உயிரே உனைத்தேடி -4

4 அறைக்கதவு மெதுவாக தட்டப்பட்டு , " மே ஜ கமின் சார்.." என்ற குரல் கேட்டது.. நினைவுகளில் இருந்து மீண்ட கிரிதரன் நிமிர்ந்து அம...

4

அறைக்கதவு மெதுவாக தட்டப்பட்டு, "மே ஜ கமின் சார்.." என்ற குரல் கேட்டது.. நினைவுகளில் இருந்து மீண்ட கிரிதரன் நிமிர்ந்து அமர்ந்தான்..
"யெஸ் கமின்.." என்றான் கம்பீரமான குரலில்..
அவனது செயலாளர் ஷீலா உள்ளே வந்தாள்.. அவள் கையில் ஒரு ஃபைல் இருந்தது.
"சென்னை தி.நகரில் நாம் கட்டிக் கொண்டிருக்கும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் ஃபைல் இது சார்.. நீங்கள் படித்துப் பார்த்து சைன் பண்ணிவிட்டால் துபாய்க்கு அனுப்பி விடலாம் சார்.." ஃபைலை நீட்டியவாறு கூறினாள் அவள்.
அவர்களது 'டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன்' கம்பெனியின் தலைமையகம் துபாயில் இருந்தது.. உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்தக் கம்பெனிக்கு கிளைகள் இருந்தன..
ஃபைலை படித்துப் பார்த்துக் கையெழுத்திட்ட கிரிதரன் ஷீலாவிடம் அதை நீட்டினான்.
"இந்தாங்க.. ம்ம்.. ஷீலா.. இன்று புதிதாய் ஒரு ஜூனியர் என்ஜினியர் ஜாயின் பண்ணுவதாக இருக்கிறாங் களே.. ஜாயின் பண்ணிவிட்டாங்களா.."
"நோ சார்.. இன்னும் அவங்க வரவில்லை.."
"ஐ ஸீ.. முதல்நாளே லேட்டா..? ஜாயின் பண்ணிய வுடன் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க.."
"ஓகே.. சார்.." அவள் மரியாதையுடன் கதவை ஓசைப் படாமல் சாத்திக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.
வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாயிருக்கும் இந்தக் காலத்தில் முதல் நாள் வேலையில் ஜாயின் பண்ண இப்படித் தாமதம் பண்ணலாமா..? என்று எண்ணமிடும் போதே அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.
அன்று கிரிதரன், 'எனக்கு என்றுமே நீங்கள்தான் வேண்டும் அப்பா..' என்று கூறியதற்கு பல காரணங்கள் இருந்தது போல்.
செல்வநாயகம் உமாவை அவளது அண்ணனி டமிருந்து பிரித்தற்கு அடிப்படைக் காரணம் அவருக்கு உமாவின் மேலிருந்த அளவு கடந்த காதல்.. உமாவைத் திருமணம் செய்து கொள்ள தில்லைநாயகமும் தமிழ் செல்வியும் தடையாய் இருந்திருந்தால் அவர்கள் உறவையே துண்டித்துக் கொண்டிருப்பார். அந்த அளவிற்கு உமாமகேஸ்வரியை அவர் நேசித்தார்.. ஆனால் அவளோ தன் அண்ணனை நேசித்தாள்.. 'நீ என்னைக் காதலிக் கிறவள்' என்று உரிமை கொண்டாடிய போது 'நான் உன்னைக் காதலிக்கவில்லை.. உன் காதலை ஏற்றுக் கொண்டேன்' என்று தேங்காய் உடைப்பது போல் அவர் மனத்தை உடைத்தாள்.
தன் காதலியுடன் வாழ்க்கை நடத்தும் உணர்வில் லாமல் தனபாலனின் தங்கையுடன் வாழ்க்கை நடத்தும் உணர்வையே தன்னையறியாமல் தன் காதலனுக்கு கொடுத்துவிட்டாள் உமாமகேஸ்வரி.
உரிமைப் போராட்டத்தில் ஜெயிக்க சொந்த மாநிலத்தை விட்டே மனைவியைக் கிளப்பி தன்னுடன் அழைத்துக் கொண்டு வடதேசம் சென்றுவிட்டார் செல்வநாயகம். அப்போதும் பிள்ளைகளைக் காட்டியே தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல நேர்ந்தது அவர் மனதை இன்னும் உறுத்திக் கொண்டிருப்பதை அறிவான் கிரிதரன்..
"நல்லவேளை.. கிரிதரனும், கவிதாவும் பிறந்து என் குழந்தைகளுக்கு நீ அம்மா ஆனாய்.. இல்லாவிட்டால் நீ உன் அண்ணனை விட்டுவிட்டு என் பின்னால் மும்பைக்கு வந்தே இருக்கமாட்டாய்.."
விளையாட்டாய் சொல்வதுபோல் அடிக்கடி குத்திக் காட்டுவார் செல்வநாயகம்.. உமாமகேஸ்வரி வாயைத் திறக்க மாட்டாள். இப்போதெல்லாம் அவள் எதுவும் அதிகப்படியாய் பேசுவதில்லை.. 'ஆமாம், இல்லை' என்ற ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக் கொள்வாள். அவளும்தான் என்ன செய்வாள்..? மனதில் இருப்பதை மறைக்காமல் கூறினாள்.. அதற்கு வாழ்க்கை முழுவதும் தண்டனை கொடுத்துக் கொண்டே இருந்தால் அவளது ஜீவன் வற்றிப்போய் விடாதா..?
உமாமகேஸ்வரி பெரிய குடும்பத்தில் பிறந்தவள். குடும்ப கௌரவம் பற்றிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். இசையை நேசித்தாள். இசையைப் படித்தாள்.. இசை ஆசிரியையாக பணியாற்றினாள்.. அவளது அழகைக் கண்டு செல்வநாயகம் காதல் வயப்பட்டார்.. உமா கூறியது போல் அவள் செல்வநாயகத்தைக் காதலிக்கவில்லை.. அவரது காதலைப் புரிந்து கொள்ளாமல் எப்படி அவளால் இருக்க முடியும்..? இசையை இசைக்கும் அவளால் காதலின் ஓசையை எப்படி உணராமல் இருக்க முடியும்..? செல்வநாயகத்தின் காதலின் வேகத்தை அறிந்தும் அவள் உடனே பதில் சொல்லவில்லை.. யோசிக்க அவகாசம் கேட்டாள். அடிபட்ட குழந்தையாய் அவரது முகம் சுணங்கியது..
யோசிக்க அவளுக்கு அவகாசம் கொடுத்த பின்னால் ஒவ்வொரு நாளும் தவித்த முகத்துடன் அவள் வரும் வழியில் தவமிருந்தார் செல்வநாயகம். அவளின் முகம் பார்க்கும் அவரின் கலங்கிய பார்வை திருவிழாவில் தொலைந்துபோய் தாயின் மடிதேடும் குழந்தையின் பார்வையாய் துடிக்க உமாவின் நெஞ்சம் அலைபாய்ந்தது. 'நீயே சகலமும்' என்று அவர் பார்வையால் உருக இசைபாடும் அவள் உள்ளம் இளகிவிட்டது.. அவர் காதலை ஏற்றுக் கொண்டாள்.
இதைத்தான் அவரிடம் சொன்னாள். சொன்ன அந்த ஒரு சொல் அவள் வாழ்வையே பந்தாடும் என்று அறிந்தா சொன்னாள்..? வாழ்வின் பயணத்தின் திசைகளை அறிந்தா பயணம் செய்கிறோம்..? அப்படி அறிந்துவிட்டால் அது ருசிக்குமா..? எதிர்பாராது நடப்பதுதானே வாழ்க்கை..
செல்வநாயகம் காதலை யாசித்தார்.. உமாமகேஸ்வரி அவர் கேட்ட காதலை பரிசளித்தார்.. காதலித்தவளையே கை பிடித்த பின்னும் செல்வநாயகத்தின் மனம் திருப்தி கொள்ளாமல் தவித்ததை உமாவால் ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனது.. 'உன் காதலை ஏற்றுக் கொண்டேன். கடமைக்காக உன்னுடன் வாழ்கிறேன்..' என்பதை எந்தக் காதலனின் உள்ளம் ஏற்றுக் கொள்ளும்..?
இதில் குற்றவாளி யார்..? ஒருத்தியைக் காதலித்து அவளையே கை பிடிக்கப் போராடி மணந்த பின்னும் அவள் மனதில் தான் மட்டும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்த செல்வநாயகத்தை குற்றம் சொல்வதா..?
இல்லை.. காதல் தவறென்று சொல்லி வளர்க்கப் பட்டும் உண்மையான காதல் கண்டு மனம் இளகி அவருக்கு காதலைப் பரிசளித்து தன் குடும்ப மானத்திற்கும் கௌரவத்திற்கும் தன்னால் பங்கம் வரக்கூடாது என்று வளர்த்த பாசத்திற்கு கட்டுப்பட்டு 'உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன். ஆனால் என் அண்ணனை மீறி உன்னுடன் வரவும் மாட்டேன்..' என்று காதலன் முகம் பார்த்துக் கூறிய பேதை உமாமகேஸ்வரியை குற்றம் சொல்வதா..?
இருவருமே குற்றவாளிகள் இல்லை.. இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள்.. அந்த நேசத்தை மறந்து ஒருவரால் ஒருவர் வதை படவும் செய்தார்கள்.. இருவருமே ஒருவரை ஒருவர் தண்டித்துக் கொண்டனர். அதனால் இருவருமே தண்டனையை ஏற்று வாழ்வில் நிம்மதியைத் தொலைத்தனர்..
பெற்றோரை நன்கு அறிந்தவன் கிரிதரன்.. சுடு சொல்லால் உமாவை மனம் புண்படப் பேசுவார் செல்வநாயகம். ஆனால் அவள் முகம் பாராமல் ஓர் நிமிடம் கூட அவரால் இருக்க முடியாது. உமாவின் மனமோ பிறந்த வீட்டில் சிக்கியிருந்தது. தங்கைக்காக தன் கௌரவத்தைப் பாராது தங்கை வீட்டின் படி மிதித்த அண்ணனின் முகம் நிழலாடியது. இறப்பதற்கு முன் பெற்ற பிள்ளைகள் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்று பரிதவித்த தாயின் முகம் நினைவில் ஆடியது.. ஒருவேளை செல்வநாயகம் அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்டிருந்தால் தனபாலனின் உறவை மதித்துப் போற்றியிருந்தால் முழுமனதாய் கணவனை மட்டும் நேசித்திருப்பாள் உமா.. செல்வநாயகம் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்..
கிரிதரன் அம்மா பிள்ளை. தாயின் மடியில் வளர்ந்து அவளின் இசையில் நனைந்து வளர்ந்தவன். அன்னையின் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டவன். கவிதா இயல்பாய் தந்தையிடம் ஒட்டிக் கொண்டு விட தாயின் மடி தங்கை பங்குக்கு வராமல் முழுமையாய் அவனுக்கு கிடைத்தது.. தாயின் முகத்தில் சிரிப்பைக் காண எது வேண்டுமானாலும் செய்வான். தாயின் முகம் வாடப் பொறுக்காத பிள்ளை அவன். அதனால்தான் விவரம் அறிந்த பதினாறு வயதுப் பிராயத்தில் அன்னையின் ஆணைக்கு கட்டுப்பட்டு
எட்டு வயது சிறுமியின் கழுத்தில் தாலி கட்டினான்.. 'அன்னையின் ஆணை மட்டும் தான் அந்த அவசரக் கல்யாணத்திற்கு அவனை ஒத்துக் கொள்ள வைத்ததா..?' என்ற கேள்வி அடிக்கடி அவனது மனதில் எழும்.
எட்டு வயதுப் பாலகனின் கையில் இவள்தான் உன் மனைவியென்று ஒரு குழந்தையைத் தாய் காட்டுகிறாள். குண்டுக் கன்னங்களுடன் தலை நிறைய முடியுடன் வண்டாடும் கண்களுடன் கொழுகொழுவென்ற அந்தக் குழந்தை அவன் கண் முன் வளர்ந்து நான்கு வயது மழலையாக நிற்கிறாள். அவளைக் கொஞ்சுவதில் கிடைத்த குதூகலம் வேறு எதிலும் கிடைக்காதவனாய் அந்த பனிரெண்டு வயதுப் பாலகன் மகழ்கிறான்.. விதியின் வழியே இருவரும் வேறு வேறு திசைகளில் பிரிகின்றனர். இடையில் ஒரு தரம் எட்டு வயதுச் சிறுமியை இரட்டைப் பின்னலோடு பட்டுப் பாவாடை சட்டையோடு பதினாறு வயதுப் பையனாகி இவன் நிற்கும்போது பார்க்கிறன்.. எதுவும் அறியாத அச்சிறுமியின் கழுத்தில் அறிந்தும் அறியாத வயதில் தாலியையும் கட்டுகிறான்.. அடி மனதில் அச் சிறுமியின் நினைவு வரும்போதெல்லாம் மனம் இதமாகும். அது அன்னையின் ஆணையினால் மட்டுமா வருகிறது..?
தாயின் ஆணையை ஏற்றுத் தாலிகட்டியவன் தந்தையின் ஆணையை ஏற்று அதைப் பொருட் படுத்தாமல் வாழ்வது எதனால்..? தந்தையிடம் அவன் கொண்ட பற்றுதலால்.. செல்வநாயகம் கொடுமைக்காரர் அல்ல.. மனைவியும் பிள்ளைகளும் தான் அவரது உலகம். அவர் அறியாமல் கிரிதரன் அந்தக் கல்யாணத் திற்கு உடன்பட்டது ஒரு வகையில் தவறு.
எதனால் உமா தன் அண்ணனை மீறி வரமாட்டேன் என்று சொன்னாளோ அதே பாசம்தான் கிரிதரனையும் கட்டிப் போட்டது. பெற்று வளர்த்த தந்தையின் மனம் ஏற்கனவே வருந்திக் கொண்டிருக்கிறது. மனைவியின் அன்பு முழுதாய் தனக்குக் கிடைக்கவில்லை என்று மறுகிக் கொண்டிருப்பவர் மகனின் அன்பும் முழுமையாய் தனக்குக் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வார்..?
ஏற்கனவே உமாவின் மனத்தை தன் வசம் இழுத்துக் கொள்ள முடியாததற்கு தனபாலன்தான் காரணம்
என்று பகை கொண்டிருப்பவர். இப்போது யார் உனக்கு வேண்டும்..? பெற்ற தகப்பனா..? தாய் மாமனா..? என்று கேட்டால் பெற்ற பிள்ளை என்ன பதில் கூற வேண்டும்.? அதைத் தான் கிரிதரன் கூறினான்..
'எனக்கு என்றுமே நீங்கள்தான் வேண்டும் அப்பா..'
கொதித்த உள்ளம் குளிர்ந்தது. செல்வநாயகம் அமைதியானார். உமாமகேஸ்வரி நடந்த குழந்தைத் திருமணத்தைப் பற்றி அதற்கு அப்புறம் ஒரு வார்த்தை கூட கிரிதரனிடம் பேசவில்லை.. அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் மகனிடம் நடந்து கொண்டாள். கணவனிடம் மட்டும் அளவோடு பேசி கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.. கவிதா இருந்த வரைக்கும் அவளை மையப்படுத்தி இருவரும் பேசிக் கொண்டனர். அவளும் திருமணமாகி, கணவனுடன் வெளிநாடு பறந்த பின்னர் பேசுவதற்கு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எதுவுமே இல்லாதது போல் ஓர் பனித்திரை விழுந்தது..
கிரிதரன் பி.ஈ. சிவில் என்ஜினியரிங் முடித்தவுடன் மேற்கொண்டு எம்.ஈ. படித்து முடித்தான். இருபத்தி மூன்று வயதில் பெங்களூர் டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். மாதத்திற்கு ஒரு முறை மும்பை சென்று பெற்றவர்களைப் பார்த்து திரும்பு வான்.. அவன் வந்து போகும் ஒரு தினத்தில் மட்டும் வீடு உயிர் பெறும்.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செல்வநாயகம் பெங்களூருக்கே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்..
"எனக்காக நீங்க வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு வர வேண்டுமா..? மும்பையில் இருந்து பழகிட்டீங்களே அப்பா.."
"இனி பெங்களூரில் இருந்து பழகிக் கொள்கிறோம்.."
"இருந்தாலும் அப்பா.. எனக்காக..."
"இது ஒரு வகையில் எனக்காக எடுத்த முடிவு கிரி. உன் அம்மா முகத்தை நானும் என் முகத்தை உன் அம்மாவும் பார்த்துக் கொண்டு எப்படி இருக்கிறது..? உன்னுடன் வந்து விட்டால் வீடாவது கலகலப்பாக இருக்கும்.."
செல்வநாயகத்தின் வார்த்தைகளில் 'உன் அம்மா கலகலப்பாய் இருக்க மாட்டேன் என்கிறாள்..' என்ற குற்றச் சாட்டு மறைந்திருந்தது. உமா மௌனமாக சமையலறைக் குள் புகுந்து கொண்டாள்.
கிரிதரனின் இருபத்தி ஆறாம் வயதில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார் செல்வநாயகம்.
"கிரி என்னுடன் மும்பையில் வேலை பார்த்த சாரங்கபாணி அவன் பொண்ணு மேகலாவை உனக்குக் கொடுக்கணும்னு விருப்பப்படறான்.. இரண்டே பெண்கள் தான்.. பெரிய பெண் திருமணமாகி சென்னையில் இருக்கிறது. இது இரண்டாவது பெண்.. பெயர் மேகலா. பி.ஈ. படிச்சிருக்கு.. இங்கே ஓர் இன்டர்நேஷனல் கம்பெனியில் வொர்க் பண்ணுது.. நாளைக்குப் பெண் பார்க்க வருகி றோம்ன்னு சொல்லியிருக்கிறேன். மறந்து விடாதே.."
டைனிங் டேபிளில் அமர்ந்து வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரியின் கைகள் ஒரு நொடி வேலையை நிறுத்தின.. அவர்களது பேச்சை அவள் கவனிப்பது புரிந்தது. கிரிதரன் தகப்பனாரை நிமிர்ந்து பார்த்தான்.
"அப்பா.. எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்.."
"கிரி.. உனக்கு இருபத்தி ஆறு வயதாகி விட்டது.."
"ஸோ வாட்.. எனக்குக் கல்யாணத்தில் விருப்பமில்லை.."
"போடா ஃபூல் இப்போது கல்யாணம் பண்ணாமல் எப்போது பண்ணுவது..?"
"எப்போதும் வேண்டாம்.."
செல்வநாயகம் திகைத்துப் போய் மகனைப் பார்க்க உமாமகnஸ்வரி மீண்டும் வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள். அவள் முகத்தில் அவள் எதிர்பார்த்த ஒன்று நடந்ததைப் போன்ற திருப்தி தென்பட்டது.
"என்னடா.. உன் அம்மாவைப் போல் நீயும் என்னைப் புண்படுத்துகிறாயா..?"
"அம்மாவை இதில் ஏன் இழுக்கிறீங்க அப்பா.. நான் உங்கள் மகன். உங்கள் மனதை புண்படுத்த நினைக்க மாட்டேன். நீங்களும் எனக்கு மதிப்புக் கொடுத்து என் விருப்பப்படி என்னை விட்டுவிடுங்கள்.."

இப்போது கிரிதரனுக்கு முப்பது வயதாகிறது.. இது வரையில் திருமணத்தை தவிர்த்தே வருகிறான்.. எதிலும் தோற்காத செல்வநாயகம் இந்த விசயத்தில் கிரிதரனின் மனதைத் திருப்ப முடியாமல் விட்டு விட்டார்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -4
உயிரே உனைத்தேடி -4
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy