நிலையில் அவனுக்கு உரிமையானவளாக.. அதே சமயம்.. அன்னியமானவளாக.. கிடைத்தும், கிடைக்காத நிலையில் அவனை அலைக்கழித்துக் கொண்டிருப்பவள்...
அவளிடம் மின்னிய வசீகரத்தில் நரேந்திரன் ஈர்க்கப் பட்டான்..
முடிவேயில்லாமல் அந்த இரவுப் பொழுது நீண்டு கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.. அதை அவளிடம் சொன்னபோது அவள் வாய் பொத்தி சிரித்தாள்..
உறவினர்களை சாப்பிட விட்டு.. தூங்க அனுப்பி வைத்து விட்டு திரும்பி வந்த சோமசுந்தரமும்.. பூங்குழலியும் மகளின் அந்தச் சிரிப்பைப் பார்த்தார்கள்.. அவர்களின் மனம் நிறைந்தது..
"இந்தச் சிரிப்பு என்னென்னைக்கும் அவகிட்ட நிலைச்சு நிற்கனும்.." பூங்குழலி கண்கள் கசிய தெய்வத்திடம் வேண்டிக் கொண்டாள்..
"நிலைச்சு நிற்கும்டி.. நிலைச்சு நிற்காம எங்கே போயிரப் போகுது..? மனசுக்குப் பிடிச்சவரைக் கட்டிக்கப் போறா.. அவ முகத்தில சிரிப்பு வற்றாமத்தான் இருக்கும்.." உறுதியாக சொன்னார் சோமசுந்தரம்..
"நானும் இதைத்தான் நினைக்கிறேன்.."
நிறைவுடன் சொல்லியபடி திரும்பிய பூங்குழலியின் பார்வையில் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த அகல்யா தென்பட்டாள்..
அவள் அவர்களைப் பார்க்கவில்லை.. அவளின் பார்வை சற்றுத் தொலைவில் அமர்ந்து சன்னக்குரலில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த நரேந்திரனின் மீதும்.. ஊர்மிளாவின் மீதும்.. நிலைத்திருந்தது.. கடுத்த அவளின் முகபாவனையில் பூங்குழலி திடுக்கிட்டாள்.. சற்றுப் பொழுதுக்கு முன்னால் அவர்களிடம் இன்முகமாக பேசி உறவு கொண்டாடிய அகல்யாவின் முகமா இது..?
கண்கள் இடுங்கி.. புருவங்கள் சுளித்திருக்க.. கடுத்த முகபாவத்துடன் அந்த மணமக்களை எதிரிகளைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்த அவளின் பார்வையில் சோமசுந்தரமும் முகம் மாறினார்..
"இந்தம்மா எதுக்காகடி இவங்க சொத்தே கொள்ளை போனதைப்போல இப்படி முறைச்சுக்கிட்டு இருக்காங்க..?"
"தெரியலைங்க..."
"சின்னஞ்சிறுசுக.. தனியாப் பேசனும்னு நினைக்காம.. மத்தவங்க கண்பார்வையிலே உட்கார்ந்து பேசுதுக.. அதை கண்காணிக்கிறதே அநாகரிகம்..
அதில இந்தம்மா முறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.."
"அதுதான் எனக்கும் புரியலைங்க.."
"இப்பத்தான் நம்மகிட்ட வயித்தில இருக்கிற புள்ளை வழுக்கி விழுகிறதைப் போல சிரிச்சு.. சிரிச்சு.. சொந்தம் கொண்டாடிப் போசிக்கிட்டு இருந்தாங்க.. இப்ப என்னடான்னா.. பூலான்தேவி ரேன்ஜூக்கு போஸ் கொடுத்துகிட்டு உட்கார்ந்திருக்காங்க.. இவங்க நம்ம கிட்ட காட்டற முகங்களில எந்த முகம், இவங்க சொந்த முகம் பூங்குழலி..?"
பூங்குழலிக்கு மட்டும் அது தெரிந்திருந்ததா என்ன..? அவளே அகல்யா காட்டிய இரட்டை முகத்தில் கலவரமடைந்திருந்தாள்.. இதில் எந்த முகம்.. அகல்யாவின் சொந்த முகம்..? என்ற சோமசுந்தரத்தின் கேள்விக்கு விடையை எப்படிச் சொல்வாள்..?
"இவங்க குடும்பமே ஒரு தினுசாத்தாண்டி இருக்கு.."
சோமசுந்தரம் சிந்தனையுடன் சொன்னார்.. பூங்குழலியின் மனதில் இருந்த சந்தோசமும்.. நிறைவும் அகன்று.. அங்கே சஞ்சலமும், துயரமும் குடி கொண்டன..
பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் அடையும் சஞ்சலமும், துயரமும்தான் இவை.. இவற்றை உணராத பெண்ணைப் பெற்றவர்கள் இருக்க முடியாது.. திருமணம் முடிவாகும் வரை சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் மாப்பிள்ளையைப் பெற்ற மகராசி.. திருமணம் முடிந்த அடுத்த நொடியில் முகம் மாறிப் போவது ஏன் என்ற மர்மத்தை அதுநாள்வரை அறியாதவர்கள் அவர்கள்.. பெற்று வளர்த்த மகளை முகமூடியின் பின்னால் ஒளிந்திருக்கும் முகம் எத்தகைய முகம் என்பதை அறியாமல் தாரை வார்த்துக் கொடுக்க நேரிடும் கொடுமையில் துயரப் பெருங்கடலில் வீழ்பவர்கள் அவர்கள்..
ஊர்மிளாவின் முகச்சிரிப்பு நிலைத்திருக்க வேண்டுமே என்ற கவலைக்கு ஆளானாள் பூங்குழலி..
"என்னங்க.." அவளின் குரல் நடுங்கியது..
"நீ எதை நினைச்சுப் பயப்படறன்னு எனக்கும் புரியுது பூங்குழலி.. இதில நம்மளாலே எதுவும் செய்ய முடியாது.. ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.." சோமசுந்தரம் பெருமூச்சு விட்டார்..
"அவ நம்ம பொண்ணுங்க.."
"இல்லைன்னு யாரு சொன்னதுடி..? ஆனா.. அவ மேல நமக்கிருக்கிற உரிமையும், அதிகாரமும் இப்ப நரேந்திரனின் தோளுக்கு இடம் மாறியாச்சு.. இனிமே ஊர்மிளாவின் மேலே நம்மளைவிட அவருக்குத்தான் அதிகமான உரிமையிருக்கு.."
"அப்ப.. பெண்ணைப் பெத்தவங்க தள்ளித்தான் நிக்கனுமா..?"
"நிச்சயமாய்.."
"அவளுக்கு ஏதாச்சும்.."
பூங்குழலியால் சொல்ல வந்ததை சொல்ல முடிய வில்லை.. அவளின் தாய்மனம் நடுங்கியது.. முன்பின் தெரியாத நரேந்திரன் வீட்டோடு மாப்பிள்ளையாக அவர்களின் கண்பார்வையில் இருப்பானென்ற நினைவிருந்த போது அவள் மனதில் பயமிருக்கவில்லை.. மகளின் வாழ்வை அருகிலிருந்து பார்க்கப் போகும் நிம்மதி இருந்தது..
இப்போது நிலைமை மாறி.. மகளை முன்பின் தெரியாத மனிதர்களின் மத்தியில் விட்டுவிட்டு.. திருமணம் என்ற பெயரில் பிரிந்து செல்ல வேண்டிய நிலை வந்தபோது அவள் மனதில் அச்சம் சூழ்ந்தது..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -37
அழகான ராட்சசியே -37
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-37.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-37.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy