இது நீரோடு செல்கின்ற ஓடம் -66

66 காதல் என்பது கானல் நீரல்ல... வற்றாத சுனை... "பங்களாவுக்கு விருந்தாளி வந்திருக்காம்..." உமாதான் அந்தச் செய்தியைச் சொ...

66
காதல் என்பது கானல் நீரல்ல...
வற்றாத சுனை...

"பங்களாவுக்கு விருந்தாளி வந்திருக்காம்..."
உமாதான் அந்தச் செய்தியைச் சொன்னாள்.. அவளுக்கு தகவல் உபயம் தந்தது சாந்தாவாம்..
"பாரின்காரப் பொண்ணாம்.. பேர் கூட லிஸியாம்.."
சட்டென நிமிர்ந்த மிருதுளாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து விட்டு..
"என்னடி..?" என்றாள் உமா..
"ஒன்னுமில்லைம்மா.. பிள்ளைக காலையிலேயும் டியூசனுக்கு வரலையா..?"
"அதைக் கேட்கப் போய்த்தானே இந்த வெள்ளைக் காரியைப் பத்திப் பேச்சு வந்தது.."
"நீங்க எதைக் கேட்டிங்க..?"
"வருணும் வைசாலியும் படிக்க வரலையா சாந்தான்னேன்.. இல்லேம்மா.. பிள்ளைக ரெண்டும் எங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்க லிசியம்மாகிட்டப் பாடம் படிக்கிறாங்கன்னு சொன்னா..."
'இது என்ன புதுக்கதை..?'
அதையே தான் உமாவும் கேட்டாள்...
"அவங்களாத்தானே பிள்ளைகளை அனுப்பி வைச்சாங்க..? தோட்டத்து வீட்டிலேயே டீச்சர் குடியிருக்கும் போது வெளியே டியூசனுக்கு அனுப்ப முடியுமான்னு கேள்வி கேட்டாங்க.. நாமளும் போனாப் போகுது.. தாயில்லாத பிள்ளைகளாச்சேன்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம்.. இப்ப என்னடான்னா சொல்லாம கொள்ளாம பிள்ளைகளை நிப்பாட்டிட்டாங்களே..."
மிருதுளாவுக்கு 'சுரீர்' என மனதில் வலி வந்தது...
"அவங்க நிப்பாட்டிட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா..?" கோபப் பட்டாள்..
"நடக்கிறதைப் பாத்தா எனக்கென்னவோ அவங்க பிள்ளைகளை படிக்க அனுப்பாம நிப்பாட்டிட்டாங்கன்னு தான் தோணுது மிருதுளா.." உமா யோசனையுடன் சொன்னாள்..
"இருக்காதும்மா.." மிருதுளா உறுதியாக மறுத்தாள்..
விக்ரமாவது குழந்தைகளை மிருதுளாவிடமிருந்து பிரிப்பதாவது.. அவர்கள் அவளின் குழந்தைகள் அல்லவா..
"இல்லைன்னா சந்தோசம்தான்.." என்றாள் உமா..
மேற்கொண்டு விவாதத்தை வளர்க்காமல் அவள் சமையல் வேலைகளில் ஈடுபட்டு விட.. மிருதுளா சோர்வுடன் பள்ளிக்குக் கிளம்பினாள்.. லிசியின் திடிர் வருகையில் அவள் மனதில் லேசான சஞ்சலம் வந்து நின்றது...
"என் அம்மா.. டாடிக்கு அடுத்தபடி நான் அதிகமாப் பேசிப் பழகின ஒரே ஆள் லிசி மட்டும்தான்..."
விக்ரமின் குரல் அவள் காதுகளில் ஒலித்தது...
அந்த லிஸி வந்திருக்கிறாள்.. அவள் வருவதைப் பற்றியோ.. வந்ததைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட விக்ரம் மிருதுளாவிடம் சொல்லவில்லை..
'அவன் அதை மட்டுமா சொல்லவில்லை..?'
அவள் மனதில் பாறாங்கல் ஏறியது..
முதல்நாள் சபாபதியிடம் அவன் என்ன பேசினான் என்பதையும் சொல்லவில்லை.. ஏன் குழந்தைகளை படிக்க அனுப்பவில்லை என்பதையும் சொல்லவில்லை.. எதனால் அவளின் தொடர்ச்சியான போன் கால்களைத் தவிர்க்கிறான் என்பதைப் பற்றியும் சொல்லவில்லை..
எதைத்தான் அவன் சொன்னான்..?
அவன் அப்படி இருக்கிற ஆளில்லை.. என்று அவன் மீதான மிருதுளாவின் காதலை உணர்ந்தானோ.. அன்றிலிருந்து அவன் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அவளிடம் ஒப்பிக்க ஆரம்பித்து விட்டான்..
"இன்னைக்கு கம்பெனியில ஒரே டென்சன்டி.."
"என்ன..?"
"அனுப்ப வேண்டிய சரக்குகளில பேக்கிங் சரியில்லாம ஐஸெல்லாம் தண்ணியா வழிஞ்சிருக்கு.."
"கடவுளே..! என்ன செஞ்சீங்க..?"
"கொடவுன் செக்யூரிட்டியை வேலையை விட்டுத் தூக்கினேன்.."
மிருதுளா திகைப்பாள்.. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு எப்படி விழுந்தது என்று திருதிருப்பாள்.. ஐஸ் உருகி வழிந்தோடினால் பொருள் களைத்தானே முதலில் பாதுகாக்க வேண்டும்..? அதை விட்டுவிட்டு கொடவுனைக் காவல் காக்கும் செக்யூரிட்டியை ஏன் வேலையை விட்டுத் தூக்க வேண்டும்..?
"முட்டாளாடி நீ.. பேக்கிங் பண்ணின சரக்கு என்னன்னு நினைச்ச..? மீன்..! அதை பேக் பண்றப்ப எவ்வளவு கவனமாக பேக் பண்ணுவாங்கன்னு உனக்குத் தெரியுமா..? பேக்கிங் செக்சனில பேக்கிங் முடிஞ்ச பின்னால சரியாப் பேக்கிங் ஆகியிருக்கான்னு பத்து தடவைக்கும் மேலே மெஷின் செக்கிங் நடக்கும்.. அத்தனையும் கடந்து கொடவுனுக்கு போற பேக்கிங்.. டெலிவரி ஆகி.. வாங்கினவங்க சீல் உடைச்சுப் பிரிக்கிற வரைக்கும் பத்திரமாய் இருக்கும்.. முதல் முறையாய் அந்த பேக்கிங் என் கொடவுனிலேயே உடைஞ்சிருக்கு.. எப்படி..?"
"எப்படி..?"
"பேக்கிங்கை யாராவது வேணும்னே உடைச்சிருக்கனும்.. அந்த வேலையை கொடவுனின் செக்யூரிட்டியை வைச்சுத்தான் செஞ்சு முடிச்சிருக்கனும்.. மத்தவங்க என் கொடவுன் பக்கம் வர முடியாது.."
"ஓ..."
இதில் இத்தனை இருக்கிறதா என்று பிரமிப்பாள் மிருதுளா.. அவன் பகிர்ந்து கொள்ளும் விவரங்களின் வழியாகத் தெரியும் அவனின் இன்னொரு முகம் ஒரு போராட்டக்காரனாக அவனை உருவகிக்கும்..
எந்த நொடியும் கத்தியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டிய போராட்டக்காரன்.. வாளேந்தி யுத்தம் புரியும் யுத்தகளமாக தொழில்துறை எப்போது ஆகிப் போனது..?
"உங்களுக்கு நஷ்டமாகிருச்சா..?"
"இதுவும் ஒரு வகையான லாபம்தான் மிருதுளா..?"
"எப்படி..?"
"துரோகியை இனம் கண்டிருக்கேனில்ல.. பண வரவை விட இது எவ்வளவு பெரிய விசயம்..?"
"ஓ..."
இப்படித்தான் பல 'எப்படி' என்ற வினாக்களை அவளைக் கேட்க வைத்து.. புதுப்புதுப் பரிணாமங்களில் விடையளித்து அவளை '' வென்று வாய் குவித்து பிரமிக்க வைப்பான்..
அந்த விக்ரம் எங்கே போனான்..?
மிருதுளாவுக்குள் ஏக்கம் கலந்த திகில் பரவியது.. கைப்பொருள் நழுவுவதைப் போல அவள் உணர்ந்தாள்.. அவள் மனதை பீடித்துக் கொண்டிருக்கும் பயத்தை விரட்டும் வழிவகை தெரியாமல் அவள் திகைத்தாள்..
"மிருதுளா.. ஸ்கூலுக்கு நேரமாகலையா..?"
உமா குரல் கொடுத்ததில் திக்பிரமை கலைந்தவளாக குளிக்க ஓடினாள் மிருதுளா.. அவள் உடைமாற்றி டைனிங் டேபிளுக்கு வந்தபோது.. தோட்டத்துப் பக்கமாக நடந்து விட்டு வருகிறேன் என்று போயிருந்த சபாபதி வந்து சேர்ந்தார்...
"யாருடி அந்த வெள்ளைக்காரப் பொண்ணு.. ஹாலிவுட் ஹீரோயினைப் போல அம்புட்டு அழகா இருக்கா..?" உமாவிடம் ஆர்வமாக விசாரித்தார்...
'லிஸி அத்தனை அழகா..?' மிருதுளா சஞ்சலப் பட்டாள்..
"நானும் அதைத்தான் நினைச்சேன்..."
மிருதுளாவுக்கான டிபன் டப்பாவைக் கொண்டு வந்தபடி சொன்னாள் உமா..
"நீங்க எப்ப அவளைப் பாத்தீங்க..?"
"நீ குளிக்கப் போனப்ப பாத்தேண்டி.."
"அதுக்காக பங்களாப் பக்கம் போனீங்களா..?"
"ஊஹீம்.. கறிவேப்பிலை பறிக்கறதுக்காக தோட்டத்துப் பக்கம் போனேன்.. அங்கே வருண் அப்பாகூட கை கோர்த்துக்கிட்டு எதையோ பேசிக்கிட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு.. ஏங்க.. அவங்க பழகிக்கறதைப் பார்த்தா சாதாரணப் பழக்கம் மாதிரி எனக்குத் தெரியலையே.."
"நீ வேற.. கை கோர்த்துக்கிட்டதைப் பார்த்துட்டே இப்படிச் சொல்றயே.. நான் பார்த்தப்ப அவங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க.. நீ அதைப் பார்த்திருந்தா என்னென்ன சொல்லுவியோ.."
"நீங்க எதுக்காக அந்தக் கண்றாவியைப் பார்த்தீங்க.. இதுக்காகத்தான் தோட்டத்தில வாக்கிங் போறேன்னு தவ்விக்கிட்டுப் போனீங்களா..?"
"அடிப்பாவி..! நீயே பெயர்கட்டி விட்டிருவ போல இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் தோட்டத்தில கட்டிப் பிடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருப்பாங்கன்னு எனக்கு எப்படிடீ தெரியும்..? அந்த வெள்ளைக்காரப் பொண்ணு பங்களாவுக்கு வந்திருக்கிற விவரமே எனக்குத் தெரியாதே.. ஏன் மிருதுளா உனக்குத் தெரியுமா..?"
"தோட்டத்திலயே குடியிருக்கிற உங்களுக்குத் தெரியாது.. வீட்டுக்குள்ள அடைஞ்சிருக்கிற அவளுக்கு மட்டும் விவரம் தெரிஞ்சிருமா..? அவளுக்கும் தெரியாது.. நான்தான் சொன்னேன்.."
"ஏண்டி.. அப்பாவுக்கும் மகளுக்கும் தெரியாத விவரம் உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது..?"
"சாந்தா சொன்னா.."
"அதானே பார்த்தேன்.. சரி.. சரி.. டிபன் ரெடியா..? கம்பெனிக்கு நேரமாச்சு.."
"உங்க முதலாளியே தோட்டத்தில் வெள்ளைக்காரப் பொண்ணுகூட உலாத்திக்கிட்டு இருக்காரு.. நீங்க என்னத்துக்காக இவ்வளவு அவசரப்படறிங்க..?"
"அவர் முதலாளி.. வெள்ளைக்காரப் பெண்ணைக் கொஞ்சலாம்..."
"என்னது..? ? ?"
"லேட்டா வரலாம்ன்னு சொன்னேன்டி..."
"இல்லையே.. இந்தப் பொறாமை அதுக்கானது மாதிரி எனக்குத் தெரியலையே..."
"சேச்சே.. என்ன பேச்சுன்னு பேசற உமா..? அந்தப் பொண்ணு எனக்கு மகளைப் போல.. மிருதுளா வேற.. அந்தப் பொண்ணு வேறயா..? போய் வேலையைப் பாருடி.."
மிருதுளா அதிர்ந்து நிமிர்ந்தாள்.. அப்படியா..? அவளும் லிசியும் ஒன்றா..? இனி மிருதுளாவின் இடத்தில் லிஸி இருக்கப் போகிறாளா..?
'நீயாக எதையாவது நினைத்துக்காதே..' என்றது அவள் மனது..
பள்ளிக்குக் கிளம்பிய போது பங்களாவை ஓர் முறை திரும்பிப் பார்த்தாள்.. பால்கனியில் பெண் உருவம் தெரிந்தது..
'அவதான் லிஸியா.. அழகாத்தான் இருக்கா...'
மிருதுளா மனம் சோர்ந்தாள்.. வாடிய முகத்துடன் பாடம் எடுத்தவளைப் பார்த்த மாணவ மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. அவர்களுக்கு மிருதுளாவை மிகவும் பிடிக்கும்.. ஆசிரியை போல விலகி நிற்காமல் அவர்களில் ஒருத்தியாக தோழமையுடன் கலந்து பழகும் மிருதுளாவின் மீது அவளுடைய மாணவ மாணவிகளுக்கு அபிமானம் இருந்தது.. அவர்களுடைய அபிமானத்துக்குரிய மிருதுளாவின் முகம் வாடியிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
"உங்களுக்கு உடம்பு சரியில்லையா மேம்..?"
ஒரு மாணவி வாய் விட்டே கேட்டு விட்டாள்.. அது ஒட்டு மொத்த வகுப்பின் குரல் என்பதைப் போல வகுப்பே அவளைப் பார்த்து வைத்ததில் நெகிழ்ந்து போனாள் மிருதுளா..
"ஜஸ்ட் ஹெட் ஏக்.. சரியாகிரும்.. நீங்க பாடத்தைக் கவனிங்க.."
அவள் பாடத்தில் கவனத்தைத் திருப்பி விட்டாள்.. மாணவ மாணவிகள் அவளையே பார்த்தபடி.. அரை மனதாக நோட்ஸ் எடுத்துக் கொண்டார்கள்.. அடுத்த பீரியடில் அவளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய அவசிய மில்லாத ஓய்வு நேரமாக இருந்ததில் ஓர்வித நிம்மதி மனதில் படற அவள் ஓய்வறையை நோக்கி நடந்தாள்..
"மிருதுளாம்மா..."
நடேசன் ஏறக்குறைய ஓடி வந்தான்...
"ஏன் இப்படி ஓடி வர்றீங்க..?" என்றாள் மிருதுளா..
"உங்களுக்கு விசயமே தெரியாதா..?" நடேசன் பரபரத்தான்..
மிருதுளாவிற்கு இருந்த மனநிலையில் நடேசனின் பரபரப்பு அவளைத் துளிக்கூடப் பாதிக்கவில்லை.. சோர்வாக அவனைப் பார்த்தபடி..
"என்ன விசயம்..?" என்றாள்..
"நம்ம ஸ்கூலுக்கு வெள்ளைக்காரப் பொண்ணு ஒருத்தங்க வந்திருக்காங்க.."
நடேசனின் உற்சாகத்தில் இங்கேயும் லிஸி வந்து விட்டாளா என்று மிருதுளாவுக்கு ஆயாசமாக இருந்தது..
"இதுக்கா இப்படி பரபரக்கிறிங்க..?" அவள் முகம் சுளித்தாள்..
தூத்துக்குடியில் இருந்து கொண்டு வெள்ளைக்காரப் பெண்ணைப் பார்த்து நடேசன் இத்தனை பரவசப் படலாமா..?
"என்னம்மா இப்புடி ஒத்த வார்த்தயில கேட்டுப் புட்டீங்க.. சும்மா மைதாமாவைப் பிசைஞ்சு வச்சாப்புல அப்படி ஒரு கலரு.. என்ன ஒரு ஸ்டைலு.. இன்னைக்குப் பூராவும் பாத்துக்கிட்டே இருக்கலாம்போல ஒரு அழகு.. என்னத்தச் சொல்ல..?"
"ஒன்னையும் சொல்ல வேணாம்.. ஏன் நடேசன்.. இதைச் சொல்ல நான்தான் உங்களுக்குக் கிடைச்சேனா..?"
"உங்களத்தானம்மா கரெஸ் சார் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாரு..?"
"என்னது..?"
விக்ரம் அவளை வரச் சொல்லியிருக்கிறானா..? மிருதுளாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. அவள் பரவசமானாள்.. ஒரு யுகத்திற்கும் உண்டான மகிழ்வு அவள் மனதில் புகுந்தது.. அதுவரை அவன் அவளை அலட்சியப் படுத்தியதை அவள் மறந்து விட்டாள்.. அவளுடைய அப்பாவை அவன் மனம் புண்படப் பேசினான் என்று அவர் சொன்னதையும் மறந்து விட்டாள்..
'விக்ரம் கூப்பிட்டிருக்கான்..'
இது ஒன்று மட்டுமே அவள் நினைவில் இருந்தது..
"அவர் ரூமிலதான இருக்கார்..?" வேகமாக நடந்தபடி கேட்டாள்..
"ஆமாம்மா.. சாரும் அந்த வெள்ளைக்காரப் பொண்ணும் சாரோட ரூமிலதான் இருக்கிறாங்க..."
"என்னது..?"
மிருதுளா நின்று விட்டாள்.. நடேசன் அவளை வினோதமாகப் பார்த்தான்..
"இன்னைக்கு நீங்க சரியா இல்லேம்மா.. ஏதோ நினைப்பில இருக்கீங்க.. இல்லைன்னா.. நீங்களாவது.. இத்தனை 'என்னது..' போடறதாவது..? கேள்வி கேட்கிற ஆளாம்மா நீங்க..?"
"நடேசன்.. சார்கூட அவரோட பிரண்டும் இருக்கிறாங்களா..?"
குரல் நடுங்க கேட்ட மிருதுளாவின் மனதில் என்ன தான் இருக்கிறது என்று நடேசனால் அனுமானிக்க முடிய வில்லை.. அவன் பாவம்.. எளிய குணமுடையவன்.. ஆழ்ந்த சிந்தனைகளுக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம்.. வாழ்க்கை இழுக்கும் போக்கில் ஓடியபடி இலகுவாக வாழும் குணமுடையவன்.. அவனுக்குப் பிடித்தமான மிருதுளா டீச்சர் எதற்காக கானகத்தில் தொலைந்து விட்டக் குழந்தையைப் போல மனம் பதைக்க விழிக்கிறாள் என்று அவனுக்குப் புரியத்தான் இல்லை...
"ஆமாம்மா.. அந்தப் பொண்ணும் சார் கூடத்தான் இருக்காங்க.. அதனாலதான் நானும் உங்ககூட வர்றேன்.. இந்தச் சாக்கில அந்தப் பொண்ண இன்னொரு தபா பார்த்துப் புடலாமில்ல.."
'அப்ப விக்ரம் தனியா இல்லை...'
மிருதுளாவின் பரவசம் காற்றுப் போன பலூன் போல சுருங்கி விட்டது..
விக்ரமுடன் அவள் தனிமையில் பேசப் போவ தில்லை.. ஏன் இப்படிச் செய்தாய் என்று அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் சிந்தப் போவதில்லை.. ஒருநாள் பிரிவில் ஒரு யுகம் மொத்தத்திற்குமான பிரிவை உணர்த்தி விட்டாயே என்று அவனின் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்துக கேள்வி கேட்கப் போவதில்லை.. பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்க நினைக்கிறாயா என்ற தாய்மையின் கோபத்தைக் காட்டப் போவதில்லை..
எதற்கும் வழியில்லாமல்.. அவனுடனான அற்புதத் தனிமையை அவளுக்குக் கொடுக்காமல் அவன்.. ஒரு வெள்ளைக்காரப் பேரழகியுடன் அவளைச் சந்திக்கக் காத்திருக்கிறான்..
'இந்தச் சந்திப்பு எதற்காக..?'
கசந்த மனத்துடன் அவனைச் சந்திக்கப் போனாள் மிருதுளா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -66
இது நீரோடு செல்கின்ற ஓடம் -66
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam66.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam66.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy