இது நீரோடு செல்கின்ற ஓடம் -64

64 இனிதான ஓர் வாழ்வை... எனதன்பே..! நாம் வாழ்வோமா... ? "ஏண்டி இவ்வளவு டென்சனா இருக்க.. ?" நகம் கடித்துத் துப்பிக் கொண்ட...

64
இனிதான ஓர் வாழ்வை...
எனதன்பே..! நாம் வாழ்வோமா...?

"ஏண்டி இவ்வளவு டென்சனா இருக்க..?"
நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த மிருதுளாவை அதட்டினாள் சங்கீதா..
"அதான் டென்சனா இருக்கேன்னு தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக கேள்வி கேட்டு டென்சனை அதிகப் படுத்தற..?"
"நகத்தைக் கடிச்சுத் துப்பிட்டா பிராப்ளம் சால்வ் ஆகிருமா..? நீ ஒரு டீச்சர் மிருதுளா.."
"டீச்சருக்கு டென்சன் வராதா..?"
"வரும்.. அதுக்காக நகத்தைக் கடிச்சுத் துப்பக் கூடாது.. ஏண்டி.. குட் மேனரிசத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நாமளே பேட் மேனரிசத்தை ஃபாலோ பண்ணலாமா..?"
மிருதுளா நகம் கடிப்பதை நிறுத்தி விட்டாள்.. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்..
"ஆயிரத்தைந்தாவது தடவை.." என்றாள் சங்கீதா..
"எதைச் சொல்ற..?"
"நீ உன் ரிஸ்ட் வாட்ச்சில் மணி பார்க்கிறதைச் சொல்றேன்.. உனக்காக பூமி வேகமாய் சுத்திருமா..?"
"கீதா.."
"சொல்லு.."
"அப்பா ஓகே சொல்லிருவாரில்ல.."
"இரு.. அவர் மனசுக்குள்ள புகுந்து பார்த்திட்டு வந்து சொல்றேன்.."
சங்கீதாவின் கேலியால் மிருதுளாவின் முகம் வாடிவிட்டது.. சுணங்கிப் போன தோழியின் முகத்தை பரிதாபத்துடன் பார்த்தாள் சங்கீதா.. மிருதுளாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது..
'இந்தக் காதல்தான் ஒரு மனுஷியை எப்படியெல்லாம் பாடாய் படுத்துது..'
அவள் நினைத்து முடிக்கவில்லை.. அந்த ஓய்வறைக்குள் நுழைந்தான் குணசீலன்.. அவன் கையில் 'காதலாகி.. கசிந்துருகி..' என்ற நாவல் இருந்தது..
'நல்லவேளை மனசுக்குள்ள நினைச்சுத் தொலைச்சேன்.. வாய் விட்டுச் சொல்லியிருந்தா என் கதி என்னத்துக்கு ஆகிறது..?'
தோளைக் குலுக்கி சிலிர்த்துப் போனாள் சங்கீதா.. அவளது செய்கையை வினோதமாகப் பார்த்த குணசீலனை அதைவிட வினோதமாக பார்த்து வைத்தாள்.. குணசீலன் ஜகா வாங்கி விட்டான்.. பார்வையை வேறு கோணத்தில் திருப்பிக் கொண்டான்.. அங்கே.. நகத்தை வாய்க்கு அருகில் கொண்டு போவதும்.. சங்கீதாவின் அரட்டல் நினைவுக்கு வந்ததினால் விலக்கிக் கொள்வதுமான அனிச்சை செயலில் ஈடுபட்டிருந்த மிருதுளாவைப் பார்த்தான்.. விந்தையான பார்வை விசித்திரமாக மாறியது..
"என்ன செய்கிறிங்க டீச்சர்..?" வியப்புடன் கேட்டு விட்டான்..
"கிழிஞ்சது போ.. இவனே உன்னக் கவனிச்சு விளக்கம் கேட்டுட்டான்.. இவன்கிட்ட விளக்கம் சொல்லு.."
சன்னக்குரலில் மிருதுளாவைத் திட்டித் தீர்த்தாள் சங்கீதா..
மிருதுளாவா விளக்கம் சொல்வாள்..? நீயெல்லாம் கேள்வி கேட்க வந்து விட்டாயா என்ற ரீதியில் அவனை உதட்டைச் சுழித்து ஒரு பார்வைதான் பார்த்து வைத்தாள்.. குணசீலனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவன் என்ன கேட்கக் கூடாத கேள்வியையா கேட்டு விட்டான்..? என்ன செய்கறிங்க என்ற கேள்விக்கு இப்படியொரு பார்வையா..?
'வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்..'
காலம் கடந்த ஞானோதயத்துடன் கையிலிருந்த நாவலைப் பிரித்து அதைப் படிப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டான்..
"குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையாம்மா.. ஹா.. ஹா.."
ஆர்ப்பரிப்பாய் சிரித்தபடி அங்கு வந்தான் நடேசன்.. இவனுக்கு அதற்குள் விவரம் தெரிந்து விட்டதா என்று குணசீலனுக்கு தலை வேதனையாக இருந்தது..
'இப்பத்தானே உள்ளே வர்றான்.. அதுக்குள்ள இந்த திமிர் பிடிச்சதுக பார்த்த பார்வையைப் பத்தி எப்படித் தெரிஞ்சுக்கிட்டான்..?'
நடேசனுக்கு ஞானக்கண் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்கு மேலிட்டது.. இருக்காது என்று அவன் மனம் அடித்துச் சொன்னது..
'இவன் கண்ணே நொள்ளக் கண்ணு.. இதில ஞானக் கண் வந்துட்டாலும்...'
இப்படியாகத்தானே கேள்வியும் நானே.. பதிலும் நானே.. என்று குணசீலன் மனதுக்குள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்க.. நடேசன் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்..
"சார்.. நீங்க இங்கயா உக்காந்திருக்கீங்க.. உங்கள எங்கேல்லாம் தேடறது..?"
'இவன் எதுக்கு என்னைத் தேடினான்..?'
யோசனை வந்த போதும் அந்த ஓய்வறையில் அவனைக் குப்புற விழ வைத்த மிருதுளாவின் அலட்சியப் பார்வையை நடேசன் எந்த ஞானத் திருஷ்டியைக் கொண்டும் கண்டு விடவில்லை என்பதில் அவனுக்குள் பெருத்த நிம்மதி ஏற்பட்டது...
'மனுசன்.. ஒரு செகண்டில கலங்கடிச்சிட்டானே..' ஆசுவாசமடைந்த குணசீலன் கெத்தாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான்..
அவன் ஆசிரியராம்.. நடேசன் பியுனாம்.. அந்த தோரணையுடன்..
"என்னை எதுக்குப்பா தேடின..?" என்று கெத்தாக வினவினான்..
"ஏன் சார்.. கிளாஸ் எடுக்க வேண்டிய நேரத்தில கிளாஸ் எடுக்காம இங்க வந்து உக்காந்திட்டா தேட மாட்டாங்களா..?" நடேசன் வெடி குண்டைத் தூக்கிப் போட்டான்..
தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்த சங்கீதாவும்.. மிருதுளாவும் குணசீலனைப் பார்த்த பார்வையில் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது..
'இதுக சும்மாவே என்னை ஒரு மார்க்கமா பார்த்து வைக்கும்களே.. இப்ப என்ன செய்யப் போகுதுகளோ..' குணசீலனுக்கு குலை நடுங்கியது...
ஆனால் அவனுக்கு வகுப்பு இருக்கிறதென்று நடேசன் சொல்கிறானே... அது எப்படி..? அவனுக்கு அப்போது ஓய்வு நேரமல்லவா..?
"ஏன்ப்பா.. இது எனக்கு லெசர் பீரியட்.. நீ பாட்டுக்கு எதையாவது பேசிக்கிட்டு இருக்காதே.." குணசீலன் கோபமானான்..
"அப்படின்னு நீங்க சொல்றீங்க.. இல்லேன்னு ஹெச்.எம். சொல்றாரே.." நடேசன் அலட்டிக் கொள்ளவே இல்லை...
"ஹெச்.எம்மா..? அவர் எப்ப இதைச் சொன்னாரு..?"
"எப்பவா..? உங்க கிளாஸ் ரூமில மட்டும் குடுமிப் பிடி சண்டை நடந்திருக்கு.. வழக்குத் தீர்க்க வந்த ஹெச்.எம். என்னைக் கூப்பிட்டு.. இங்கே கிளாஸ் எடுக்காம குணசீலன் எங்கே போய் தொலைச்சாருன்னு சத்தம் போட்டாரு.. தொலைஞ்சு போன உங்களத் தேடிப் புடிக்க நான் வந்தேன்.. கிளம்புங்க.. கிளம்புங்க.."
நடேசன் சொல்லச் சொல்ல சங்கீதாவின் புன்னகை அகலமானதில் குணசீலனின் குருதி அழுத்தம் கொதிகலனானது..
மிருதுளாவோ சிரிப்பை மறைக்க.. விரல்களால் அவள் வாயை நாசுக்காக மூடிக் கொண்டாள்.. குணசீலன் நொந்து போனான்...
"யோவ்.. நானே இது லெசர் பீரியடுங்கிறேன்.. நீ என்னடான்னா கிளம்புங்கிற.. போ.. போய் சொல்லு.. புதன் கிழமையில வர்ற கடைசி பீரியட் குணசீலன் சாருக்கு லெசர் பீரியடாம்ன்னு ஹெச்.எம்கிட்டப் போய் சொல்லு.."
நிமிர்வாக கோபம் காட்டிய குணசீலன் எதற்காக சங்கீதா பொங்கிச் சிரிக்கிறாள் என்ற விவரம் அறியாமல் திகைத்து விட்டான்.. அவன் வந்தபோது கைவிரல் நகத்தை வாய்க்கும்.. மடிக்குமாக மாறிமாறி உயர்த்திய விசித்திர வேலையைச் செய்து கொண்டிருந்த மிருதுளா கூட அதை மறந்து போனவளாக விரல் மறைவில் விழுந்து விழுந்து சிரித்தாள்..
நடேசன் குணசீலனைப் பார்த்த இரக்க பார்வையில் இப்படி பெண்கள் பொங்கிப் பொங்கிச் சிரிக்குமாவிற்கு குணசீலனின் நிலைமை ஆகிவிட்டதே என்ற காருண்யம் பொங்கி வழிந்தது..
குணசீலனால் அந்தப் பெண்களின் சிரிப்பைக் கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது.. ஆனால் நடேசன் பார்த்த பரிதாபப் பார்வையை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
"இன்னும் ஏன் இங்கே நிற்கிற..?"
பெண்களிடம் காட்ட முடியாத கோபத்தை நடேசனிடம் அவன் காட்டினான்.. நடேசனோ பரிதாபம் மேலிட்டவனாக...
"ஏன் சார்.. உடம்பு.. கிடம்பு சரியா இல்லயா..?" என்று நலம் விசாரித்தான்..
யாருடா இவன் என்று ஆகிவிட்டது குணசீலனுக்கு.. அவன் என்ன சொல்கிறான்.. நடேசன் என்ன செய்கிறான்..?
"என்னைப் பாத்தா காய்ச்சல் விழுந்தவனைப் போல தெரியுதா..?"
"நைட்டு தூக்கம் கெட்டிருச்சோ.."
"உனக்கு என்ன ஆச்சு நடேசா..?"
"எனக்கு ஒன்னும் ஆகலை வாத்தியாரே... உங்களுக்குத்தான் ஏதோ ஆகிருச்சு.. ஏன்னா இன்னைக்கு வியாழக்கிழமை.. புதன்கிழமையில்ல.. வியாழக்கிழமையில கடைசி பீரியடில ட்வெல்த் 'சி'க்கு நீங்க கிளாஸ் எடுக்கப் போகனும் வாத்தியாரே.."
"என்னது..?"
குணசீலன் அவசரமாக சுவரில் மாட்டியிருந்த காலண்டரைப் பார்த்தான்.. அன்றைய நாள் நான் வியாழக்கிழமை என்று சிரித்தது..
'கடவுளே..' முகம் வியர்த்துப் போனான்...
இப்படிக் கூட இருப்பானா..? எங்கே.. எந்த நினைவில் அன்றைய தினம் புதன்கிழமை என்று அவன் நினைத்தான்..?
உடனடியாக விரைய முடியாமல் அவன் சுயகௌரவம் தடுத்தது.. கால்களை இரும்புச் சங்கிலி கட்டியிருப்பதைப் போல அவன் அப்படியே நின்றுவிட.. சங்கீதா அவனைப் பார்த்தபடியே...
"நடேசா.." என்றாள்..
'குணசீலா.. இவ உன்னைப் பத்தித்தாண்டா கிண்டலா எதையோ பேசப் போறா..' அவனது மனச்சாட்சி சொன்னது..
"என்னங்கம்மா..."
"யாரோ குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னாங்கன்னு சொன்னியே.. அது யார் நடேசா..?"
சங்கீதா குணசீலனின் மனச்சாட்சி சொன்னதை உண்மையாக்கினாள்..
"சேச்சே.. அது நம்ம சாரில்லம்மா.. இவரு இப்பத்தான குப்புற விழுந்தாரு.. மீனாட்சி சுந்தரம் சாரு அப்பவே விழுந்துட்டாரு.." நடேசன் குணசீலனுக்காக சாலப் பரிந்து கொண்டு வந்தான்..
இதற்கு இவன் பரிந்துரை செய்யாமலே இருந்திருக்கலாமே என்றிருந்தது குணசீலனுக்கு.. இப்படியொரு பரிந்துரையை அவன் கேட்டானா..?
கேட்காமலே குணசீலனுக்கு உதவிக்கரத்தை நீட்டிய நடேசன் அதைப்பற்றியெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.. என் கடன் உதவி செய்வது என்ற கொள்கைளை மேற்கொண்டவனாக குணசீலனை உள்ளங்கையில் தாங்கியே தீருவேனென்று அடம் பிடித்தான்..
"இதப் பாருடா.. இன்னொரு நல்ல நியுஸீம் வந்திருக்கு.. நீ சொல்லவே இல்ல பார்த்தியா..."
சங்கீதா நடேசன் சொன்ன முதல் செய்தியை இன்னுமொரு நல்ல செய்தியாக்கி.. குணசீலன் குப்புற விழுந்த செய்தியை அவள் நல்ல செய்தியாக எடுத்துக் கொண்டிருப்பதை அறிவித்து வைத்தாள்..
"எங்கேம்மா..? அதுக்குள்ள சாரைப் பாத்திட்டேனா.. அதை மறந்துட்டு சாரை ஹெச்.எம் தேடற கதையை சொல்ல ஆரம்பிச்சா.. இவரும் மண்ணைக் கவ்வுறாரு.."
சங்கீதா பொங்கிச் சிரித்தாள்.. மிருதுளா தலையை ஆட்டிச் சிரித்த விதத்தில் 'முடியல..' என்ற அவளின் கமெண்ட் வெளிப்பட்டது.. குணசீலனால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
"எனக்குத் தலைவலி நடேசா.. அதனால இந்த பீரியட் பெர்மிசன் போட்டேன்.. போ.. போய் ஹெச்.எம் கிட்ட இதைச் சொல்லு.."
அப்போதும் குணசீலன் சமாளிக்கத்தான் முயன்றான்.. ஆனால் நிலைமைதான் கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது..
"ஆக.. நீங்களும் மீனாட்சி சுந்தரம் சார் கேஸ்தான்னு சொல்லுங்க.."
"எதுக்கு.. எதை இணை கூட்டற..?"
"இல்ல சார்.. அவர்தான் இப்ப குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சாதிச்சாரு.."
"தேவையில்லாம பேசாதே... முதல்ல நான் சொன்னதைப் போய் ஹெச்.எம் கிட்டச் சொல்லிட்டு வா.."
குணசீலன் என்னவோ தோரணையாகத்தான் அதட்டி வைத்தான்.. ஆனால் நடேசன்தான் அசைவேனா என்று அங்கேயே நின்றான்..
"இனிமேல் போயி சொல்லி என்ன செய்ய..? அதான் பீரியடே முடிஞ்சிருச்சே.."
நடேசன் சொல்லி வாய் மூடவும்... பள்ளி முடிந்தற்கான மணியோசை ஒலிக்கவும் சரியாக இருந்தது..
"போங்க சார்.. போயி வீட்டில சொல்லி சுக்கு மல்லிக் காபி போட்டுக் குடிங்க.. தலைவலி சரியாப் போயிரும்.. ஆமா.. தலைவலின்னு சொல்றீங்க.. வீட்டுக்குப் போகாம இங்கே வந்து உக்காந்துக்கிட்டு கதைப் புத்தகத்த விழுந்து விழுந்து படிச்சுக்கிட்டு இருக்கீங்க..? பாடம் சொல்லிக் கொடுத்தா தலைவலிக்கும்.. கதைப் புத்தகம் படிச்சா தலைவலி ஓடிப் போயிருமா..?"
நடேசன் எப்போதுமே பதில் சொல்ல முடியாமல் தான் கேள்வி கேட்டு வைப்பான்..
அன்றும் அதுபோல அவன் கேட்டு வைத்ததில் குணசீலனுக்கு உண்மையிலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. அவன் அப்போதும் சங்கீதாவையும்.. மிருதுளாவையும் ஒரு மார்க்கமாக பார்த்தபடிதான் வீட்டுக்குக் கிளம்பிடப் போனான்...
"எது மாறினாலும் இந்த ஆளோட பார்வ மாறாது.." எரிச்சல் பட்டான் நடேசன்...
"விடு நடேசா.. என்னவோ அந்த ஆளாலே முடிஞ்சது அது மட்டும்தான்.. விட்டுத்தள்ளு.." என்றாள் சங்கீதா..
"அடங்க மாட்டேங்கிறாரே.. தினமும்தான் ஏதாவது ஒரு காரணத்த வைச்சு மண்ணக் கவ்வுறாரு.. இருந்தாலும் என்னமோ கோட்டயப்புடிச்சு கொடிய நாட்டிப்புட்டதப் போலயில்ல கெத்தா பார்த்துக்கிட்டுப் போறாரு..?"
"அப்பத்தான மீசையில மண் ஒட்டலைன்னு காட்டிக்க முடியும்..?"
சங்கீதா சிரித்தபடி கிளம்பினாள்.. குணசீலன் பண்ணிய கலாட்டாவில் அன்று விக்ரம் சபாபதியிடம் பேசியிருப்பானா... மாட்டானா என்ற கவலையே மிருதுளாவுக்கு மறந்து போய் விட்டது..
"என்னடி இந்த காமெடி கூத்து பண்றாப்புல.."
"விதி.. தினமும் இதை பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு.."
"இப்படி அட்டூழியம் பண்ணிக்கிட்டு என்னத்தையோ சாதிச்சுட்டதைப் போல போகிறதைப் பாரேன்.."
"இதுவும் ஒரு சாதனைதான மிருது.. உன்னாலயும் என்னாலயும் இதைச் சாதிக்க முடியுமா..?"
"எப்படி முடியும்..? வியாழக்கிழமை ஸ்கூலுக்கு வந்துட்டு புதன்கிழமை டைம் டேபிளை மெயின்டெயின் பண்ற புத்திசாலித்தனம் உனக்கும் எனக்கும் வந்துருமா..?"
"என்னமோ போடி.. இந்தாளு பண்ற காமெடிக் கூத்தில கொஞ்சமாவது சிரிக்க முடியுதே.. அதுக்கு நாம பாராட்டித்தான் ஆகனும்.."
"ஆமாமா.."
மிருதுளா சங்கீதாவுக்கு கையாட்டிவிட்டு ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள்.. சாலைப் போக்குவரத்தில் கலந்து விக்ரமின் பங்களா இருக்கும் பகுதியில் ஸ்கூட்டியைத் திருப்பினாள்.. பங்களாவை நெருங்கும் போது விக்ரமின் கார் அவளைக் கடந்து சென்றது.. அவசரமாக ஒரு காலை தரையில் ஊன்றி வண்டியை நிறுத்தி விட்டு ஆவலுடன் திரும்பிப் பார்த்தாள்.. காரின் கண்ணாடி ஜன்னல் அவளுக்காக இறங்கவில்லை.. கார் அவளைக் கடந்து முன்னேறிச் சென்றுவிட...
'காரில விக்ரம் இல்லையா..?' என்ற சந்தேகத்தோடு ஸ்கூட்டியைக் கிளப்பினாள்..
காருக்காக கேட்டை அகலமாக திறந்து விட்டிருந்த திலகர் தெருமுனையில் அவளுடைய ஸ்கூட்டியைப் பார்த்து விட்டான்.. கேட்டை மூடாமல் அவளுக்காக காத்து நின்றவனிடம் நன்றிப் புன்முறுவல் ஒன்றைச் சிந்தி விட்டு உள்ளே நீண்டிருந்த சிமிண்ட் பாதையில் வண்டியை ஓட விட்டவள் அப்படியே பிரேக் பிடித்து நின்று விட்டாள்..
அங்கே.. நீண்டிருந்த சிமிண்ட் பாதையின் முடிவலிருந்த பிரம்மாண்டமான போர்டிகோவில் நின்றிருந்த காரிலிருந்து விக்ரம் இறங்கிக் கொண்டிருந்தான்..
'அவன்தானா..?'

மிருதுளாவால் நம்ப முடியவில்லை.. ஆளில்லாத அடுத்த தெருவில் அவனுக்காக அவள் நின்றும் அவளை கண்டு கொள்ளாமல் கடந்து வந்த காரை ஓட்டி வந்தது அவளுடைய விக்ரம் தானா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -64
இது நீரோடு செல்கின்ற ஓடம் -64
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam64.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam64.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy