இது நீரோடு செல்கின்ற ஓடம் -79

79 ஓடும் நதியினிலே... உன் கரையை நான் அடைந்தேன்.. "புரியாம பேசாதீங்க.." ஒற்றை வரியில் கணவரை அடக்கினாள் உமா.. சபாபதியி...

79
ஓடும் நதியினிலே...
உன் கரையை நான் அடைந்தேன்..


"புரியாம பேசாதீங்க.."
ஒற்றை வரியில் கணவரை அடக்கினாள் உமா.. சபாபதியில் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. மகள்தான் அவர் பேச்சைக் கேட்க மறுக்கிறாள் என்றால் இப்போது மனைவியும் அவளுடன் கூட்டுச் சேர்ந்து விட்டாளா..?
"நீயாடி பேசற உமா..?" ஆற்ற மாட்டாமல் கேட்டார்.
"இல்ல.. எனக்குள்ள புகுந்திருக்க யட்சிணி பேசுது.." வெடுக்கென்று பதில் சொன்னாள் உமா..
"நிஜத்தில எனக்குக்கூட அப்படித்தாண்டி தோணுது.. உன்னை ஏதோ காத்துக் கருப்பு பிடிச்சிட்டதைப் போல இருக்கு.."
விக்ரமை மனதில் நினைத்தபடி சொன்னார் சபாபதி.. உமாவுக்கும் அவர் மனது போகும் மார்க்கத்தைப் பற்றித் தெள்ளத் தெளிவாகவே தெரியுமென்பதால் அவள் அமைதி காத்தாள்..
"இதுக்குத்தான் அவன் வீட்டு வாசலுக்குப் போக வேணாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை யாரு கேட்கிறாங்க..?" என்று அவர் குறைபட்ட போது உமா காத்த அமைதி கலைந்தது..
"இப்ப அங்கே போனதால என்ன கெட்டுப் போச்சு..?" நேருக்கு நேராக கேள்வி கேட்ட மனைவியை அன்றுதான் புதிதாக மணம் புரிந்தவரைப் போல உற்று அடையாளம் பார்த்து வைத்தார் சபாபதி..
"அறிவோடதான் பேசறியாடி..? நீயும் மிருதுளாவும் ஆட்டோவிலதான கோவிலுக்குப் போனிங்க..? அப்புறம் எப்படி அவன்வீட்டு காரில திரும்பி வந்தீங்க..?"
"இதென்னங்க வம்பாப் போச்சு.. அப்போப் பிடிச்சு.. இந்தக் கேள்வியத்தான் நீங்க திருப்பித் திருப்பிக் கேட்டுக் கிட்டு இருக்கீங்க.. எனக்கும் பதில் சொல்லிச்சொல்லி
வாய் வலிச்சு போச்சு.. கோவிலில சாந்தாவையும்.. பிள்ளைகளையும் பாத்தோம்.. ஒரே வீட்டுக்கு எதுக்காக தனித்தனியாப் போகனுமுன்னு சாந்தா சொன்னா.. எங்களுக்கும் அது சரின்னு பட்டுச்சு.. காரில வந்துட்டோம்.."
"இரு.. இரு.. ஒரே வீடா..? ஏண்டி.. அறிவு கெட்டவளே.. இதத்தானடி நான் ரொம்ப நாளா வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்..? அது அவன் வீடு.. இது நாம குடியிருக்கிற வீடு.. இது ரெண்டும் சேந்து எப்படிடீ ஒரே வீடாகும்..?"
"இல்லிங்கறிங்களா.. அப்போச் சரி.. நான் வேற மாதிரி சொல்றேன்.. ஒரே காம்பவுண்டுக்குள்ள போறதுக்கு எதுக்குத் தனியா ஆட்டோவுக்கு அழுகனும்ன்னு தோணிச்சு.. அதான்.. காரில ஏறி வந்திட்டேன்.. போதுமா..?"
"ஏண்டி.. நான் வேலையே வேணாம்ன்னு விட்டுட்டு வந்திருக்கேன்.. இதில நீ ஆட்டோச் செலவ கணக்குப் பாக்கறியா..?"
"நீங்க வேலையில இருந்திருந்தா கணக்குப் பார்த்திருக்க மாட்டேன்.. அதான் இல்லைன்னு ஆகிப் போச்சே.. அதுக்கப்புறம்.. ஒவ்வொரு செலவுக்கும் கணக்குப் பார்த்துத்தான செலவளிக்க வேண்டியிருக்கு..? ஆமா.. நீங்க காத்துக் கருப்புன்னு சொன்னீங்களே.. இதில காத்து யாரு..? கருப்பு யாரு..? ஏன் கேட்கிறேன்னா.. வீட்டு வாசலில விக்ரம் தம்பியும்.. லிஸியும் நின்னுக்கிட்டு இருந்தாங்க.. அந்த ரெண்டு பேரில யாராரை எந்தப் பேரு வைச்சுச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியாதில்ல.."
அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு உமா கேட்ட கேள்வியில் நம்பியாரைப் போல கைகளைப் பிசைந்தார் சபாபதி.. இப்படி உமா கோ.மு (கோவிலுக்குப் போவதற்கு முன்னால்..) கோ.பி (கோவிலுக்கு போய் வந்த பின்னால்..) என்று மாறுவாள் என்று அவர் கனவா கண்டார்..?
"நீ பேசலைடி.. உன்னை யாரோ பேச வைக்கிறாங்க.."
மிருதுளாவை முறைத்தபடி சொன்னார் சபாபதி.. அவள் மௌனத்தை கேடயமாக பிடித்தவளாய் நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக்கங்க.. எனக்கென்ன வந்தது என்ற ரீதியில் வீட்டுக்குள் போனாள்..
"ம்ஹீம்.. எனக்கு வாய்ச்சதும் சரியில்ல.. பெத்ததும் சரியில்ல.." சபாபதி பொருமினார்..
உமா பேசவில்லை.. பேசினால் அந்தப் பேச்சு அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும் என்பதை அவளது ஆழ்ந்த அறிவு வலியுறுத்தியதால் பேசாமல் சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.. இரவு உணவுக்காக அவள் சப்பாத்திக்கு மாவை பிசைந்து கொண்டிருக்கையில்..
"பாட்டி.." என்றபடி வருண் வீட்டுக்குள் ஓடிவந்தான்..
திரும்பிப் பார்த்த உமாவுக்கு 'திக்'கென்று ஆகிவிட்டது.. சப்பாத்தி மாவை அம்போவென்று போட்டு விட்டு பதட்டத்துடன் சிறுவனை சமையலறைக்குள் இழுத்துக் கொண்டாள்..
"என்னடா வருண்..?"
வாசலில் எட்டிப் பார்த்தபடி அவள் பரபரப்புடன் கேட்டதில் சிறுவன் பேச்சை நிறுத்தினான்.. பெரிய மனிதனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு உமாவின் முகத்தை ஆராய்ந்தான்.. அதில் தெரிந்த பதட்டத்தில் அவன் முகத்தில் சினம் வந்தது.. இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி.. கால்களை விரித்து.. கதாநாயக நடிகனைப் போல நின்று..
"யாருக்கு பயப்படறிங்க பாட்டி..? யாரா இருந்தாலும் என்கிட்டக் காட்டுங்க.. நான் பார்த்துக்கறேன்.." என்று தொடை தட்டினான்..
அவனுடைய அலம்பலில் உமாவுக்கு சிரிப்பு வந்தாலும் சபாபதி வந்து விடுவாரே என்ற கவலையினால் அவளால் சிரிக்க முடியவில்லை.. அவன் எப்படி சபாபதியின் காவலை மீறி உள்ளே வந்தான் என்ற ஆச்சர்யத்தோடு அவன் முன்னால் குனிந்து கிசுகிசுப்பான குரலில்..
"தாத்தா வாசலில் இல்லையாடா..?" என்று வினவினாள்..
அவள் அவன் முன்னால் குனிந்து கிசுகிசுக்கவும் வருணின் முகம் மலர்ந்து விட்டது.. மற்றவர்களுக்குத் தெரியாத ரகசியத்தை பாட்டி அவனுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்ற நினைவுடன் காது கொடுத்துக் கேட்டவனுக்கு.. அவளின் கேள்வியைக் கேட்டதும் இவ்வளவுதானா என்று ஆகிவிட்டது..
"என்ன பாட்டி.. சப்பை மேட்டருக்குப் போயி சீக்ரெட்டப் போல பில்ட் அப் கொடுக்கறிங்க..?" என்று கேட்டே விட்டான்..
"விதி..! வேற என்னத்தைச் சொல்லச் சொல்ற..?" அலுத்துக் கொண்டபடி திரும்பவும் வாசல் பக்கமாக எட்டிப் பார்த்தாள் உமா..
"யாரைத் தேடறிங்க பாட்டி..?" அவளுடன் சேர்ந்து ஒளிந்து மறைந்து தலையை நீட்டியபடி புலன் விசாரணை செய்தான் வருண்..
"இருடா.." கிசுகிசுப்பான குரலில் அவனை அடக்கினாள் உமா..
"திருடன் வந்திருக்கானா..?" விழிகளை உருட்டி வருண் கேட்ட விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது..
"அவன் ஏண்டா இந்த வீட்டுப் பக்கம் வரப் போறான்..? வந்தா உங்க பங்களாப் பக்கம்தான் வருவான்.. உன் தாத்தா வர்றாரான்னு பாக்கறேன்.." என்றாள் உமா..
"அவர் இங்கே இல்லை பாட்டி.. தோட்டத்துப் பக்கமா குச்சியைத் தேடிக்கிட்டு போயிருக்கார்.." புதிர் போட்டான் வருண்..
"குச்சியைத் தேடிப் போனாரா..? அது எதுக்கு..?" உமாவுக்கு தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை.
"என்னை அடிக்கத்தான் பாட்டி.." புதிரை விடுவித்தான் அவன்..
"உன்னை அடிக்கவா..?" உமாவுக்கு கோபம் வந்து விட்டது.
யாராவது சின்னப் பிள்ளையை அடிக்க குச்சியைத் தேட முனைவார்களா..? அதுவும் சபாபதியைப் போன்ற மனிதர் செய்கின்ற காரியமா இது..? அவருக்கு என்னவானது..? மூளை பிசகிப் போனதா..? வரவர அவர் செய்யும் காரியங்கள் எதுவும் சரியானதாக இல்லை..
மனதுக்குள் அவரைத் திட்டித் தீர்த்தபடி வருணைத் தூக்கி சமையலறை மேடையில் உட்கார வைத்தாள் உமா.. விட்ட வேலையைத் தொடர்ந்தபடி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்..
"இப்ப ஏண்டா வந்த..?"
"உங்களைப் பாக்கத்தான் பாட்டி.."
"அதான் கோவிலில் பாத்துக்கிட்டோமில்ல..?"
"கொஞ்ச நேரம்தான பாட்டி.. அதெல்லாம் எனக்குப் பத்தாது.."
"அப்புறம்.. எவ்வளவு நேரம்தான் வேணுமாம்..?"
"எனக்கு நாள் பூராவும் உங்ககூடவே இருக்கனும் பாட்டி.."
சிறுவனின் ஏக்கத்தில் நெழ்ந்து போனாள் உமா.. இந்த அளவுக்கு அவளை ஒரு பாலகன் தேடுகிறானா..? அவள் கண்கள் கலங்கிப் போயின.. வருணை ஆதுரத்துடன் அணைத்து அவள் முடிகோதிய போது...
"இருப்படா இருப்ப.. இந்த சபாபதி இளிச்சவாயனா இருந்தா நீ இருப்ப..." என்று உறுமியபடி சமையலறைக்குள் வந்தார் சபாபதி..
அவர் கண்களில் வெறியும்.. கையில் குச்சியும் இருந்ததில் உமா வருணை தூக்கிக் கொண்டாள்..
"உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? சின்னப் பையனை அடிக்க குச்சியைத் தேடிப் பிடிச்சு எடுத்துக்கிட்டு வர்றீங்களா..?" உமா சீறினாள்..
"சின்னப் பையனாடி இவன்..? என்னவோ காதலன்.. காதலிகிட்ட பேசற லட்சணத்தில பேசி வைக்கிறான்.. இவனுக்கு நாள் பூராவும் உன் பின்னாலேயே சுத்தனுமா..?" சபாபதி குச்சியை ஓங்கினார்..
உமா ஒரு கையில் வருணை அணைத்துப் பிடித்தபடி மறுகையில் குச்சியைப் பிடுங்கித் தூர எறிந்தாள்.. முதன் முதலாக அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பில் திகைத்துப் போனார் சபாபதி..
"உமா.."
"பேசாதீங்க.. என் பேரைச் சொல்லிக்கூட கூப்பிடாதீங்க.. சொல்லிட்டேன்.. உங்களுக்கு அந்தத் தகுதியில்லை.."
"நான் என்னடி செஞ்சேன்..?"
"பச்சைப் புள்ளயப் பாத்து என்ன பேச்சு பேசறிங்க..? மனுசனா நீங்க..? கடவுள் மேல பக்தனுக்கு அளவுக்கு அதிகமான அன்பு வந்தா அதையும் காதல்ன்னு சொல்லுவீங்களா..?"
"சும்மா.. ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டி.."
"பேச்சுக்குன்னு எதை வேணும்னாலும் பேசிருவீங்களா..? எதுக்கும் ஒரு அளவிருக்கு.. நீங்க அளவுக்கு மேலே பேசறிங்க.."
உமாவின் சிவந்த முகத்தின் தகதகப்பில் பல்லைக் கடித்தார் சபாபதி.. அவருடைய மனைவியையே அவருக்கு எதிராக திருப்பி விட்டு.. ஒன்றும் தெரியாத பேபியைப் போல உமாவின் தோள்களில் வாகாக சாய்ந்திருந்த சிறுவனை முறைத்தார்..
'இவனால்தான் எல்லாமும்..'
"முதல்ல.. அவனக் கீழே இறக்கி விடு.." கடுகடுத்தார்..
"ஏன்..?" உமா வருணை கீழே இறக்கி விடவில்லை.. வருணும் இறங்கவில்லை.. அவன் கிடைத்தது வாய்ப் பென்று அவனுக்கு பிரியமான பாட்டியின் தோளில் கை போட்டு.. அவள் கையில் சவாரி செய்து கொண்டிருந்தான்..
"ஏண்டி.. இவன் என்ன கைப்புள்ளயா..?" சபாபதி திட்டினார்..
"பின்னே.. நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கப் போற பிள்ளையா..?" உமாவும் விட்டுக் கொடுக்கவில்லை.
"வேணாம் உமா.. தேவையில்லாம இந்தப் பையன கொஞ்சாதே.. அது நல்லதுக்கில்ல.."
"யாரோட நல்லதுக்கில்ல..?"
உமாவின் கேள்வியில் அவள் முகத்தையே உறுத்துப் பார்த்தார் சபாபதி.. அவர் வேறு.. அவள் வேறு என்ற வகையில் தொனித்த அவள் பதிலில் அவரது மனம் காயப்பட்டது.. உமாவின் மனம் வேறுவகையில் காயப் பட்டிருந்தது.. தன்னுடைய விருப்பத்தை சபாபதி குடும்பத்தினர் மீது திணிக்க முயல்வதாக அவள் நினைத்தாள்.. அதனால் துன்பப் படும் பெற்ற மகளைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.. வீட்டுக்கு வந்து போகும் குழந்தைகளின் மனம் புண்ணாகும் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை.. கூட வாழும் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அவர் கேட்டுக் கொள்ளவில்லை..
அவர் பெற்ற மகளின் நன்மைக்காக என்று ஒன்றை நினைத்தார்.. அதுதான் நடக்க வேண்டும் என்ற முனைப்பில் விக்ரமின் வாயாலேயே அவன் காதலைத் துறக்க வைக்க வேண்டுமென்ற வாக்கைக் கொடுக்க வைத்தார்.. மிருதுளாவிடம் நாடகமாடி அவளை விக்ரமிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல திட்டம் போட்டார்.. வீட்டுக்கு வந்து போய் கொண்டிருந்த குழந்தைகளை விரட்டியடித்தார்.. அவர் சொல்வதைத்தான் செய்ய வேண்டுமென்ற கடமையில் மனைவியைப் பிணைத்தார்.. அவர் சொல் பேச்சைக் கேட்காத மகளிடம் அதை ஏற்க வைக்க.. மனைவிக்கு கட்டளையிட்டார்..
ஒரு நொடிகூட அவர் மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கவில்லை.. அதை அறிய முனையவில்லை.. உமாவும் அவரைப் போலவே யோசிக்க வேண்டும்.. அவர் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும்.. சுயமாக யோசித்து.. சுயமாக எதையும் செய்து விடக்கூடாது என்பதில் அவர் வெகு கவனமாக இருந்தார்..
அவரைச் சார்ந்திருப்பதிலும்.. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பதிலும்.. உமாவுக்கும் மிருதுளாவுக்கும் அது நாள்வரை யாதொரு ஆட்சேபணையும் இருந்ததில்லை.. அவர்கள் வீட்டுப் பறவைகள்தான்.. அதைத்தாண்டி வெளியுலகில் சிறகடிக்க அவர்கள் விரும்பியதில்லை.. மிருதுளா படிப்பிற்காகவும்.. வேலைக்காகவும் வெளியில் போய் வந்தாலும் அதுவும் வரையறுக்கப்பட்ட சுதந்திரம் தான்.. அவளுக்கும் அதிகப்படியான சுதந்திரம் தேவைப்பட வில்லை.. அவள் உலகம் பெற்றவர்கள்தான் என்று வாழ்ந்தவரை எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது..
எப்போது மிருதுளாவின் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்துக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் விக்ரம் பிரவேசித்தானோ அன்றே எல்லாம் மாறிப் போய் விட்டது..
எதையும் தாய்.. தந்தையரிடமிருநது மறைத்தறியாத மிருதுளா தன் காதலை மறைத்தாள்..
அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. கள்ளத்தனம் நிறைந்ததுதான் காதல்.. அந்தக் கள்ளத்தனத்தைக் கண்டறிந்த போது சபாபதியின் மனம் இறுகிவிட்டது..
அவர் பெற்ற மகள்... பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலிக்கிறாள் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. மிருதுளாவா இப்படிச் செய்தாள் என்ற அதிர்ச்சியை விட அதைச் செய்ய வைத்த விக்ரமின் மீது வந்த கோபம் அதிகமாக இருந்து வைத்ததில் சபாபதி விக்ரமைச் சார்ந்த அனைத்தையும் வெறுத்தார்.. அவன் நிழலை விட்டு நீங்கி.. சென்னைக்கு மகளை அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று துடியாய் துடித்தார்..
விக்ரமின் நிழலில் இருப்பதையே விரும்பாதவர் அவன் பெற்ற பிள்ளைகளை மட்டும் எப்படி விரும்புவார்..?
"உமா.. முதல்ல அந்தப் பையன அவன் வீட்டுக்கு அனுப்பு.. நாம பேச வேண்டியதை அப்புறமா பேசிக்கலாம்.." என்றார் சபாபதி..
"அவன் போக நேரமாகும்.." உமா வருணை சமையலறை மேடையில் உட்கார வைத்தாள்..
"வேணாம் உமா.. சொன்னாக் கேளு.. இப்ப இவன் இங்கேயிருக்க வேண்டிய அவசியமென்ன..?" சபாபதி சப்தம் போட்டார்...
"ஊம்..? இவன் என் கையால சமைச்சதை சாப்பிட்டு நாளாச்சு.. சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருக்கிற புள்ளய விரட்டி விட்டு சமைச்சுச் சாப்பிட என்னால முடியாது.. அதனால.. இவன் சாப்பிட்டுட்டுத்தான் போவான்.." உமா அடுப்பைப் பற்ற வைத்தாள்..
மிக பிரயாசைப்பட்டு வெட்டி விட்டிருந்த பாசக் கயிறு அங்கே யாராலும் அறுத்தெறிய முடியாத இரும்புச் சங்கிலியாக மாறிவிட்டதில் சபாபதி கொதித்துப் போனார்.. அவர் கொதிப்பை அதிகப்படுத்துவதைப் போல.. சின்னப் பாதங்களை வீட்டுக்குள் வைத்து.. தலையை மட்டும் நீட்டி வைசாலி எட்டிப் பார்த்தாள்..
"மிஸ்.."
அவளின் மெல்லிய குரலுக்குத்தான் எத்தனை சக்தி..? சபாபதியிடம் முகம் கொடுத்துப் பேசாமல் அவளுடைய அறைக்குள் படுத்திருந்த மிருதுளா சாவி கொடுத்த பொம்மை போல வாசலுக்கு பாய்ந்தாள்..
"வைசாலிக்குட்டி.."
அவளின் நீட்டிய கைகளுக்குள் புகுந்து கொண்ட வைசாலியைத் தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்ட மிருதுளாவின் தாய்மை கலந்த பாசத்தில் தீக்பிரமையாகி நின்று விட்டார் சபாபதி..
'இப்பத்தானே இதுக எல்லாம் கூடிச் சேர்ந்து கும்மாளமா கோவிலுக்கு போயிட்டு வந்துச்சுக.. அதுக்குள்ள வருசக் கணக்கா பிரிஞ்சிருக்கிறதைப் போல அதுகளும் ஓடி வருதுக.. இதுகளும் தூக்கிக் கொஞ்சுக...'
அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.. அவரால் முடிந்ததாக ஹாலின் சோபாவில் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்து.. எல்லோரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்தார்.. வருண் அவருடைய முறைப்பை சட்டையே பண்ணவில்லை.. வைசாலி பயந்தாள்.. ஆனால் மிருதுளா அவள் காதுகளில் என்ன சொன்னாளோ.. அந்தக் குழந்தை கவலையுடன் திரும்பி சபாபதியை இரக்கப் பார்வை பார்த்து வைத்தது..
'இந்த விருட்டானெல்லாம் என்னை இரக்கப் பார்வை பார்க்குது..'
சபாபதியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -79
இது நீரோடு செல்கின்ற ஓடம் -79
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam79.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam79.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy