இது நீரோடு செல்கின்ற ஓடம் -54

54 தறியாகி அவன் மனதை நெய்தது.. அவள் மீதான காதல்... இருள் சூழ்ந்த இரவில் கட்டிலில் சரிந்து ஜன்னல் விளிம்பில் முகம் பதித்து விக்ரம...


54
தறியாகி அவன் மனதை நெய்தது..
அவள் மீதான காதல்...

இருள் சூழ்ந்த இரவில் கட்டிலில் சரிந்து ஜன்னல் விளிம்பில் முகம் பதித்து விக்ரமின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா...
அவன் அறையில் விளக்குகள் எரியவில்லை.. ஆனாலும் அவன் அந்த நேரத்தில் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருப்பான் என்று அவளுக்குத் தெரியும்.. அதற்கேற்ப அவன் அறையின் ஜன்னலில் நிழலோவியம் தெரிந்தது..
அடர்ந்த இருளின் கண்களை சுருக்கி உற்றுப் பார்த்தாள் மிருதுளா.. அவளது கூர்மையான பார்வை இருளைத்துளைத்து அவன் அறையின் ஜன்னலில் படிந்து துழாவியது.. அவன் அசைந்தான்.. கோட்டோவியமாக நின்று கொண்டிருந்தவனை அவள் கண்டு பிடித்து விட்டாள்..
செல்போன் லேசாக சிணுங்கியது.. காதுக்கு கொடுத்தாள்.
"வா.." என்றான் விக்ரம்...
மிருதுளாவின் காது மடல்கள் சூடாகின.. ஒற்றை எழுத்தில் எப்படி இவனால் உயிர் கொடுக்க முடிகிறது என்ற வியப்புடன்.
"எங்கே.." என்றாள் அறியாதவளைப் போல..
"என்னிடம்.." அவன் அழுத்தமாக அழைத்தான்..
மிருதுளா கண்மூடித் தவித்தாள்.. மழைக்கால குளிர் காற்று ஜன்னலைத் தாண்டி அவள் தேகம் தொட்டு உசுப்பேற்றி குளிர் காயத் தூண்டியது.. போனில் அவன் குரல் கதகதப்பாய் அவள் காதில் நுழைந்தது.. அவனே அருகில் இருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்..
"அழகுதான்.."
"நான்தானே.."
"நினைப்புத்தான்.."
"என் நினைப்புத்தானே.."
"என்ன ஒரு கான்பிடென்ஸ்..!"
"ஓவர் கான்பிடென்ஸ் இல்லைடி.. உண்மையான காண்பிடென்ஸ்.."
"விக்ரம்.."
"உன் விக்ரம்.."
'போதுமே..' மிருதுளாவுக்கு தாள முடியவில்லை.. தொட்டும்.. தொடாமல்.. பட்டும் படாமல்.. அவனுடன் விளையாடும் அந்த காதல் விளையாட்டில் அனல் மேல் மெழுகாக அவள் உருகினாள்.. அலைமேல் துரும்பாக அலைக்கழித்தாள்..
அவன் வேண்டும்.. வேண்டும் என அவள் உடலின் அத்தனை செல்களும் அறைகூவ.. அவளைக் கட்டுக்குள் கொண்டு வர அவள் போராடினாள்..
"என் விக்ரம்.." போதையுடன் முணுமுணுத்தாள்..
"ம்ம்ம்.. உன் விக்ரம்தாண்டி.. உன்னோட விக்ரம்தான்.. எழுதி வைச்சுக்கடி.. இனி இந்த விக்ரமின் உடம்பும்.. மனசும் உனக்கு மட்டும்தான் சொந்தம்.."
மிருதுளாவை அந்த வார்த்தைகள் காந்தமென கவர்ந்து இழுத்தன.. அவள் அந்த நொடியிலே அவனைப் பார்த்துவிடத் துடித்தாள்.. தொட்டு விடத் தவித்தாள்.. உடல் முழுவதும் எழுந்த இதமான அந்த இம்சை அதை உருவாக்கியவனைத் தேடிப்போய் பதிலுக்கு இம்சை செய்யத் தூண்டியது..
"படுத்தறியேடி.."
தாபத்துடன் ஒலித்த அவன் குரலில் யுகம் மொத்தத்திற்குமான வேட்கை உள்ளடங்கியிருந்தது.. அது மிருதுளாவின் காதுகளில் பாய்ந்து உடல் முழுவதும் ஊசி முனைகளாகக் குத்தியது..
அவன் வேகத்தையும்.. வேட்கையையும் அவள் உணர்ந்தாள்.. அவனுடன் தனித்துப் பேசிய பொழுகளில் அவளை ஆக்ரமிக்கத் துடித்த அவனின் துடிப்பு அவள் நினைவில் வந்து தூக்கத்தை பறிமுதல் செய்தது..
"கண்ணுக்கு முன்னாலே பச்சைப் பசேல்ன்னு மேய்ச்சல் நிலம்.. காய்ஞ்சு போன மாட்டை கட்டிப் போட்டு வைச்சிருக்கியேடி.. இது உனக்கே நியாயமாகத் தோணுதா..?"
அவன் பரிதாபமாக நியாயம் கேட்ட விதத்தில் அவள்..
"களுக்.." என்று வாய் பொத்திச் சிரித்தாள்..
"நான் படற இம்சையைக் கேட்டா உனக்கு சிரிப்பு வருது...? ம்ம்ம்..?"
"ஐய்யே.. இங்கே மட்டும் என்ன வாழுதாம்.. அந்தக் கூத்துத்தான் இங்கேயும் நடக்குது.."
அவளையுமறியாமல் அவள் மனதைச் சொல்லி விட்டாள்..
"என்னது...?" என்ற அவனின் ஆர்வத்தில் அரண்டு விட்டாள்..
"நான் வேற எதையோ சொல்ல வந்து.. எதையோ சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இப்பச் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பேசினது நானில்ல.. அதை அழிரப்பர் போட்டு அழிச்சிருங்க.. குட்நைட்.."
"ஏய்ய்..."
பகையாளியை நோக்கி ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிக்கை விடுக்கும் 'ஏய்ய்' என்ற வார்த்தை காதலில் மட்டும் எப்படி உயிர்ப்பு சக்தியாக உருமாறியது..?
இந்த விந்தையை கண்டு சொல்ல யாருமில்லை.. காதலில் எல்லாமே விந்தைதானே.. அந்த மாய உலகில் நுழைந்து விட்டால் முக்கியத்துவம் இல்லாதவை கூட முக்கியத்துவம் பெற்றுவிடும்.. முக்கியத்துவம் வாய்ந்தவை யெல்லாம் செல்லாக்காசாக சிதறி விடும்..
மிருதுளாவை 'ஏய்ய்..' என்ற அந்த ஒற்றை வார்த்தை கிறங்கடித்தது.. அவள் கண்மூடி உதட்டைக் கடித்துக் கிறங்கித் தவித்தாள்..
"பொய் பேச கத்துக்கிட்டியாடி.."
"ம்ப்ச்.. தூங்க வேணாமா..?"
"வேணாம்.."
"வேற என்னதான் வேணும்..?"
"நீ..."
அவனது ஒற்றைவிரல் அவளை நோக்கி குறி வைப்பதை மானசீகமாக அவள் உணர்ந்தாள்.. விரல் நீட்டியவனின் கண்களில் இருந்த வேட்டைக்காரனின் தீவிரத்தில் அவள் மனம் மயங்கினாள்.. அவளையே பார்த்தபடி அவன் அடிமேலடி வைத்து நடந்து வந்தான்.. அவனுக்கு அவளுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.. கிட்டே நெருங்க.. நெருங்க.. மிருதுளா கண்மூடி எதிர்பார்ப்புடன் கட்டிலில் சரிந்தாள்..
'இதோ வந்துட்டான்.. கிட்ட வந்துட்டான்.. விரல் நீட்டித் தொடப் போறான்..'
கற்பனையான எதிர்பார்ப்பில் அவள் கிளர்ந்தாள்..
அந்த சுகமான நினைவுகளுடன் தூங்கிவிட எண்ணியவள் கண்மூடிய போது.. அவளது கன்னத்தில் வலிமையான கரம் படிந்து தடவியது..
'கனவு...'
சுகமான அந்த வேதனையுடன் அவள் புரண்டு படுத்த போது ரோமம் படர்ந்த முழங்கையின் மீது அவள் முகம் உரசியது..
'கனவில்லை.. நிஜம்...'
அவள் அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.. ஜன்னலை ஓட்டி நின்ற உருவம் 'உஸ்ஸ்..' என்று வாயில் விரல் வைத்து அவளை எச்சரித்தது.. மிருதுளா வாய் பொத்தி பயத்துடன் மிரண்டாள்..
"முட்டாள்..! என் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ள என் பெண்டாட்டியை என்னைத் தவிர வேற எவன் வந்து தொடுவான்..? தொட்ட கையை வெட்டிப் போட்டிர மாட்டேன்..?"
சன்னமான அவன் கோபக்குரலில் ஆச்சரியமாகிப் போனாள் மிருதுளா.. வாயைப் பொத்தியிருந்த கையை எடுத்தவள்.. ஜன்னலுக்கு தாவினாள்.. ஜன்னல் கம்பிகளுக்கு ஊடே நீண்டிருந்த அவன் கையைப் பற்றித் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டவள் அந்த சுகத்தில் திளைத்தவளாக கண்களை மூடி சொக்கியபடி..
"நீங்களா..?" என்று மயக்கத்துடன் முணுமுணுத்தாள்..
"நானேதான்.." அவன் கை அவளது கன்னம் பற்றி ஜன்னலுக்கு வெகு அருகில் இழுத்தது..
அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்தை அவள் முகம் உணர்ந்தது.. ஜன்னல் கம்பிகளில் படிந்திருந்த அவள் விரல்களின் மீது ஈரமுத்தங்களைப் பதித்த அவன் வேக மூச்சுக்களின் வேட்கையில் அவளுக்குள் என்னென்னவோ ஆகித் தொலைத்தது..
"மிருதுளா.." தாபம் குழைந்த அவன் குரலில் அவள் தவித்தாள்..
"வாடி.."
அவன் அழைத்தான்.. எப்படி..? எப்படி வெளியே போவது என்று தெரியாமல் அவள் துடித்தாள்.. கம்பிகளுக்கு ஊடே நீளும் அவன் கரங்களின் தேடுதலை அவளால் சமன் செய்ய முடியவில்லை...
"வெளியே வா.."
அவன் ஆணையிட்டான்.. அந்த பிடிவாதத்தை அவளுக்குப் பிடித்திருந்தது.. அவன் கேட்பதைக் கொடுக்கும் கருணை அவளுக்குள் சுரந்தது.. அந்த பிடிவாதக்காரன்.. டெர்ரர் என்று மற்றவர்களால் அழைக்கப் படும் சிம்ம சொப்பனக்காரன்.. அவளுக்காக.. அந்த அர்த்த ராத்திரி ஜாம வேளையில் ஜன்னலுக்கு வெளியே காத்திருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மிருதுளா ஒரு முடிவோடு எழுந்தாள்.. சப்தமில்லாமல் கதவைத் திறந்து அதைவிட சப்தமில்லாமல் கதவை மூடினாள்.. அடிமேலடி வைத்து.. மூச்சடக்கி நடக்க முயன்றபோது அவள் கால் கொழுசு சப்தமெழுப்பி ஊரைக் கூட்டவா என்று பயமுறுத்தியது..
கால் மடக்கி அமர்ந்து கொழுசைக் கழட்டினாள்.. அறைக்குள் வீசினாள்.. காத்திருந்தாள்.. சபாபதியும்.. உமாவும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அடுத்த அறையிலிருந்து எந்த விதமான சப்தமும் வரவில்லை.. நடையைத் தொடர்ந்தாள்.. வாசல் கதவைத் தாழ் விலக்கித் திறந்தாள்.. கதவை இறுக்கி மூடினாள்.. வாசல் பக்க வெளிச்ச வெள்ளத்தில் மாட்டிக் கொள்ளாமல் சுவரோர இருளில் பதுங்கி.. தோட்டத்துப் பக்கமாக நகர்ந்தாள்.. மனது திக்.. திக்கென்று அடித்துக் கொள்ள.. உடல் முழுவதும் எதிர்பார்ப்பின் பரவசம் உற்பத்தி ஆகியிருந்தது..
ஜன்னலோரமாக காத்திருந்த விக்ரம் அவளைக் கண்டதும் வேக நடையுடன் விரைந்து வந்து அவளைத் தழுவிக் கொண்டான்..
அதுவரை அவள் மனதில் இருந்த பயமெல்லாம் அவனது அந்தத் தழுவலில் அடித்துச் செல்லப்பட.. அவனைத்தவிர வேறு நினைவில்லாதவளாக பதிலுக்கு அவனைத் தழுவிக் கொண்டாள் மிருதுளா..
"ஏன் இவ்வளவு நேரம்..?"
காதோரம் கரகரப்பாக ஒலித்த அவன் குரலில் காத்திருந்த வேட்கை இருந்தது.. அது மிருதுளாவைத் தாக்கியது.. அவளின் உடலின் எழும்புகள் உடைந்து நொறுங்கி விடும் அளவிற்கு இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தவனின் வேகத்தை அவள் உணர்ந்தாள்..
"யாருக்கும் தெரியாம வந்தாகனும்.. அது அவ்வளவு ஈஸியில்லை.. உங்களுக்கென்ன.. ஜன்னலோரம் வந்து நின்னுக்கிட்டு வான்னு கூப்பிட்டுருவீங்க.. அவஸ்தை யெல்லாம் எனக்குத்தானே..."
"இல்லடி.. அவஸ்தையெல்லாம் எனக்குத்தான்.."
அவனுடைய வேக மூச்சுக்கள் அவனுடைய அவஸ்தை எது என்பதை விவஸ்தையின்றி எடுத்துக் கூறின.
விக்ரம் அவளை இழுத்துக் கொண்டு தோட்டத்தின் இருளில் புகுந்தான்.. மகிழ மரத்தடியில் சரிந்த போது.. இவனுடனான காதலுக்காக எப்படிப்பட்ட எல்லைகளை யெல்லாம் தாண்ட வேண்டியிருக்கிறது என்று திகைத்துப் போனாள் மிருதுளா..
அதுவரை அவள் பெற்றவர்களின் அனுமதியின்றி வீட்டு வாசல் படியைத் தாண்டியதில்லை.. இன்றைக்கு என்னடாவென்றால்.. அர்த்த ஜாம வேளையிலே யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறி.. தோட்டத்தின் மகிழ மரத்தடியில் அவள் காதலனுடன் சல்லாபிக்கிறாள்..
'எப்படி இது நிகழ்ந்தது..?'
அவளைத்தழுவி தரையில் சரித்து அவள் மேல் சரிந்த விக்ரமின் ஆக்ரமிப்பு அதற்கு மேல் அவளை யோசிக்க விடவில்லை..
"மிருதுளா.."
"ஊம்.."
"மிருதுளா.."
"ஊம்.."
"மிருதுளா.."
"ஊம்.."
அர்த்தமில்லாத அழைப்புகள்.. அர்த்தமில்லாத 'ஊம்' கொட்டல்கள்.. எதற்காக அழைத்தான் என்று கேட்டால் அவனுக்குப் பதில் சொல்ல முடியாது.. எதற்காக ஊம் கொட்டினாள் என்பதற்கு அவளுக்குப் பதில் தெரியாது..
இருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தன.. படுத்து உறங்க கட்டில்கள் இருந்தன.. அவற்றில் மெத்தைகளும் தலையணைகளும் இருந்தன.. போர்த்திக் கொள்ள போர்வைகள் இருந்தன..
இத்தனையும் இருந்தும்.. அவர்கள் இருவரும்.. குளிர் கால மழையிரவில் மகிழ மரத்தடியின் மண் தரையில் சரிந்து.. உடலெங்கும் மண்துகள்கள் படிய உருண்டு புரண்டார்கள் என்றால் அந்தக் காதலின் கொடுமையை என்னவென்றுதான் சொல்லுவது..?
"நான் கூப்பிட்டாத்தான் வருவியா..?"
அர்த்தமில்லாத கோபத்துடன் அவன் குற்றம் சாட்டினான்..
"வேற என்ன செய்கிறதாம்..?"
மிருதுளா சத்தமில்லாமல் முணுமுணுத்தாள்..
"நீ வரக் கூடாதா..? விக்ரம்.. நான் உனக்காக வந்திருக்கேண்டா.. மகிழ மரத்தடியில் காத்திருக்கேண்டா.. ஓடி வான்னு சொல்லக் கூடாதா..?"
"இப்பவும் நான் உங்களுக்காகத்தான் வந்திருக்கேன் விக்ரம்.. மகிழம்பூ மரத்தடிக்கு வந்திருக்கேன்.. இது எவ்வளவு பெரிய விசயம்ன்னு உங்களுக்குப் புரியலையா விக்ரம்..?"
"ஏன் புரியலை..?"
அவனுக்காக எல்லைக் கோட்டைத் தாண்டி வந்திருந்தவளை வெகு பிரியத்துடன் அணைத்துக் கொண்டான் விக்ரம்.. அவளின் காதலின் மீதான அதீத நம்பிக்கை அவனைத் தாலாட்டியது..
"நான் உன் புருசன்டி.."
"யாரு இல்லேன்னு சொன்னது..?"
"நீ சொல்லிருவியோ..?"
"சொல்ல மாட்டேன்.."
"நான் வான்னு கூப்பிட்டா நீ வரனும்.."
"அதான் வந்திட்டேனில்ல..."
மிருதுளா பேசினாள்.. அவனுக்கு பிடித்த மாதிரி.. பிடித்த விதத்தில் பேசினாள்.. அவனது ஆளுமையை உறுதி படுத்தினாள்.. அவன் அழைத்தால் அவள் வருவாள் என்பதை தெரியப் படுத்தினாள்..
அவள்மீது படர்ந்திருந்த விக்ரமின் உடல் முழுவதையும் அவள் உடல் உணர்ந்தது..
'இதுக்கு மேலே என்ன இருக்கு..?'
மிருதுளா கண்களை மூடிக் கொண்டாள்.. அவளின் முகத்தில் படிந்த சூடான முத்தத்தின் ஸ்பரிசத்தில் அவள் உடல் காற்றோடு கலந்து லேசானதாக மாறியது.. முத்தம் தந்த எச்சில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு கனவல்ல என்பதை அவளுக்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்க.. அவனது உதடுகள் இறங்கி அவள் கழுத்தின் மீது படிந்தன.
"காதல் என்பது பொது உடமை..
                கஷ்டம் மட்டும்தான் தனி உடமை..
     அப்பனும் ஆத்தாளும் சேராமப்போனா
                நீயும்தான் பொறக்க முடியுமா..?
                     இதை எப்போதும்
     நீயும்தான் மறுக்க முடியுமா..?"
வாசலில் காவல் இருந்த திலகரின் கையிலிருந்த எப்.எம் ரேடியோவில் ஒலித்த பாடலில் அவர்கள் தன் வயமிழந்து கொண்டிருந்தார்கள்.. திலகர் ஆனந்தமாக இருந்தான் போல.. அந்த நள்ளிரவு நேரத்தில் மோகினி பேயுடன் நடனம் புரிய விழைந்தவனைப் போல பாடலுடன் கூடப் பாடி ரசித்துக் கொண்டிருந்தான்.. போதாக் குறைக்கு எதிர் பங்களாவின் வாட்ச் மேனும் சேர்ந்து கொள்ள திலகரின் உற்சாகம் கரை புரண்டது.. எழுந்து வாசலில் எதிர்பங்களாவின் வாட்ச்மேனோடு ஆட ஆரம்பித்து விட்டான்..
"பாசம் மட்டும் இல்லாத..
                ஆளேது கூறு..
     அன்பு வழிபோகாத
                ஆளிங்கே யாரு..?
     புத்தனும் போன பாதைதான்..
                பொம்பள என்னும் போதைதான்..
     அந்த வேகம் வந்திடும் போது..
                ஒரு வேலி என்பது ஏது..?
     இது நாளும் நாளும் தாகம்தான்
                உண்மையை எண்ணிப்பாருடா..
     இது இல்லாட்டா..
                உலகம் இங்கே ஏதடா..?"
அந்தப் பாடல் புதியதோர் உலகத்துக்கு விக்ரமையும் மிருதுளாவையும் அழைத்துச் சென்று கொண்டிருந்தது.. வேகம் கொண்ட விக்ரம் வேலிகளை உடைக்கத் துடித்தான்.. அவனது ஆவேசத்தில் மிருதுளா பொய்கையில் அமிழும் மலராக அமிழ்நது கொண்டிருந்தாள்.. பெண் என்பவள்தான் போதை தருவாளா என்ன..? அவள் காதலிக்கும் ஆண் அதைவிட அதிகமான போதையைத் தருவான்..
அந்த போதையை விக்ரம் மிருதுளாவுக்கு அள்ளி அள்ளித் தந்து கொண்டிருந்தான்.. அதில் மனம் மயங்கிய அவள் அந்த மயகத்தில் கண்மூடினாள்..
"பாசம் ஒரு நீரோட்டம்..
                நில்லாம ஓடும்..
     உள்ளுக்குள்ளே ஏதேதோ..
                சங்கீதம் பாடும்..
     ஒன்னா கலந்த உறவுதான்..
                எந்நாளும் இப்ப வரவுதான்..
     இது காதல் என்கிற கனவு..
                இனம் காண எண்ணுற மனசு..
     இது சேரத் துடிக்கிற வயசுதான்..
                வாழ்க்கையே கொஞ்சகாலம்தான்..
     இந்த வாழ்க்கையில
                வாலிபம் கொஞ்சம் நேரம்தான்.."

விக்ரமின் நாடி நரம்பெங்கும் அவள் மீதான காதல் வியாபித்திருந்தது.. காதல் என்கிற இனம் விளங்காத இன்ப உணர்வுக்குள் அவர்கள் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவளுடன் சேரத்துடித்தது அவன் மனசு.. அதை தடுக்க முடியாமல் தவித்தது அவள் மனசு.. ஒருவகையில் இது ஒரு போராட்டம்தான்.. இதில் வென்றாலும்.. தோற்றாலும் வெற்றி இருவரின் பக்கம்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -54
இது நீரோடு செல்கின்ற ஓடம் -54
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam54.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam54.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy