உயிரே உனைத்தேடி -15

15 கிரிதரன் அறைக் கதவைக் தாழிட்டான். உமா மகேஸ்வரியை அமரச் சொல்லி தானும் அருகே அமர்ந்தான். "எதுக்குடா கிரி இவ்வளவு பதட்டப்படுகிற...

15

கிரிதரன் அறைக் கதவைக் தாழிட்டான். உமா மகேஸ்வரியை அமரச் சொல்லி தானும் அருகே அமர்ந்தான்.
"எதுக்குடா கிரி இவ்வளவு பதட்டப்படுகிறாய்..?"
"காரணம் இருக்கும்மா.. அந்த ஆர்த்தியுடைய சர்வீஸ் பைலைப் பார்த்தேன்.."
"பார்த்தாயா.. வெரிகுட்.. என்ன கண்டுபிடித்தாய்..?"
"அம்மா.. அவளின் அப்பா பெயர் தனபாலன், அம்மா பெயர் புவனேஸ்வரின்னு போட்டிருக்கும்மா.."
"கடவுளே.. நான் இதுவாக இருக்குமோன்னு நினைத்தேன். நீ இதுவேதான்னு கையில் கொடுத்து விட்டாய்.. நன்றி கடவுளே நன்றி..." உமாமகேஸ்வரி கரம் குவித்தாள்.
"என்னம்மா சொல்கிறீங்க... தனபாலன்கிறது நம் மாமா பெயர் இல்லையா..? புவனேஸ்வரி.. அத்தையின் பெயர்.. ஆனால் மாமா பெண்ணின் பெயர்.. 'அம்மு' வாயிற்றே.. இவள் ஆர்த்தி அல்லவா..?"
"போடா முட்டாள்.. உன் மாமன் மகளின் பெயர் ஆர்த்திதான்.. 'அம்மு'ங்கிறது கூப்பிடும் செல்லப் பெயர். இத்தனை நாளாய் இது உனக்குத் தெரியாதா..?"
"ஓ மை காட்.. இது எனக்குத் தெரியாதே.. தெரிந்திருந்தால் அப்போதே அவளைக் கண்டுபிடித்து இருப்பேனே.. அம்முதான் ஆர்த்தியா..? ஆர்த்திதான் அம்முவா..? அதனால்தான் வந்த உடனே பார்த்த ஞாபகம் இல்லையோன்னு பாடினாளா.. அதிலும் புதிய பறவை யென்று எனக்கு அப்போதே தெரியாமல் போய் விட்டதே.."
"தெரிந்திருந்தால் என்னடா செய்திருப்பாய்..." உமா மகேஸ்வரி மகிழ்வோடு கேட்டாள்.
"அவளுடைய குண்டுக் கன்னங்களைப் பிடித்து கிள்ளியிருப்பேன்..." கிரிதரன் மனம் விட்டுச் சிரித்தான்.
"அவள் 'அத்தை ஊம் ஊம்'ன்னு அழுது கொண்டு என் முந்தானையின் பின் ஒளிந்திருப்பாள்.." உமா மகேஸ்வரி பழைய நினைவில் மிதந்தாள்..
"நான்... 'ஏய் முட்டைக்கண்ணு...' வெளியில் வான்னு மிரட்டியிருப்பேன்.." கிரிதரனும் பழைய நினை விற்குச் சென்றான்.
"அவள் இப்போது எப்படியடா இருக்கிறாள்..?" ஆவலுடன் வினவினாள் உமாமகேஸ்வரி..
"அடையாளமே தெரியவில்லையம்மா.. நன்றாக வளர்ந்திருக்கிறாள்.." கிரிதரனின் கண்களில் மயக்கம் பிறந்திருந்தது.
"அடையாளம் தெரிந்திருந்தால்தான் அவளிடம் மாட்டு வாங்கியிருக்க மாட்டாயே.. என் மருமகள் வீரத் தமிழச்சிடா.. என்னமாய் மாட்டு மாட்டுன்னு உன்னை மாட்டித் தள்ளி விட்டாள்.." உமாமகேஸ்வரி ரசனையுடன் கூறினாள்.
"அவள் 'மாட்டு மாட்டு'ன்னு மாட்டினாளோ இல்லை யோ பாட்டுப் பாடி என்னைக் கலங்கடித்து விட்டாள்.. பாடினாளே ஓர் பாட்டு.. 'என் பார்வை உனக்கு ரகசியமா' ன்னு.. மோகினிதான் வந்து விட்டதோன்னு அரண்டு போய் விட்டேன்..." கிரிதரன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.
"அவள் உரிமையுள்ளவன் என்பதால்தான் 'உன் வானத்தில் நானொரு நிலவில்லையா..?'ன்னு பாடியிருக் கிறாள். உன் தலையில்தான் அது ஏறவில்லை. உன் வம்சமே எதையும் புரிந்து கொள்ளாத வம்சம்தானே.." மகனை வம்புக்கு இழுத்தாள் உமாமகேஸ்வரி.
"நாங்கள் புரிந்து கொள்ளாத மர மண்டைகள் தான்.. ஆனால் ஒன்றை நினைத்தால் அதை மட்டும்தான் கை பிடிப்போம். வேறு ஒன்றை மனதாலும் நினைத்துப் பார்க்க மாட்டோம்.. என் வம்சம் ராமனின் வம்சம்.." சட்டைக் காலரைக் தூக்கி விட்டுக் கொண்டான் மகன்.
"ஆமாமாம்.. உன் பரம்பரைப் பெருமையை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்.. ராமர் சீதையை கைப்பிடிக்க மிதிலைக்குப் போனார். உன்னைக் கைபிடித்தவளோ உன் னைத் தேடி நீயிருக்கும் பெங்களூருக்கு வந்திருக்கிறாள்.."
"மெல்ல... அம்மா... மெல்ல பிறந்த வீட்டுப் பெருமை பேசுவதென்றால் உங்களுக்கு வெல்லம் சாப்பிடுகிற மாதிரி இனிக்குமே.. அப்புறம் ஏன் அப்பா மலையேற மாட்டார்..? நீங்கள் கழுத்தை நொடிக்கும் நொடிப்பில் உங்கள் கழுத்து சுளுக்கிக் கொள்ளப் போகிறது.. உங்கள் மருமகள்தான் 'உன் வாசல் தேடி வர வில்லையா..?'ன்னு போன மாதமே பெருமையாய் பாடி விட்டாளே.. நீங்களும் ஏன் பின்பாட்டுப் பாட வேண்டும்.." கிரிதரன் உற்சாகமாய் கூறினான்.
"சரிடா.. இனி என்ன செய்யப் போகிறாய்..?" உமா மகேஸ்வரி கேட்டாள்.
"என்னம்மா இது. திட்டமெல்லாம் வகுத்துக் கொடுத்து அவளைக் கண்டுபிடிக்க வைத்து விட்டு இப்போது நீங்கள் கழன்று கொள்கிறீர்களே..." கிரிதரன் மனத்தாங்கலுடன் வினவினான்.
"கழன்று கொண்டு நான் பாதுகாப்பாய் இருந்து கொண்டு உன்னைப் போர் புரிய அனுப்புகிறேன் பார்.. சொல்லிக் காட்டுகிறாய்.. கிரி.. நீ அவளைக் கை பிடித்தவன்.. நீதான் என்ன செய்ய வேண்டும்ன்னு முடி வெடுக்க வேண்டும். நான் இன்வால்வ் ஆனேன்னு வை. ஆர்த்திக்குத் தெரிந்தால் அத்தை சொல்லித்தானே நீ என்னைத் தேடி வந்தாய்ன்னு உன் மேல் கோபப்படுவாள்." உமாமகேஸ்வரி விளக்கினாள்.
"அட ஆமாம்.. அப்படி ஒன்றும் இருக்குது இல்லை..? அவள் கட்டாயம் கோபப்படுவாள். ஐடியா.. அம்மா நான் அவளைக் கோபப்படுத்திப் பார்க்கப் போகிறேன்.." கிரிதரன் துள்ளி எழுந்து அமர்ந்தான்.
"போட்ட சண்டையெல்லாம் போதாதா..? புதிதாய் சண்டை போடப் போகிறாயா..? டூயட் பாடும் உத்தேசம் இல்லையா..?" உமாமகேஸ்வரி கிண்டலாய் வினவினாள்..
"டூயட் பாடத்தான் போகிறேன் அம்மா.. அதற்கு முதல் அவள் என்னுடன் விளையாடிய கண்ணாமூச்சியை அவளுடன் நான் விளையாட வேண்டாமா..?" கிரிதரன் குறும்பு கொப்பளிக்க வினவினான்.
"என்னவோ செய்.. நீயாச்சு.. உன் மாமன் மகளாச்சு.. நான் ஊடே வரவில்லை.. இப்போது கீழே போகலாமா.. உன் அப்பா வருமுன்னர் டிபன் செய்து வைக்க வேண்டும்.. வரும் போதே, 'பசி, பசி'யென்று வருவார்..." உமாமகேஸ்வரி எழுந்து கொண்டாள்.
தந்தையின் மேல் தாய் காட்டும் பாசத்தையும், அக்கறையையும் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டான் கிரிதரன். 'பாராமுகம்' எல்லாம் உமாமகேஸ்வரி
போடும் பொய் வேஷம். தன் மனதிற்குள் ஒளித்து வைத்திருக்கும் அன்பை என்றுதான் வெளிக்காட்டப் போகிறாளோ..
கிரிதரன் தோளைக் குலுக்கிக் கொண்டு உடை மாற்றச் சென்றான். அவன் கீழே இறங்கி வரும்போது செல்வநாயகம் வந்திருந்தார்..
"என்னடா கிரி.. இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாய்.."
"நான் அப்போதே வந்து விட்டேன் அப்பா.. நீங்கள் வீட்டில் இல்லை.."
"அடடா.. நீ வர லேட்டாகும் என்றுதான் என் பிரண்டைப் பார்க்கப் போனேன்.. நீ வந்த விடுவாய் என்று தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டேனே.."
"இதற்கு ஏன் ஃபீல் பண்ணுகிறீர்கள் அப்பா.. பிரண்ட் இடம் ஏதேனும் முக்கிய விசயம் பேசத்தானே போயிருப்பீர்கள்.."
"அதெல்லாம் ஓர் மண்ணும் இல்லை.. உன்னுடன் வந்து இருக்க வேண்டும் என்பதற்காக வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டு வந்து விட்டேன். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் போரடிக்கிறது கிரி.. எவ்வளவு நேரம்தான் பேப்பரையும், டி.வி.யையும் பார்த்துக் கொண்டிருப்பது.."
கிரிதரனுக்கு தந்தையைப் பார்க்க வருத்தமாக இருந்தது. தனக்காக கம்பீரமான தன் வேலையை விட்டு விட்டு உடன் வந்து இருக்கிறாரே...
உமாமகேஸ்வரி காபி, டிபனுடன் அங்கு வந்தாள்.
"கேட்டுக் கொள்ளடா உன் அப்பா சொல்லும் கதையை டி.வி.யையும் பேப்பரையும் பார்ப்பது போரடிக் கிறதாம்.. அப்படித்தானே எங்களுக்கும் இருக்கும்."
சுவிட்ச் போட்டாற்போல் செல்வநாயகத்தின் முகத்தில் பல்ப் எரிந்தது. பிரகாசமான முகத்துடன் மனைவியைப் பார்த்துக் கொண்டே மகனிடம் கூறினார்..
"எங்களுக்கு என்று பன்மையில் சொன்னால் எப்படி கிரி..? நான் உன் அம்மா ஒருத்திக்குத்தானே தாலி கட்டினேன்..?"
கிரிதரன் 'பக்'கென்று சிரித்து விட்டான். உமா மகேஸ்வரி பொய் கோபத்துடன் கணவனை ஓர் முறை முறைத்தாள்.. பின் மகனிடம் திரும்பிக் சொன்னாள்...
"அப்படி ஓர் நினைவு வேறு இருக்கிறதா உன் அப்பாவிற்கு. நான் ஒருத்தி மாட்டினதே பெரிய விஷயம். இதில் இன்னொருத்தி வேண்டும் என்ற கனவு வேறு இருக்கிறதா..? பார்த்தால் சாதுப் பூனை மாதிரி இருந்து கொண்டு பேசுகிற பேச்சைப் பார்த்தாயா.?"
செல்வநாயகம் மலர்ந்து விட்டார். டிபனைச் சாப்பிடக் கூட மறந்தவராய் மனைவியின் முகத்தை அள்ளிப் பருகுவது போல் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
'இது ஒரு கஷ்டம் இந்த மனிதருடன். ஒரு வார்த்தை சிரித்துப் பேசி விட்டால் போதுமே.. ஆவென்று என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.. பக்கத்தில் மகன் இருக்கும் நினைவு கூட வராது..' பல்லைக் கடித்துக் கொண்டாள் உமாமகேஸ்வரி. மகனிடம் கடுமையாய் கூறுவது போல் கூறினாள்.
"கிரி.. உன் அப்பா சாப்பிடப் போகிறாரா இல்லையா..?"
"இதோ சாப்பிட ஆரம்பித்து விட்டேனடா.. என்னைச் சொல்கிறாளே.. பார்க்கச் சாதுப் பூனை மாதிரி இருந்து கொண்டு பெண் புலியாய் மிரட்டுகிறாள் உன் அம்மா.. இதைப் பார்த்தாயா கிரி..."
"பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அப்பா.. வரவர ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல்தான் போய் விட்டது."
தந்தையுடன் ஒத்து ஊதினான் மகன்.. உமாமகேஸ்வரிக்கு சிரிப்பு வந்து விட்டது. அன்று மிகமிக உற்சாகமான நிலையில் இருந்தாள் அவள்.. பல வருடங் களாய் சுமந்து வந்த சுமை இறங்கிப் போனது போல் சுதந்திர மாய் உணர்ந்தாள் அவள். தமையன் ஊரை விட்டே போய் விட்டாரென்று அறிந்த பின்னால் அவள் வாய் பூட்டிக் கொண்டது. இன்று தமையன் மகள் தன் மகனைத் தேடி வந்துவிட்டாள் என்பதை அறிந்ததும் அவள் வாய் பூட்டு தானாகத் திறந்து கொண்டது.
"ஏண்டா படவா.. உன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா பண்ணுகிறாயா..? இரு இரு.. இன்றைக்கு உனக்குப் பிடித்த ரவா தோசை செய்யலாம் என்றிருந்தேன். அவர் கூட கூட்டு சேர்ந்தாயில்லை.. இன்றைக்கு வெறும் இட்லிதான்.."
"அது என்னடா வெறும் இட்லி என்கிறாள் உன் அம்மா.. அவள் கை பட்டால் இட்லி மல்லிகைப் பூப்போல் மிருதுவாக இருக்குமே.. சூடான இட்லியும் அதை மூழ்கடிக் கும் சாம்பாரும் அதில் நெய்யும் விட்டுக் கொடுத்தாளென் றால்... ஆஹா.. அமிர்தம் என்றால் அதுதான் அமிர்தம்..."
"சரியான சாப்பாட்டு ராமனுக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேன்.."
"பெண்டாட்டி மணக்க மணக்க சமைத்துப் போட்டால் கொடுத்து வைத்த அந்தக் கணவன் சாப்பாட்டு ராமன்தான் ஆவான்.."

மகனை ஊடே நிறுத்த மறந்து அந்த சதிபதிகள் இயல்பாய் பேசிக் கொண்டனர். எத்தனையோ வருடங் களுக்குப் பின்னர் இயல்பான சூழ்நிலை அந்த வீட்டில் திரும்பியிருந்தது.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -15
உயிரே உனைத்தேடி -15
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy