உயிரே உனைத் தேடி -3

3 மேஜை மேலிருந்த டெலிபோன் ஒலித்தது. எடுத்த கிரிதரன் , "ஹலோ டால்பின் கன்ஸ்ட்ரக்ஸன் சீஃப் என்ஜினியர் ஸ்பீக்கிங்" என்றான். ...

3

மேஜை மேலிருந்த டெலிபோன் ஒலித்தது. எடுத்த கிரிதரன்,
"ஹலோ டால்பின் கன்ஸ்ட்ரக்ஸன் சீஃப் என்ஜினியர் ஸ்பீக்கிங்" என்றான்.
மறுமுனையில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு விளக்கம் அளித்து போனை வைத்தான். மேஜை மேலிருந்த தபால்களை ஆராய்ந்தான். மனம் மீண்டும் தாயிடம் ஓடியது.
"செல்வா சொல்கிறேன்னு தப்பா நினைக்காதே.." தமிழ்செல்வி பீடிகை போட்டாள்.
"சொல்லுங்க அண்ணி.." செல்வநாயகம் பேப்பரை கீழே போட்டபடி வினவினார்.
"பாரு செல்வா.. ஊரில் உலகத்தில் அண்ணன் தங்கைன்னு இருக்கிறதுதான். அதற்காக மூச்சுக்கு முந்நூறு தடவை உன் பெண்டாட்டி அண்ணன் புராணம் பாடுவதும்.. வருசத்தின் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் உன் மச்சினர் அவர் மகளோடு இங்கே வந்து விடுவதும்.. எனக்கென்னவோ பிடிக்கவில்லை.."
"எனக்கும்தான் பிடிக்கவில்லை.. ஆனால் என்ன செய்வதுன்னு தெரியவில்லையே.."
"பேசாமல் கண்ணுக்கு எட்டாத தெலைவில் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய்விடு. பாஷை தெரியாத ஊரானாலும் பரவாயில்லை.."
செல்வநாயகம் யோசிக்க ஆரம்பித்தார். தன் ஆணி வேரையே ஆட்டிவைக்க தன் கணவனின் அண்ணி செய்த சதி வேலை அறியாதவளாய் தன் அண்ணன் மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் உமாமகேஸ்வரி.
"என்ன அழகாய் இருக்காள் பாருங்கண்ணா என் மருமகள்.."
"உன் மருமகள்ன்னு சொல்லிட்டே.. உன்னைப் போல் அழகாய் இருக்க வேண்டாமா.. அதனால்தான் அழகாய் பிறந்திருக்கிறாள்.."
"அண்ணியை ஏன் அண்ணா கூட்டி வரவில்லை..?"
"அவளுக்கு வர முடியலைடா.. அதைவிடு.. நானும் உன் மருமகளும் தான் அடிக்கடி வருகிறோமே.. அது போதாதா..?"
உமாமகேஸ்வரியின் மனம் வலித்தது. அவளது அண்ணன் தனபாலனின் மனைவி மிகப் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். தனக்கு மணமான மறுவருடமே தன் அண்ணனின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தாள் உமாமகேஸ்வரி. ஊர் மெச்ச சீர்வரிசைகளோடு வந்தவள் புவனேஸ்வரி. பிறந்த வீட்டின் செல்வாக்கும் புகுந்த வீட்டின் பரம்பரைப் பெருமையும் அவளது ரத்தத்தில் கலந்து இருந்தன. தமிழ்செல்வியின் ஜாடைப் பேச்சுக்களை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
"இங்கே பாருங்க... உங்கள் தங்கைக்காக நீங்கள் சுரணையில்லாமல் இருக்கலாம். நான் அப்படி இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. என் கால் தூசி பெறுவாளா உங்க தங்கை புருசனின் அண்ணிகாரி..? அவள் எகத்தாளம் பேச நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா..?"
'வேண்டாம்..' என்று மனைவியை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் தனபாலன். தங்கை குடும்பத்தினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் அவர். மனவருத்தம் தன்னோடு போகட்டும் தன் மனைவியையும் அது அண்ட வேண்டாம் என்பது அவரது எண்ணம்.
உமாமகேஸ்வரி வேறு வருத்தத்தில் இருந்தாள்.. அவளுக்குத் திருமணமாகி கிரிதரன் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து கவிதாவும் பிறந்துவிட்டாள்.
புவனேஸ்வரி குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அப்படியே இருப்பதுபோல் தனபாலன் வரும்போதெல்லாம் தமிழ்செல்வி துக்கம் விசாரிப்பாள்..
"என்னங்கண்ணா.. உங்க பெண்டாட்டி அப்படியே சின்னப் பொண்ணு போல இருக்கணும்ன்னு வரம் வாங்கிட்டு வந்திருக்காங்களா..? உங்க தங்கை ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு பெத்தாச்சு.. உங்க வீட்டில் குவா குவா சத்தத்துக்கு வழி பிறக்கலையா..?"
"அது வரும்போது வரட்டும்மா.."
"இனி எப்ப வரப்போகுது..?"
"அக்கா.." எப்போதும் பொறுமையாய் போகும் உமாமகேஸ்வரி அன்று வெடித்து விட்டாள்.
"பத்து வருசம் கழித்து பெத்துக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா..? ஏன் எனக்கு கிரிதரனுக்கு அப்புறம் கவிதா பிறந்து விட்டாள். உங்களுக்கு சசிதரன் மட்டும்தானே.. அதை நான் சொல்லிக் காட்டுவதா..?"
தமிழ்செல்விக்கு மனம் ஆறவில்லை. தனபாலன் போன பின்னால் வீடு வந்த செல்வநாயகத்திடம் வந்து,
"செல்வா.. சொல்கிறேன்னு தப்பா நினைக்காதே.." என்று ஆரம்பித்து அன்று நடந்த சம்பவத்தை கண், காது, மூக்கு வைத்து பற்ற வைத்தாள்.
"நான் உன் அண்ணிங்கிற பாசமெல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட இல்லை செல்வா. அவளோட அண்ணன்தான் அவளுக்கு முக்கியம். நான் வேறு ஒரு கூறு கெட்டவ.. அவளுக்கு நீயே பெரிசில்லை. அப்புறம் நான் எப்படிப் பெரிசாத் தெரிவேன்..?"
அன்று முதன் முறையாக செல்வநாயகம் உமாவை அறைந்தார். கிரிதரனை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க மகனின் பார்வையில் குற்ற உணர்வு கொண்டவராய் விலகி நடந்தார்.
அன்று உமா விட்ட கண்ணீரின் பலனோ என்னவோ கிரிதரன் பிறந்து எட்டு வருடம் கழித்து தனபாலனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை எடுத்து வந்து காட்டிய நர்சிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட உமாமகேஸ்வரி கிரிதரனிடம் காட்டி பரவசத்துடன் கூறினாள்.
"கிரி.. இவள்தாண்டா உன் பெண்டாட்டி.."
கிரிதரன் ஆர்வத்துடன் அந்தப் பெண் குழந்தையைப் பார்த்தான். ரோஜாக் குவியல் போல் அழகாய் கை கால்களை அசைத்துக் கொண்டு சிரித்தது அந்தக் குழந்தை. அதே
நேரம் தமிழ்ச்செல்வியின் விழிகளும் செல்வநாயகத்தின் விழிகளும் சங்கேதமாய் பேசிக் கொண்டன.
வீட்டிற்கு வந்ததும் தமிழ்செல்வி மைத்துனனிடம் ரகசியமாய் கூறினாள்.
"செல்வா.. சொல்கிறேன்னு தப்பா நினைக்காதே.. இப்பவே உன் பெண்டாட்டிக்கு அண்ணன் வீட்டுப் பெருமைதான் எப்போதும். இதில் அண்ணன் மகளை தன் பிள்ளைக்கு கட்டிவைத்துவிட்டால் உன்னைத் தூக்கி எல்லோரும் மூலையில் வைத்து விடுவார்கள். ஜாக்கிரதை."
"அண்ணி.. குழந்தையே இப்போது தான் பிறந்தி ருக்கிறது. அவள் என்னவோ அண்ணன் மகள் என்கிற ஆசையில் ஒரு வார்த்தையை விட்டுவிட்டாள். அதையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்குகிறீங்க.. கல்யாணம்கிற பேச்சிற்கு இன்னும் எத்தனையோ வருசங்கள் இருக்கின்றதே.."
"நீ நினைத்துக்கிட்டே இரு.. இப்ப விதைக்கிறதுதான் செடியாகி மரமாகும்.. முளையிலேயே கிள்ளி எறி.. சொல்லிவிட்டேன்.."
"பேசுகிற வாயை மூட முடியுமா..?"
"அது உன் சாமர்த்தியம்.."
செல்வநாயகம் எவ்வளவுதான் சாமர்த்தியமாய் இருந்தாலும் காற்றை அணை போட முடியுமா..?
உமா தன் அண்ணன் மகளைக் காட்டி மகனிடம் கூறுவாள்.
"பார்த்துக்கடா கிரி.. என்னைக்கு இருந்தாலும் இவள் தான் உன் பெண்டாட்டி.."
கிரிதரன் எட்டு வயது சிறுவன். அவனிடம் ஓர் உயிருள்ள பொம்மையைக் காட்டி இது உன்னுடையது என்று சொல்லி வளர்த்தாள். அது அவன் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அவன் குழந்தையிடம் விளையாடும் போது தன்னுடையது என்ற உணர்வுடன் விளையாடினான்.
வருடங்கள் நான்கு ஓடின.. பனிரெண்டு வயது கிரிதரனுக்கு குண்டுக் கன்னங்களுடன் மழலை பேசும் நான்கு வயது மாமன் மகளிடம் ஓர் பிரியம் விழுந்தது.. அடிக்கடி அவளது குண்டுக் கன்னங்களை அழுந்தக் கிள்ளி விளையாடுவது அவனுக்கு பிடித்த பொழுதுபோக்கு.. அப்படிக் கிள்ளி விடும்போது அவள் அழுது கொண்டு உமாவிடம் ஓடிவிடுவாள்.. கிரிதரன் எவ்வளவு வருந்திக் கூப்பிட்டாலும் அவனிடம் வரமாட்டாள்..
அப்போது உமா பாடிக் காட்டிய திரைப்பட பாடல்தான் அது..
    'நெஞ்சம் அலைமோதவே கண்ணும் குளமாகவே
      கொஞ்சும் கண்ணன்மேல் கோபமாய் போகிறாள்-ராதை
      கண்ணன் மேல் கோபமாய் போகிறாள்..'
அதன் பின் அப்பாடலைப் பாடித்தான் மாமன் மகளைக் கொஞ்சுவான் கிரிதரன். அவர்களது அந்த சொந்தம் கொண்டாடிய விளையாட்டை செல்வநாயகம் ரசிக்கவில்லை. ஓர் நாள் வரும்போது கையில் மாறுதல் உத்தரவுடன் வந்தார்..
"உமா.. எனக்கு மஹாராஷ்டிர மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் வந்திருக்கிறது. நாம் அடுத்த வாரம் கிளம்ப வேண்டும்."
"என்னது அடுத்த வாரமேவா.."
"ஆமாம்.. இன்னும் ஒரு வாரம் இருக்கு. சாமான் களை கட்டி வை.."
"ஏங்க பாஷை தெரியாத ஊரில் போய் கிரியையும், கவியையும் படிக்க வைப்பதா..? அவர்கள் படிப்புக் கெடாதா..?"
"மெட்ரிகுலேஷன் படிப்பை எங்கே படித்தால் என்ன?"
"இல்லை.. நீங்க வேணும்னால் போய் ஜாயின் பண்ணிவிட்டு திரும்பவும் இந்தப் பக்கம் டிரான்ஸ்பர் வாங்க முயற்சி பண்ணுங்களேன். நான் குழந்தைகளோடு இங்கேயே இருக்கிறேன்.."
'பளார்..' என்று கன்னத்தில் அறை விழுந்தது அவளுக்கு..
"ஏண்டி... நானும் இன்னைக்கு மாறுவாய் நாளைக்கு மாறுவாய்ன்னு பொறுமையாய் போய் பார்த்துவிட்டேன். என் பொறுமை எல்லை மீறிவிட்டது.. எவ்வளவு தூரத்திற்கு உனக்கு உன் அண்ணன் மேல் பாசமிருந்தால் கட்டிய புருசன் கூட வர யோசிப்பாய்..? இரண்டில் ஒன்று எனக்கு இப்போது தெரிய வேண்டும். ஒன்று நீ எனக்கு பெண் டாட்டியாக மட்டும் இருக்கணும்.. இல்லை யென்றால் உன் அண்ணனுக்கு தங்கையாக மட்டும் இருக்கனும். எப்படி இருக்க வேண்டும் என்பதை நீயே முடிவு பண்ணிக்க.. என்னடி.. வாயைத் திறந்து பதில் சொல்லு.. என் பெண்டாட்டியா இருக்கிறாயா..? இல்லை உன் அண்ணனுக்கு தங்கையாய் மட்டும் இருக்கிறாயா..? ஆனால் ஒன்று.. எனக்குப் பெண்டாட்டியாய் மட்டும் இருப்பதாக இருந்தால் மட்டுமே என் பிள்ளைகளுக்கு நீ அம்மாவாய் இருக்க முடியும்.. சும்மா அண்ணன் தங்கைன்னு 'பாசமலர்' கதை விட்டாயானால் என் பிள்ளை களைக் கூட்டிக் கொண்டு மும்பைக்கு ரயிலேறி விடுவேன். எவ்வளவு பாடுபட்டு கம்பெனியில் எவன் எவனின் காலைப் பிடித்து இந்த டிரான்ஸ்பர் ஆர்டரை வாங்கி இருக்கிறேன்.. நீயானால் என்கிட்டயே உன் 'டகுல்பாட்சா..' வேலையைக் காண்பிக்கிறாய்.." செல்வநாயகம் ஆடித் தீர்த்துவிட்டார்.
அடங்கிப் போனவளாய் கணவனைப் பின் தொடர்ந்தாள் உமாமகேஸ்வரி.. அதன்பின் நான்கு ஆண்டுகளாய் பிறந்த வீட்டுத் தொடர்பே இல்லை.. உமாமகேஸ்வரிக்கு தனபாலனிடமிருந்து வந்த கடிதங்கள் கிழிக்கப்பட்டன. அவள் கடிதம் எழுதத் தடை விதிக்கப்பட்டது.
சிறகுகள் வெட்டப்பட்ட கூண்டுக்கிளியானாள் உமா. வீணையும் இசையும் மட்டுமே அவளுக்குத் துணை. அப்போதுதான் அது நிகழ்ந்தது.
ஊரிலிருந்து அவளது தாய் ராஜம்மாள் மரணப் படுக்கையில் இருப்பதாய் தகவல் வந்தது. தாயைப் பார்க்க மனைவி தவித்த தவிப்புத் தாங்காமல் செல்வநாயகம் குடும்பத்துடன் மும்பையிலிருந்து கிளம்பி மாமியார் வீட்டிற்கு வந்து இறங்கினார்.
பதினாறு வயது கிரிதரன் பழைய பாசத்தில் தனபாலனிடம் ஒட்டிக் கொள்ள பனிரெண்டு வயது கவிதா தந்தையிடமிருந்து விலகி தாய் வீட்டுச் செந்தங்களிடம் பேச மறுத்தாள்.
மகளைப் பார்க்க மூச்சை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த ராஜம்மாளைப் பார்த்ததும் கதறித் தீர்த்து விட்டாள் உமாமகேஸ்வரி.. எட்டு வயது மாமன் மகளிடம் பழைய நினைவில் கன்னங்களைக் கிள்ளி வம்புக்கு இழுத்தான் கிரிதரன்.. அவள் பேசாமல் விலகி ஓடி உமாவைக் கட்டிக்கொள்வதை ரசித்துச் சிரித்தான்
அவன்.
மாமியார் வீட்டில் மரியாதைக்காக சிறிது நேரம் தங்கிய செல்வநாயகம் அண்ணன் வீடு இருக்கும் தஞ்சாவூருக்கு சென்று வருவதாகக் கூறிக் கிளம்பி விட்டார்.. கவிதாவும் ஒட்டுப்புல் போல் அவருடன் ஒட்டிக் கொண்டு சென்று விட்டாள்..
படுக்கையில் மூச்சிறைக்கப் படுத்திருந்த ராஜம்மாள் தன் மக்களைப் பார்த்தாள். தனபாலனும், உமாமகேஸ் வரியும் தாயின் இருபக்கமும் அமர்ந்தனர். ராஜம்மாளின் கரங்களைப் பிடித்துக் கொண்டனர். ராஜம்மாள் மெல்லிய குரலில் நிதானமாக ஆனால் தெளிவுடன் பேசினாள். தனபாலனுக்கு பயம் வந்தது. அணையப் போகும் விளக்குத்தானே சுடர் விட்டு எரியும்..?
"நான் பெத்த கண்ணுகளா.. நகமும் சதையுமாய் இருந்தீங்களே.. இப்ப காத்திலே அந்து போன காத்தாடி போல ஆளுக்கு ஒரு திசையில் அல்லாடுறீங்களே.. செல்வங்களே.."
"அம்மா.. அலட்டிக்காம படு.. தங்கச்சி எங்க இருந்தலும் புருசன், புள்ளைகன்னு சந்தோசமாத்தானே இருக்கு.. அப்புறம் உனக்கு என்ன மனக்குறை..?"
"ஏன் ராசா.. தங்கச்சி கண் காணாத தேசம் போயிட் டால் அவ உறவு அப்படியே அறுந்துப் போய் விட விட்டு விடலாமா..?"
"வேறு என்ன அம்மா செய்ய முடியும்..? மூணு முடிச்சுப் போட்டவர் கூப்பிடும்போது அவ தட்டாமல் அவர் பின்னாலே போய்த்தானே ஆகணும்..?"
"போகட்டும்.. தாராளமா போகட்டும்.. ஆனால் நல்லது கெட்டதுன்னு பிறந்த வீட்டிற்கு வரப்போக இருக்கணும் ஜயா.. இப்படி யாரோ மாதிரி விலகிப் போய் விடக்கூடாது.. நான் கண்ணை மூடிவிட்டால் நான் பெத்த ராஜாத்தி அப்புறம் பிறந்த வீடுன்னு இந்த வீட்டிற்கு வருவாளோ மாட்டாளோன்னு என் ஆவி துடிக்குது ஜயா.."
"அதுக்கு நான் என்ன செய்யட்டும் அம்மா..?"
"உன் பெண்ணை அந்த மூன்று முடிச்சு பந்தத்தில் உன் தங்கச்சி மகனிடம் ஒப்படைத்துவிடு. அதுக்குப் பின்னால் உங்க சொந்தம் அறுந்து போகாது ராசா.."
"அம்மா.. அப்படியே ஆகட்டும்.. என் மகன் கிரிதரனுக்கு என் அண்ணன் மகளையே கட்டி வைக்கிறேன்.. நீ நிம்மதியாய் இரு அம்மா.."
"உமா.. என் கண்ணே.. நாளைக்கு நடப்பதை யாராலும் சொல்ல முடியாது.. இப்பவே என் கண் முன்னாலேயே என் பேரன், பேத்தி கல்யாணத்தை நடத்திக் காட்டுங்கள். சொந்தம் விட்டுப் போகலைங்கிற நிம்மதியில் என் கட்டை வேகும்.. நான் பெற்ற பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவா நிற்கும்கிற அமைதியை எனக்குக் கொடுங்க நான் பெத்த மக்களே.."
ராஜம்மாள் கண் திறக்காமல் அரற்றினாள். தனபாலன் திகைத்தார்.. உமாமகேஸ்வரிக்கு எங்கிருந்து அந்த தைரியம் வந்தது என்று அன்று போல் இன்றும் நினைத்துக் கொண்டான் கிரிதரன்..
கணவன் அருகில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டாள் அவள்.. ராஜம்மாளை எழுந்து அமரவைத்து உற்றார் உறவினரை உள்ளூரில் இருந்தவர்களை மட்டும் அழைத்து ஜயர் வைத்து அக்கினி வளர்த்து மந்திரம் ஓதி திருமணச் சடங்குகளை எந்தக் குறையும் இல்லாமல் நடத்தினார்கள்.
தனபாலனின் பட்டு வேட்டியையும், சட்டையையும் அணிந்திருந்த பதினாறு வயது கிரிதரன் பொம்மைக்கு சுற்றியது போல் தாயின் புடவையை கட்டிக் கொண்டு அருகே அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த எட்டு வயது மாமன் மகளின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
கண் குளிர பேரன் பேத்தியின் திருமணத்தைப் பார்த்த ராஜம்மாள் மனநிறைவுடன் கண் மூடினார். தஞ்சாவூருக்கு போன் போட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்வநாயகம் வந்து சேர்ந்தார்.. துக்க வீட்டில் அருகே அமர்ந்து இருந்த உறவினர் செல்வநாயகத்தின் காதைக் கடித்து விசயத்தைக் கூற அவரின் கண்கள் சிவந்தன..
இறுதிக் காரியங்கள் முடிந்ததும் மனைவியிடம் வந்து "கிளம்பு" என்றார்.. தனபாலன் அருகே வந்து, "மாப்பிள்ளை" என்று ஆரம்பித்தார்.. அவரைப் பேச விடாமல் கை அமர்த்தினார் செல்வநாயகம்.
"இங்கே என்ன கூத்து நடந்ததுன்னு எனக்குத் தெரியும்.. யாரைக் கேட்டு பொம்மைக் கல்யாணம் பண்ணினீங்க...? என் மகன் சிறுப்பிள்ளை.. படிக்கும் பையன்.. அவன் மனதைக் கெடுக்கப் பார்க்கிறீங்களா..?"
"மாப்பிள்ளை... சாகக் கிடந்த என் அம்மாவின் மன நிம்மதிக்காக இந்தக் கல்யாணத்தை நடத்தினோம்.. என்றைக்கு இருந்தாலும் அவள் உங்கள் வீட்டு மருமகள் தானே.."
"கனவு காண வேண்டாம்.. என் மகனுக்கு எந்த நாளும் உங்கள் மகள் மனைவியாக முடியாது.. நான் விடமாட்டேன்.."
"இப்போது திருமணம் முடிந்து விட்டதே மாப்பிள்ளை.."
"போய் போலீசில் சொல்லுங்கள்.. உங்களைத் தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள்.. 'பால்ய விவாகம்' செய்வது சட்டபடி குற்றம். தெரியுமா..? நடந்தது பொம்மை கல்யாணம். செல்லாது.. உங்கள் வழியில் நீங்கள் போங்கள்.. எங்கள் வழி எங்களுக்கு.."
"மாப்பிள்ளை.. மாப்பிள்ளை.." என்று தனபாலன் கெஞ்ச,
"அண்ணா.. ஏன் இவரிடம் கெஞ்சுகிறீங்க.. உங்க மகளுக்கு தாலிகட்டியது கிரிதரன்.. அவனுக்கு பொறுப்பு இருந்தால் உங்க மகளைக் கைவிட மாட்டான். இது பொம்மைக் கல்யாணமா இல்லை உண்மைக் கல்யாண மான்னு அவன் முடிவு பண்ணிக் கொள்ளட்டும்.. நீங்க பேசாமல் இருங்க..." என்று உமாமகேஸ்வரி அதட்டி விட்டு கணவனுடன் கிளம்பிப் போய்விட்டாள்.
மும்பையில் வீட்டுக்குள் நுழைந்ததும் மகனை அழைத்துக் கூறினார் செல்வநாயகம்.
"கிரி.. உன் தாய் மாமனுக்கும் எனக்கும் ஆகாது.. உன் அம்மாவிடம் அன்று உனக்கு புருசன் வேண்டுமா அண்ணன் வேண்டுமா இரண்டில் ஒன்றைக் தேர்ந்தெடு என்று கூறினேன். அதே தான் உனக்கும்.. உனக்கு அப்பா வேண்டுமா இல்லை உன் மாமன் வேண்டுமா..? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு.."
உமாமகேஸ்வரி உன்பாடு உன் தகப்பன் பாடு என்பது போல் பார்த்துக் கொண்டு நிற்க கிரிதரன் கூறினான்.
"என்றுமே எனக்கு நீங்கள் தான் வேண்டும் அப்பா.."

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத் தேடி -3
உயிரே உனைத் தேடி -3
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy