எண்ணியிருந்தது ஈடேற -87

87 டைட்டானிக் படத்தில் கப்பலின் மேல் தளத்தில் நீண்டிருக்கும் விளம்பில் கதாநாயகன் கதாநாயகியை முன்னிருத்தி அவளது தோள்களைப் பற்றி பின்ன...

87


டைட்டானிக் படத்தில் கப்பலின் மேல் தளத்தில் நீண்டிருக்கும் விளம்பில் கதாநாயகன் கதாநாயகியை முன்னிருத்தி அவளது தோள்களைப் பற்றி பின்னே நிற்பதைப் போல ரவிச்சந்திரன் அவன் மார்போடு நந்தினியை சாய்த்து நிறுத்தி.. அவளது உச்சந் தலையில் முகவாயைப் பதித்து.. அவள் தோள்களைப் பற்றியபடி முன்னால் தெரிந்த காட்சியைச் சுட்டிக் காட்டினான்..
நந்தினியால் அவளது கண்களை நம்பவே முடியவில்லை..
'நானா இந்த அழகிய இடத்தில் நிற்கிறேன்..?' என்று மெய் சிலிர்த்துப் போனாள்..
சுற்றிலும் பசுமை நிரம்பிய காடுகளுக்கு நடுவே.. கீழ் நோக்கி ஓடிவரும் பால் போன்ற அருவியைக் காணக் காணத் தெவிட்டவே இல்லை அவளுக்கு.. இன்னும், இன்னும் என்று ஆவலாகப் பார்த்தாள்.. பார்த்துக் கொண்டிருக்கும் போதே பனி மூட்டம் கவிந்தது... விலகும் வரை காத்திருக்க வேண்டும் என்று அமைதிப் படுத்தினான் ரவிச்சந்திரன்..
ரம்யமான குளிர் நிரம்பிய சில்லென்ற சீதோஷ்ணம்.. காதில் காதல்மொழி பேசுவதைப் போல செவி மடலைத் தழுவிச் செல்லும் பணிக்காற்று.. கண்ணுக்கெட்டிய தூரம்  வரை அருவிகள்.. மலைகளின் முகடுகள் தோறும் முத்தமிட்டபடி காதல் செய்யும் மேகக் கூட்டங்கள்.. மலை முகடுகளை உரசிப் பார்க்க வரும் பனிப்புகை.. அவ்வபோது பொழியும் சாரல்.. பாலாறு போலப் பொங்கி வழியும் மீன் முட்டி அருவிகள்..
அதை வெறும் அருவி நீர் என்று சொல்லி விட முடியவில்லை.. நுரை பொங்கும் பாலாறுகள்தான் அவை.. பச்சை வண்ணக் கம்பளமாய் அடர்ந்திருந்த காடுகளை வெள்ளி வாளைக் கொண்டு கிழித்து வெளியேறிக் கொட்டும் பாலருவிகள்தான் மீன்முட்டி அருவிகள்.. மலையுச்சியிலிருந்து தலை கீழாகப் பாய்வதைப் போலக் கீழ்நோக்கி விழுந்து பின்னர் அவை பாலருவிகளாக ஓடிவரும் காட்சி நந்தினியின் மனதை கொள்ளை கொண்டது..
அவ்விடத்தை விட்டு அகல மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள் நந்தினி.. பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்த ரவிச்சந்திரனின் தோள்மீது இயல்பாக தலை சாய்த்துக் கொண்டாள்.. ரவிச்சந்திரனின் கரம் அவளுடைய தோளைச் சுற்றி வளைத்துக் கொண்டது.. வெகு நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த நந்தினியின் தோள் தட்டிப் போகவேண்டும் என்பதை உணர்த்தினான் ரவிச்சந்திரன்.. கிளம்ப மனமில்லாமல் கிளம்பிய நந்தினி..
"தேங்க்ஸ்.." என்றாள்..
கோழிக் கோடிலும் மனம் நெகிழ.. குரல் தழைய இதையேதான் சொன்னாள் என்ற நினைவில் மெல்லச் சிரித்த ரவிச்சந்திரன்..
"எனக்குத் தேங்க்ஸ் சொல்கிற அளவுக்குப் பெரிய மனுஷியாகிட்டியா..?" என்று அவளது கன்னம் தட்டினான்..
புகை போல கவிந்த பனிமூட்டத்தில் காலடித்தடம் கூடத் தெரியவில்லை.. அணிந்திருந்த ஸ்வெட்டர், போர்த்தியிருந்த சால்வையென்ற அனைத்து குளிர் காக்கும் காரணிகளையும் மீறி குளிர் நந்தினியின் உடலை ஊசி முனைகளைத் துளைத்தது.. வழி தெரியாததினால் ரவிச்சந்திரன் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்து அழைத்துச் சென்று கொண்டிருந்ததால் அவனது உடலின் வெப்பம் அவள் உடலுக்கு இடம் மாறி குளிருக்கான கதகதப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது..
வழுக்குப் பாறைமீது கவனமாக கால் ஊன்றி நடக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் திரும்பத் திரும்ப சொன்னபோது..
"நான் என்ன பப்பாவா..? இந்த வழியா வந்தவளுக்கு அதே போலத் திரும்பத் தெரியாதா..?" என்று நொடித்தாள் நந்தினி..
"ஓ.." என்றதைத் தவிர வேறு ஏதும் சொல்லாமல் ரவிச்சந்திரன் முன்னே நடந்தான்..
நந்தினி என்னவோ கவனமாக கால்களை ஊன்றி ரவிச்சந்திரனின் கையைப் பிடித்தபடிதான் வழுக்குப் பாறைகளைக் கடந்தாள்.. கடைசிப் பாறையில் அவள் கால் பதித்தபோது வழுக்குப் பாறை சதி செய்து அவைள வழுக்கி விழ வைத்து விட்டது.. சரிந்து ரவிச்சந்திரனின் மீது சாய்ந்து விழுந்தவளை அவன் தாங்கிப் பிடித்து இழுத்துக் கொள்ள, இருவரும் புல்தரையின் மீது ஒருவர் மீது ஒருவராக விழுந்து வைத்தார்கள்.. ரவிச்சந்திரனின் உடல்மீது பரவிப் படர்ந்து விழுந்திருந்த நந்தினியை ரவிச்சந்திரனின் கரங்கள் இறுக்கி வளைத்திருந்தன..
விழுந்த வேகத்தின் அதிர்ச்சியில் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமலே பயத்தில் கண்களை இறுக்கமாக மூடி அவனைக் கட்டியனைத்து அவன் முகத்தோடு முகம் பதிய விழுந்திருந்தாள் நந்தினி.. மெத்தையில் படுத்திருப்பதைப் போல அவன்மீது படுத்திருந்த வளுக்குள் ஏதோ ஒன்று நிகழ கண் விழித்துப் பார்த்தாள்.. அவனது உதட்டோடு உதடு ஒட்ட முகத்தைப் பதித்திருந்தவள் அவனது ஆழமான முத்தத்தை உணர்ந்தாள்.. விடுபடத்தான் நினைத்தாள்.. விலகத்தான் யத்தனித்தாள்.. முடியவில்லை..
அவனுடைய உடலோடு நந்தினியின் உடல் ஒட்டி உராய்ந்ததில் தீப்பிடித்ததைப் போல ரவிச்சந்திரனின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.. அவளை இறுக்கமாகக் கவ்வி விட்டான்.. விலக யத்தனித்தவளை விலக விடாமல் முரட்டுத்தனமாக இறுக்கிக் கொண்டான்.. போராட வேண்டும்.. விடுபடவேண்டும் என்று நந்தினியின் மனம் கூவியது.. ஆனால், அவளுடைய உடல் இளகி அவனுடன் ஒன்றிக் கொண்டது.. நந்தினி அதிர்ச்சி அடைந்தாள்.. அவன் மீதான அவளது மயக்கத்தை அவள் நன்கு அறிவாள்... இருந்தபோதும் அந்த மயக்கத்தை உடைத்தெரியும் சுய கட்டுப்பாடு தன்னிடம் இருக்கிறது என்று நம்பியிருந்தாள்.. மயக்கம் உடைபடாமல் நம்பிக்கை உடைபட்டதில் அவளுக்குள் பயம் உண்டானது.. ரவிச்சந்திரனை எதிர்க்க முடியாமல் அவனிடம் தன்னை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவளுள் கவிந்தது..
ரவிச்சந்திரனின் அணைப்பு மேலும் இறுகியது.. முரட்டுத்தனமாக அவளது உதடுகளைக் கவ்வியிருந்த நிலையில் அவளது முகத்தோடு முகத்தைப் பதித்துப் புரட்டினான்.. நந்தினி மேலும் பலவீனமடைந்தாள்.. ஆளற்ற தனிமை.. உடலைத் துளைக்கும் குளிர்காற்று.. சுற்றிலும் கவிந்திருக்கும் பனி மூட்டம்.. பனித்துளிகளின் ஈரத்துடன் கூடிய புல்வெளி.. வெப்பம் நிரம்பிய ரவிச்சந்திரனின் உடல் அளித்த கதகதப்பு என்று அனைத்துக் காரணிகளும் அவளுக்கு எதிராக சதி செய்ததில் அவனை வலுவாக எதிர்க்க முடியாமல் தவித்தாள்..
'தன்னை இழந்து
                மண்ணில் விழுந்த
     இளமை மலரின் மீது..
                கண்ணை மூடிய வண்டு..
     தேக சுகத்தில் கவனம்..
                காட்டு வெளியில் பயணம்..'
எங்கோ, எவரோ பாடுவதைப் போல இருந்தது.. ரவிச்சந்திரனின் தேக வெப்பத்தில் நந்தினியின் தேகம் குளிர் காய்ந்து சுகம் காண ஆரம்பித்ததில் அவள்
அரண்டு போனாள்.. இளமையென்னும் போர்க் களத்தில் ஆயுதங்களற்ற நிராயுதபாணியாய் ரவிச்சந்திரனை எதிர்கொள்ள முடியாமல் துவண்டாள்.. அவனோ முத்தம், தொடுகை, அணைப்பு என்று அனைத்து ஆயுதங்களையும் கொண்டவனாய் அவளைச் சூறையாட ஆரம்பித்தான்.. நந்தினி தொய்ந்து கொண்டிருந்தாள்..
'இளமையென்னும் பூங்காற்று..
                பாடியது ஓர் பாட்டு..
     ஒரு பொழுது ஒர் மயக்கம்..
                சுகம், சுகம், ஒரே சுகம்..
     ஒரே வீணை.. ஒரே ராகம்..'
பாடல் தொடர்ந்தது.. ரவிச்சந்திரனின் தாகம் நிரம்பிய தழுவல்களும் தொடர்ந்தன.. அவளது தேகத்தில் பரவிய அவனது கரங்கள் ஆக்டோபஸைப் போல அவளை அணைத்து ஆக்ரமித்ததில் அவள் மூச்சுத் திணறி உணர்வின் பேரலைகளில் மூழ்க ஆரம்பித்தாள்.. அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் மேனியில் படிந்து உணர்ச்சிகளைத் தூண்டி விட்டன.. ரவிச்சந்திரனின் வெப்ப மூச்சுக் காற்றில் குளிர் காய்ந்தாள் நந்தினி.. சூடான அவனது உடல் அவள்மீது அழுந்தியதில் கதகதப்பான ஓர் வெதுவெதுப்பை உணர்ந்தாள்.. அவன் மீதிருந்து விலக யத்தனித்துப் பெரும் போராட்டத்துக்குப் பின் விலகிச் சரிந்தவளின் மீது அவன் புரண்டு கவிந்து அவள்மீது படர்ந்து கம்பளியாய் அவளைப் போர்த்திச் சரிந்தான்.. அவள்மீது கவிந்தவனை அப்புறப் படுத்தும் திராணியின்றி நந்தினி அசைந்து விலக முயன்றாள்.. பூங்கொடியின் மீது தேக்குமரம் கவிழ்ந்திருந்ததால் விலக முடியுமா..?
நந்தினியின் மனதில் துயர் வந்தது... அவன் வேண்டும் என்று அவளது உடலும் மனமும் ஒருசேரக் கூவியதில் சோர்ந்து போனாள்.. அவள்மீது கவிந்திருந்தவனின் கையணைப்புக்குள் சுருண்டு ஒன்றிக் கொண்டாள்.. அவனது இதழ்களில் திருப்திப் புன்னகை வந்தது.. ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். நந்தினியின் இமைகள் மூடிக் கொண்டன.. மூடிய இமைகளின் மீது அவனது முத்தம் பதிந்தது.. அவளது உடல் முழுவதும் பரவிய அவனது கரங்களின் வெப்பம் அவளது உடலுக்கு இடம் பெயர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தவளின் குளிரை விரட்டியடித்து அவளை ஸ்வாஹா செய்ய முயன்றது..
நந்தினி சலனம் கொண்டாள்.. வேட்கை நிரம்பிய அவனது தழுவல்களும், தொடுகைகளும் அவளுக்குப் புதிதானதாக இருந்தன.. எங்கோ அழைத்துச் சென்றன.. அவன் விரல் பட்ட இடமெல்லாம் தீயாக தகித்தது.. வெப்பமானாள்.. அவனது அணைப்பினில் அடங்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அந்த நிலை நீடிக்க வேண்டுமென்று மனதார விரும்பினாள்.. அவன் பெண்களிடம் பழகியவன்.. தனது தவறை அவளிடம் ஒப்புக் கொண்டிருப்பவன் என்ற விவரங்களெல்லாம் மறந்து விட்டன.. அவளது நினைவினில் நின்றதெல்லாம் ரவிச்சந்திரனின் கவர்ச்சி நிரம்பிய முகம் மட்டும்தான்..
நந்தினியின் மயக்கத்தைத் தனக்குச் சாதகமாக ரவிச்சந்திரன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளது மனதின் ஓர் மூலையில் துடிப்பு எழுந்தது.. அவன் மீதான ஈர்ப்பில் அலை பாய்ந்த அவள் மனது அந்தத் துடிப்பை அலட்சியம் செய்து ரவிச்சந்திரனுடன் ஒன்றிவிட வேகம் காட்டியது.. இமைகளைத் திறந்து அவனைப் பார்த்த பார்வையில் தேடல் இருந்தது.. அது கோடிஸ்வர ராஜ பாரம்பர்யம் கொண்ட இளம் தொழிலதிபனைத் தேடும் தேடலாக இல்லை.. அவளது இளம் மனதை வசியம் செய்து மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் ரவிச்சந்திரன் என்ற வசியக்காரனைத் தேடும் தேடலாக அவளின் தேடல் இருந்தது.. அந்தத் தேடுதலை இனம் கண்டு கொண்ட ரவிச்சந்தினின் கண்கள் மின்னின..
அவர்களது பார்வைகள் பின்னிப் பிணைந்தன.. அவர்களும் பின்னிப் பிணைந்துதான் இருந்தார்கள்.. நொடிக்கு நொடி ரவிச்சந்திரன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தான்.. எங்கோ ஒர்பறவை கூவியது.. நந்தினியின் பெண்மை விழித்துக் கொண்டது.. தன்னுணர்விற்கு வந்தவளாக தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி அவன் மார்பில் கை வைத்துத் தள்ளினாள்.. அவனை அசைக்கக் கூட முடியவில்லை.. அவன் பலமாகச் சிரித்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்..
நந்தினிக்கு அழ வேண்டும் போல இருந்தது.. அவளது முதுகில் அழுத்தம் கொடுத்து அவனது கைகளால் விலக முடியாமல் அவன் மார்பில் புதையுண்டு போனாள்.. அவனது சூடான உதடுகள் அவளது கழுத்தில் முத்தமிட்டன.. முடிவேயில்லாத அந்த சுகத்தில் தன்னை மறந்தாள்.. அவளது மெல்லிய ஆட்சேபக் குரல் தேய்ந்து மறைய ஆரம்பித்தது..
நந்தினியின் எதிர்ப்புக் குரல் தேய்ந்து மறைந்து தொலைந்து கொண்டிருந்தபோது கடைசி முயற்சியாக அவள் அதைச் சொன்னாள்..
"என்னையும் உங்ககூடப் பழகின பெண்களைப் போல மாற்றப் பார்க்கறீங்கள்ல.."
ரவிச்சந்திரனின் உடல் விறைப்பதை நந்தினியால் உணர முடிந்தது.. அவளது முகமெங்கும் முத்தங்களைப் பதித்துக் கொண்டிருந்தவன் விலகி அவள் முகத்தைக் கோபத்துடன் பார்த்துச் சீறினான்..
"என்ன உளருகிற..?"
"உளறல் இல்லை.. இதுதான் உண்மை.. கடைசியில் என்னையும் உங்ககூடப் பழகின பொண்ணுகளைப் போல நினைத்துட்டீங்க.."
"உன் தலை.."
அவன் ஆத்திரத்துடன் அவளைத் தள்ளி விட்டு எழுந்து நின்றான்.. அவன் தள்ளிய வேகத்தில் புரண்டு உருண்ட நந்தினி விசும்பியபடி எழுந்து உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டி அதில் முகம் புதைத்து விம்மினாள்.. அவளைக் கோபத்துடன் பார்த்த ரவிச்சந்திரனின் பார்வையை அவள் எதிர்கொள்ள வில்லை..
"உன் விருப்பமில்லாம உன்னைத் தொடலை நந்தினி.."
"அதை.. அதை.. அதைத்தான் சொல்கிறேன்.. உங்களை எனக்குப் பிடிக்கும் பாஸ்.. அது உங்களுக்கு நல்லாவே தெரியும்.. என்னோட அந்த வீக்னெஸ்ஸை நீங்க யூஸ் பண்ணிக்கப் பார்க்கறீங்க.."
அவனை அவளுக்குப் பிடிக்கும் என்பதை அவள் ஒப்புக் கொண்டதில் அவன் முகம் மென்மையானது.. பொய் சொல்லியறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண்ணின் மனதில் அவன் மீதான உண்மையான பிரியம் இருக்கிறது என்பதில் அவன் மனம் உவகை கொண்டது.. அவள் சொல்லிய வார்த்தைகள் எத்துனை மதிப்பு வாய்ந்தவை என்பதை அவள் அறிவாளா என்று தன் மனதுக்குள் கேட்டுக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"இது அநியாயம்ன்னு உனக்கே தோணலையா நந்தினி..? உன்னோட தனிமையை நான் யூஸ் பண்ணிக்கனும்னு நினைத்திருந்தா எப்பவோ யூஸ் பண்ணியிருப்பேன்.. இந்த நீலிமலைக்கு வந்துதான் யூஸ் பண்ணிக்கனும்னு இல்லை.. என்னைப் பற்றின உன் உயர்ந்த அபிப்ராயத்துக்கு தேங்க்ஸ்.." கடுமையாகச் சொன்னான்..
அவனது கடுமையைத் தாங்க மாட்டாமல் முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்த நந்தினியின் கண்களில் இருந்த தாரை தாரையாக கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது..
"ம்ப்ச்.." என்றான் அவன் அலுப்புடன்..
அதை வெறுப்பாக நினைத்துக் கொண்டவளின் தேம்பல் அதிகமானது..
"எதுக்காக இப்ப அழுது ஆகாத்தியம் பண்ற..? உன்னை நான் தொட்டது தப்புத்தான்.. ஓகே.. மன்னிப்புக் கேட்டுக்கறேன்.. ஐ ஆம் ஸாரி.. போதுமா..? வா.. போகலாம்.."
"நான் என்னவோ குற்றம் செய்துட்டதைப் போல ஹார்ஷாப் பேசறீங்க பாஸ்.."
"நீ குற்றம் செய்யலைம்மா.. செய்யவே இல்லை.. நான்தான் குற்றவாளி.. உன்னை மயக்கப் பார்த்தேன்.. உன்னோட தனிமையை யூஸ் பண்ணிக்கப் பார்த்தேன்.. உன்மேல என்ன குற்றம் சொல்ல முடியும்..?"
"இப்பவும் அதே டோனில்தான் பேசறிங்க.."
"என் குரலே இப்படித்தான்.."
"நான் உங்க எதிரியில்லை பாஸ்.."
"இதைக் கேட்டு நான் சந்தோசப் பட்டுக்கனுமா..? ப்ளீஸ்.. ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்.."
நந்தினி சிரமத்துடன் எழுந்து நிற்க முயன்றாள்.. புல்வெளியில் கையை ஊன்றியவளால் உடனடியாக எழுந்து கொள்ள முடியவில்லை.. ரவிச்சந்திரனின்
விழிகள் இடுங்கின.. கோபப் பார்வையுடன் வந்து அவளது கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி விட்டான்..
"பாஸ்.." கண்கள் கலங்க அவன் மீதான மனத்தாங்கலுக்கு ஆறுதல் தேடி அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள் நந்தினி..
"ஏண்டி படுத்தற..?" ஆற்றாமையுடன் அவளை அரவணைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"ஏண்டின்னா சொன்னீங்க..?" அதிர்ச்சியுடன் கேட்ட நந்தினியை இமைக்காமல் பார்த்து வைத்தான்..
'ஏன் இப்படிப் பார்க்கிறான்..?' நந்தினிக்கு விளங்கவில்லை..

குற்றவாளி அவனா.. இல்லை.. அவளா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -87
எண்ணியிருந்தது ஈடேற -87
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/enniyirunthathueedera87.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/enniyirunthathueedera87.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy