இது நீரோடு செல்கின்ற ஓடம் -52

52 உன் மடியில் தஞ்சம் புகுந்தேன்.. பூங்காற்றாய் எனை சீராட்டு.. விக்ரம் மிருதுளாவின் மடிமீது முகம் புதைத்தான்.. அவளது இடுப்பைச் ச...


52
உன் மடியில் தஞ்சம் புகுந்தேன்..
பூங்காற்றாய் எனை சீராட்டு..

விக்ரம் மிருதுளாவின் மடிமீது முகம் புதைத்தான்.. அவளது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த அவனது கைகள் சுழலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பன் மீட்சி பெறக் கிடைத்த பற்றுக் கோட்டை இறுக்கிப் பற்றிக் கொள்வதைப் போல இருந்தது.. பகை முடிக்கும் அந்த வல்லவன்.. வாழ்வின் தர்ம நியாயங்களில் சிக்குண்டு சிதிலமாகிப் போன துயரில் மிருதுளா அதிர்ந்திருந்தாள்.. அவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள்.. அவன் சிகையில் பட்டுத் தெறித்துச் சிதறின..
"புழுங்கறேண்டி.. மனசுக்குள்ளேயே பூட்டி வைச்சுப் புழுங்கிக்கிட்டு இருக்கேன்.. வருண் உறுதியா.. நம்பறான்.. நீபாவைத் தள்ளி விட்டுக் கொன்னது நான்தான்னு.. அவன்கிட்ட எப்படிச் சொல்லி புரிய வைப்பேன் மிருதுளா..? என் பிள்ளைகளைக் காப்பற்றத்தான் நான் அவகூடப் போராடினேன்னு..? யாரைக் காப்பாற்ற நான் போராடினேனோ அவனே என்னைப் பார்த்துக் கொலைகாரன்னு விரல் நீட்டாறானேடி.."
"அவனுக்கென்ன தெரியும்..?"
"அப்படிச் சொல்லாதே.. அவன் என் மகன்.. கடைஞ்செடுத்தவன்.. அந்த மலையுச்சியிலே அவளும் நானும் மல்லுக் கட்டிக்கிட்டது அவன் மனசில பதிஞ்சிருக்கு.. எதுக்காக மல்லுக் கட்டினேன்னு மூணு வயசுப் பையனால கண்டு பிடிக்க முடியுமா மிருது..?"
"முடியாதுதான்.."
"அதோட.. எனக்கும் அவளுக்கும் இடையில நடந்த அத்தனை போராட்டங்களைப் பற்றியும் என் அம்மாவுக்கும்.. டாடிக்கும் மட்டுமே தெரியும்.. மத்தவங்களுக்குத் தெரியாது.. ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சதெல்லாம் அவளை நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்னுதான்.. ஏன்..? நீ கூட என்னை அப்படித்தான நினைச்சுக் கேள்வி கேட்ட..?"
"அது.. வந்து.."
மிருதுளாவின் மெலிதான தடுமாற்றத்தில் புரண்டு படுத்து அவள் முகத்தை அண்ணாந்து பார்த்தான் விக்ரம்..
அவள் முகத்தில் தெரிந்த ஒளி வெள்ளத்தில் அவன் மனம் கடந்த காலத்தின் கசப்புகளில் இருந்து மீண்டது..
"என்ன..?" கண்சிமிட்டினான்.
பழைய விக்ரமை பார்த்து விட்ட மின்னல் அவள் கண்களில் வந்தது.. ரோஜாவின் நிறத்துக்கு மாறிய அவள் கன்னங்களை அவன் ஆசையுடன் பார்த்தான்.. அவன் கை உயர்ந்து அவள் கன்னத்தை வருட முற்பட்டது..
"ஒன்னும் வேணாம்.." அவன் கையை அவள் தள்ளி விட்டாள்..
"சத்தமாப் பேசாதே.." அவன் கண்களில் கள்ளத்தனம் சிரித்தது..
"ச்சீ.." அவன் கையை நறுக்கென்று அவள் கிள்ளினாள்.. கூடவே.. சுற்று முற்றும் சங்கடத்துடன் பார்த்தவள்..
"யாராவது ஒளிஞ்சிருப்பாங்களா என்ன..?" என்று ரகசியக் குரலில் அவனிடம் விசாரித்தாள்..
அவனுக்கு சிரிப்பு வந்தது.. அடக்கிக் கொண்டு..
"மே..பி.." என்று அவளது பயத்தை அதிகப் படுத்தினான்..
"எழுந்திருங்க.."
மிருதுளா சட்டென்று அவன் தலையை மடியிலிருந்து விலக்கி அவன் தோளைப் பிடித்து எழுப்பி விட முயன்றாள்..
"அசைச்சுரு.. பார்த்திரலாம்.." அவன் சவால் விட்டான்..
"நீங்கதான் அசைக்க முடியாத நம்பிக்கையாச்சே.." மிருதுளா செல்லமாகச் சிணுங்கினாள்..
அவளின் அந்தச் செல்லச் சிணுங்களில் விக்ரமின் மனதில் சாரல் அடித்தது.. காய்ந்து விட்ட முரட்டு மரத்தின் மீது படற விரும்பும் அந்த தளிர் கெடியின் விரல்களோடு தன் விரல்களை அவன் பிணைத்துக் கொண்டான்.. மிருதுளா சுற்றுப் புறத்தை மறந்தாள்.. அவனுடைய வலிமையான கரத்தில் புதைந்திருந்த அவள் கரம் அவனது உள்ளங்கையின் ஸ்பரிசத்தில் அழுந்தி அமுங்கியது..
அவளது உள்ளங்கையில் அவன் விரல்கள் படிந்து உரிமையுடன் அழுத்தின.. மிருதுளாவின் முகத்தில் மந்தஹாசம் படிந்தது..
'ஒரு பெண்ணின் காதலுக்கு இத்தனை சக்தி உண்டா..?' ஆச்சரியத்துடன் தனக்குள் கேட்டுக் கொண்டான் விக்ரம்..
அது அவனறியாத உணர்வு.. காதல் நிறைந்த காமம் எத்தகையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவனுள் கிளர்ந்தது.. அவன் எழுந்தான்.. அவள் தோளைச் சுற்றி அவன் கைபடிந்து இழுத்தது.. மிருதுளாவை வெகு எளிதாக அவன் மடிக்கு நகர்த்தி விட்டான்..
ஒரு ஆக்டோபஸைப் போல அவளைச்சுற்றி வளைத்து வேலியிட்டன அவன் கைகள்.. அவள் விடுபட முயன்றாள்.. அசையக்கூட முடியவில்லை..
'இரும்பு வேலி..' அவளுக்குச் சிரிப்பு வந்தது..
அவன் காரணம் கேட்டான்.. அவளும் சொன்னாள்..
"நீ போட்டிருக்கிற பூவேலி.. இதைவிட வலிமையானதுடி.." என்றான் அவன்..
அந்த வார்த்தைகளில் அவள் நெகிழ்ந்து போனாள்.. அவன் மார்போடு ஒன்றினாள்.. அந்த இரும்பு மனசுக்காரன் அந்த செய்கையில் இளகத் தொடங்கினான்..
இரும்பை இளக்கும் அதீத சக்தி படைத்தவளாக அவள் இருந்தாள்.. அவள் தோளைத் தடவிய அவன் கைகள் வழுவழுப்பான அவளது மேனியின் ஸ்பரிசத்தில் தேங்கின.. அவன் மனம் மயங்கியது.. குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்...
"விக்ரம்.."
மிருதுளாவின் உதடுகள் கனவிலிருந்து பேசுவதைப் போல அசைந்தன.. விழிப்பும் இல்லாத.. துயிலும் இல்லாத ஒரு பரவச நிலையில் அவள் இருந்தாள்.. அவள் மீது ஊறும் அவன் கைகள் அத்து மீறிப் பிரவேசிக்க அலைந்ததில் அவள் நிலை குலைந்தாள்..
"வேண்டாம்.."
தடுக்க முனைந்தாள்.. பொங்கி எழும் சுனாமியை யாரால் தடுக்க முடியும்..?
அவனுக்கு அந்த நொடிகளில் அவள் மிகவும் தேவைப் பட்டாள்.. அத்தனை வருடங்களாக அவன் மனதில் பூட்டி வைத்திருந்த ரகசிய சுரங்கத்தின் கதவுகளை காதலெனும் திறவுகோல் கொண்டு திறந்து அனைத்தையும் கொட்ட வைத்து விட்டாள்..
புதைந்து கிடந்த பூதாகர ரகசியங்களில் அவளுக்கு மூச்சு முட்டியது.. அவனுக்கோ மறந்து போயிருந்த நிகழ்வுகள் பாரமாக ஏறி அவன் மனதில் அமர்ந்து அழுத்தத் தொடங்கின.. அந்தப் பாரத்தை இறக்கி வைத்து அவன் மனதை சமன் செய்ய அவள் ஒருத்தியால் மட்டுமே முடியும்..
"மிருதுளா.."
கரகரத்த அவன் குரலில் தெரிந்த உணர்வுகளின் அழைப்பில் கரைந்து விட்டாள் மிருதுளா..
அவன் கரங்களைத் தடுக்க முனைந்த அவள் கரங்களை அந்தக் குரல் கட்டிப் போட்டு காவலில் வைத்து விட்டது..
"என் விக்ரம்.."
எதிர்ப்புகள் பொடிப் பொடியாக நொறுங்கிப் போய்விட பலவீனமான குரலில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவனிடம் சரணடைந்தாள் அவள்..
அவன் வென்று விட்ட கர்வத்துடன் சிரித்தான்.. இருள் சூழ ஆரம்பித்திருந்த அந்த நேரம் அவனுக்குத் தோதாக அமைந்து விட்டது.. செடிகளின் மறைவில் அவன் அமர்ந்திருந்த பெஞ்ச் அமைந்திருந்தது அதைவிடத் தோதாகப் போய்விட்டது..
"எனக்குன்னு இந்த பெஞ்சை போட்டு வைச்சிருக்காங்க போல..."
அவளை இறுக்கியபடி அவன் சொன்னான்.. அவனுள் புதைந்த அவளின் அனைத்துச் செல்களும் விழித்துக் கொண்டு உஷ்ணத்தை உண்டாக்கின.. அத்து மீறி பிரவேசிக்கும் அவனது கைகள் சொல்லிய புதிய வித்தைகளில் அவளறியாத பலவித ரகசியங்கள் வெளிப்படத் துவங்கின.. அவள் காதோரம் கிசுகிசுத்த அவன் பேச்சு எதையெதையோ அவளுக்குச் சொல்லியது.. அவள் காது மடல்களில் உராய்ந்த அவன் மீசையின் ரோமத்தில் அவள் எங்கோ பறக்கத் தொடங்கினாள்..
விக்ரமின் கால்கள் உயர்ந்து.. சேலைக் கொசுவத்தின் மடிப்புகளின் மறைவில் முயல்குட்டிகளைப் போல வெளியே தெரிந்து அவள் பாதங்களைச் சுற்றி வளைத்து சிறை பிடித்தன..
மிருதுளா கிறங்கித் தவித்தாள்.. அவனின் புதுவகையான இந்தப் போர் முறையிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் அவளுக்கு பிடிபடவில்லை.. தப்பிக்கும் மார்க்கத்தை அவளால் தேடவும் முடியவில்லை..
அவள் பாதங்களில் படிந்த அவன் பாதங்களின் வலிமையில் அவள் தன் வயத்தை இழந்து கொண்டிருந்தாள்..
ஒரு சறுக்கு மரத்தின் வளவளப்போடு.. வாழைத் தண்டைப் போல இருந்த அவளின் கால்களில் வழுக்கிக் கொண்டு அவனது சொரசொரப்பான பாதம் உயர்ந்ததில் அவளுக்குள் ரசாயண மாற்றம் ஏற்படத்தொடங்கியது..
"ஏண்டா இப்படிப் படுத்தற..?"
அவன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து அவன் தோள் வளைவில் முகம் புதைத்து நியாயம் கேட்டாள்..
அவள் நியாயம் கேட்ட விதத்தில் அவன் பலமாக சிரித்தான்..
"கள்ளன்டா.. நீ கள்ளனேதான்.."
அவள் அதற்கும் கடிந்து கொண்டாள்.. கரும்பின் இனிப்போடு கடிந்து கொள்ள காதலிகளால் மட்டுமே முடியும் போல..
அவனது உதடுகள் அவள் கன்னத்திலிருந்து இடம் பெயர்ந்து அவளது உதடுகளை நோக்கிப் பயணப்பட்டன..
இரண்டுக்கும் இடையே காத தூரமா என்ன..? அவன் தேடியது கிடைத்து விட்டது.. அவள் இதழோடு அவன் இதழ் பதித்ததில் அவள் மூச்சுத்திணறினாள்.. அவள் கை உயர்ந்து அவன் பின்னந்தலையின் முடியை இறுக்கிப் பிடித்ததில் அவன் சூடேறிப் போனான்..
அவன் பெண்ணின்பத்தை அறியாதவனல்ல.. பல முறை நீபாவுடன் கூடியிருக்கிறான்.. இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக ஆகியிருக்கிறான்.. இன்பத்தின் உச்சத்தை பலமுறை தொட்டுத் திரும்பியிருக்கிறான்..
அப்போதெல்லாம் அறியாத ஒரு சுத்தை அவள் இதழோடு இதழ் பதித்த அந்தத் தருணத்தில் உணர்ந்தான் விக்ரம்..
காதலுடன் கூடிய கலவி எத்தகையது என்பதன் முன்னோட்டத்தை அந்த இதழ் முத்தம் அவனுக்கு அறிவித்தது..
'இவளில்லாத வாழ்வை இனி என்னால் வாழ முடியுமா..?' தனக்குள் கேட்டுக் கொண்டான் விக்ரம்..
அவள் அவனுக்குப் பிடித்தமானவளாக இருந்தாள்.. அவனைப் பிடித்துப் போனவளாக இருந்தாள்.. இரண்டிலும் நனைந்து மகிழ்வில் திளைத்தது அவன் மனது..
மிருதுளாவின் சேலை முந்தானை காற்றில் பறந்து அவர்களின் முகத்தோடு படிந்து மூடியது.. அவன் இதழ் தந்த முத்தத்தின் ஸ்பரிசத்தை அவள் அனுபவித்துக் கொண்டிருந்த போது.. அவளது சேலை முந்தானையின் மணத்தை அவன் நுகர்ந்தான்..
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு..
                வாசமுண்டு..
     கண்டதுண்டா.. கண்டவர்கள்..
                சொன்னதுண்டா..?"
மெதுவான குரலில் அவள் காதோரமாக அவன் பாடினான்.. அவளுக்கு அந்த மணித்துளிகளை பிடித்திருந்தது.. அவனுடன் கழித்துக் கொண்டிருக்கும் அந்த அற்புத நொடிகள் நகராமல் நின்று விடக் கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது..
விக்ரம் அவளின் சேலை முந்தானையை விலக விடாமல் அதன் நுனிகளைப் பிடித்து இழுத்து அவர்களைச் சுற்றி வளைக்கும் கூடாரமாக்கினான்..
அது அவனுக்கும் அவளுக்குமான வீட்டைப் போல இருந்தில் இருவருக்குமே கிளர்ச்சி எழுந்தது.. அவன் கைகள் அவளை உரிமையுடன் அணைத்துக் கொண்டதில் அவன் அணைப்பில் அவள் அடங்கிப் போனாள்..
"சேலையிலே வீடு கட்டவா..
                சேர்த்து அணைக்க..?"
அடுத்த பாடல் வரிகளை அவள் காதோரமாக அவன் பாடினான்.. அது எங்கேயோ அவளை இழுத்துச் சென்றது.. கொட்டிக் கொண்டிருக்கும் அருவியில் தலை நனைத்து அவள் முடிக் கற்றையை விசிறியடித்து நிமிர்ந்தாள்.. அவளைச் சுற்றித் தெரிந்த கனவு நீர்த்திவலைகள் போல அவளின் பாடல் வரிகள் தெறித்துக் கொண்டிருந்தன..
"பெண் இல்லாத ஊரிலே..
                அடி நான் பூக் கேட்பதில்லை..
     பெண் இல்லாத ஊரிலே..
                கொடிதான் பூப்பூப்பதில்லை..
     உன் புடவை முந்தானை..
                சாய்ந்ததில்..
           இந்த பூமி பூப்பூத்தது..
                இது கம்பன் பாடாத சிந்தனை..
     உந்தன் காதோடு
                யார் சொன்னது..?
     புது வெள்ளை மழை
                இங்கு பொழிகின்றது.."
அவள் தோள் தொட்டுத் தடவிய அவன் கரத்தில் இருந்து விலக விரும்பாமல் அவன் தோள் மீது அவள் தலை சாய்த்தாள்..
அவர்கள் இருவரின் மனங்களிலும் ரம்யம் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.. பாலைவனத்தின் சுடுமணலில் கால் பொசுங்க நடந்தவனுக்கு பாலைவனச் சோலையாக மிருதுளா தென்பட்டாள்..
கொப்பளித்திருந்த அவன் பாதங்களை அவள் பிரியம் மிகுந்த கண்ணீர் துளிகளால் மருந்திட்டு குளிர வைத்து குணமாக்கினாள்..
வெம்மை மிகுந்த அவனது கடந்த காலத்தின் காலடிச் சுவடுகளை தன் காதலால் அழித்து அவனுக்கு இளைப்பாற நிழல் கொடுத்தாள்.. தலை சாய்க்க மடி கொடுத்தாள்..
"உன் மனசில இருந்த சந்தேகமெல்லாம் போயிருச்சா மிருதுளா..?"
"நான் உங்களை சந்தேகப் படலை.."
"அப்புறம் ஏண்டி விலகி ஓடின..?"
"உங்ககிட்ட இதைப் பத்திக் கேட்கிற தைரியம் எனக்கு இல்ல.. அதே சமயத்தில கேட்காம இருக்கவும் முடியல.."
"மிருதுளா.."
"ம்ம்ம்..."
"என்னைச் சுற்றி முள்வேலி இருக்குடி.. நீ தொட்டா உன் கையை அது குத்தும்.."
"பரவாயில்லை.."
"நீ அழகானவ.."
"உங்களை விடவா..?"
அந்தப் பதிலில் அவனது ஆண்மை கொண்ட கம்பீரத்தையும் கர்வத்தையும் மிருதுளா அறிய மாட்டாள்..
அவளைப் போன்ற அழகும்... மென்மையும்... துறுதுறுப்பும் நிறைந்த இளம் பெண்.. அவனைப் போல மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக நிற்கிறவனை விரும்புகிறாள் அவனிடம் மயங்குகிறாள் என்றால்.. இதைவிடப் பெரிதானது என்று உலகத்தில் அவனுக்கு எதுவும் உண்டா..?
விக்ரம் அவள் கை நழுவிப் போய் விடுவாளோ என்று பதட்டம் கொள்கிறவனைப் போல அவளை இறுக்கிக் கொண்டான்.. காதோரமாக கேட்டான்..
"என்னை விட்டுற மாட்டியே.."
அவன் குரலில் தொனித்த.. ஏக்கம்.. காதல்.. கவலை.. தாபம்.. வேட்கை போன்ற உணர்வுகளின் கலவையில் மிருதுளா அடித்துச் செல்லப் பட்டாள்.. தாள முடியாத தவிப்புடன் அவன் மார்பில் குத்தினாள்..
"ச்சே.. என்ன பேச்சுன்னு இதையே பேசி வைக்கறிங்க..?"

அவளின் அந்த அதீத கோபத்தில் அலாதியான பிரியத்தை அவள்மீது அவன் கொண்டான்.. மெல்லிசையாக அவன் மனதை தாலாட்டியது அவள் காதல்.. அதில் கண்மூடி சுகம் கண்டான் விக்ரம்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -52
இது நீரோடு செல்கின்ற ஓடம் -52
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam52.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam52.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy