உயிரே உனைத்தேடி -13

                                   13 கிரிதரன் சங்கடத்தில் இருந்தான். இதுவரை தந்தை தாயிடம் கூட விவாதிக்காத ஒரு சம்பவத்தை ஆர்த்தியிடம் ...

                                   13

கிரிதரன் சங்கடத்தில் இருந்தான். இதுவரை தந்தை தாயிடம் கூட விவாதிக்காத ஒரு சம்பவத்தை ஆர்த்தியிடம் விவரிக்க நேர்ந்தது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அவனுக்கு வேறு வழியில்லை என்றும் தோன்றியது.
இந்தப் பெண் யாரோ, எவரோ..? அவன் அறியான். அவனே சொன்னது போல் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எங்கிருந்தோ வந்தாள். இன்று அவளிடம் தன் அந்தரங்கத்தை மறைக்க முடியாதவனாய் அவனை ஆக்கி விட்டாள். நீயென்ன என்னைக் கேட்பது..? நானென்ன உனக்கு விளக்கம் அளிப்பது என்று அவளைத் தூக்கி யெறிந்து விட்டு நகர முடியாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயச் சங்கிலியால் அவளைப் பிணைத்திருந்தான்.
கிரிதரன் மெதுவாக நடந்து ஜன்னலோரம் நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டான். வெளியே நிர்மலமான பரந்த வானம் தெரிந்தது.
ஆர்த்தி கொள்ளைப் பிரியத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரையில் அவனை மிரட்டிக் கொண்டிருந்த மோகினியாக இல்லாமல் ஓர் தேவதை போல் அவன் அருகில் வந்து நின்றாள்.
"யாருக்குமே தெரியாது என்றால் உங்கள் பேரண்ட்ஸுக்கும் தெரியாதா..?"
"அவர்களுக்குத் தெரியும்.. இன்னும் சொல்லப் போனால் என் அம்மா தான் என் கல்யாணத்தை நடத்தி வைத்தாங்க.."
"உங்கள் அப்பா உங்கள் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா...?"
"ஆமாம்.."
"ஏன்.. உங்களுடையது காதல் கல்யாணமா..?"
"இல்லை.. எனக்குக் கல்யாணம் நடந்தபோது எனக்குப் பதினாறு வயது.. கல்யாணப் பெண்ணுக்கு எட்டு வயது.."
"குழந்தையில் திருமணம்.. அந்தப் பெண் யார்..?"
".... அவள் என் மாமன் மகள்.. 'அம்மு' என்பது அவள் பெயர். அவள் பிறந்தவுடன் 'இவள் தானடா உன் பெண்டாட்டி'யென்று சொல்லித்தான் என் கையில் கொடுத்தார்கள்.. அப்போது எனக்கு எட்டு வயது. எட்டு வயதுச் சிறுவனுக்கு பிறந்த குழந்தையின் மேல் காதல் வருமா..? சிறுவனான எனக்கு என்னுடைய உடமை என்ற ஓர் உணர்வுதான் அந்தக் குழந்தையின் மேல் ஏற்பட்டது. எனக்குப் பனிரெண்டு வயதாகும்போது அவள் நான்கு வயதுக் குழந்தை. அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து அவளை எட்டு வயதுச் சிறுமியாகத் தான் நான் பார்த்தேன்.."
"என்ன ஆனது..?"
"என் அப்பா என் அம்மாவை விரும்பிப் பெண் கேட்டார்.. என் மாமா பெண் கொடுக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டியிருக்கிறார். வீட்டை விட்டு தன்னுடன் வந்து விடும்படி என் அப்பா அம்மாவைக் கூப்பிட்டிருக் கிறார். என் அம்மா அவர்களுடைய அண்ணனுக்கு தலை குனிவை ஏற்படுத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.. அதை மறைந்து நின்று கேட்ட என் மாமா மறுநாளே வந்து என் அம்மாவைப் பெண் கொடுக்கச் சம்மதம்ன்னு சொல்லி என் பேரன்ட்ஸின் கல்யாணத்தை நிச்சயம் செய்து விட்டார்."
"அப்புறம் என்ன.. எல்லோருமே சந்தோசமா ஆயிட்டாங்களா..?"
"இல்லையே.. என் அம்மா இயல்பாய் சொன்ன ஓர் வார்த்தை என் அப்பாவின் மனதில் முள்ளாக இன்று வரை தைத்துக் கொண்டு இருக்கிறதே..."
"அப்படி என்ன வார்த்தையை சொல்லி விட்டார்கள் உன் அம்மா..."
"ஆர்த்தி.. அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ்.. தஞ்சாவூர் பக்கத்தில் ஓர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்க.. என் அம்மாவோட அப்பா.. அம்மா சிறு குழந்தையாய் இருக்கும் போதே இறந்து விட்டாராம்.. ஸோ.. என் மாமாதான் குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். விவசாயம், குடும்பத் தொழில் இரண்டையும் கவனித்துக் கொள்ள படிப்பை பாதியிலேயே விட்டு விட்டாராம். என் அம்மாவை என் பாட்டிக்கும் மேலாக வளர்த்தது அவர் தான்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க.. என் அம்மா விரும்பிய மியூசிக்கை படிக்க வைத்திருக்கிறார்.. அவங்க ஆசைப்படி மியூசிக் டீசர் வேலை பார்க்க அனுமதித்து இருக்கிறார். அங்கேதான் என் அப்பா அம்மாவை சந்தித்து காதலைச் சொல்லியிருக்கிறார். என் அம்மா முதலில் ஏற்றுக் கொள்ளவில்லையாம்... அப்புறம் அப்பாவின் சின்ஸியரான லவ்வை உணர்ந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்களாம்.. அதைத்தான் சொல்லியிருக்கிறாங்க.."
ஆர்த்தியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. இவ்வளவு கதை இருக்கிறதா..? கிரிதரன் தொடர்ந்தான்.
"அப்பா அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தபோது அம்மா மறுத்து விட்டாங்க இல்லையா.. அப்போது அப்பா கோபப்பட்டு 'என்னை நீ காதலிக்க வில்லையா..?' ன்னு கேட்டிருக்கிறார்.."
"இது நேச்சர்தானே சார்.. எந்தக் காதலனும் இதைக் கேட்பார்தானே..."
"ஆமாம்.. அப்போது அம்மா, 'நான் உங்களைக் காதலிக்கவில்லை.. உங்கள் காதலை ஏற்றுக் கொண்டேன்' என்று சொல்லியிருக்கிறாங்க.."
"அடக் கடவுளே.. இதுதான் உங்கள் அப்பாவை பாதித்து விட்டதா...?"
"யெஸ்.. அந்த ஓர் வார்த்தை எங்கள் குடும்பத்தையே ஆட்டி வைத்து வருகிறது. ஆர்த்தி.. என் அப்பா, அம்மா விஷயத்தில் ரொம்ப பொஸஸிவ்..."
"அது தவறு இல்லையே சார்..."
"அப்கோர்ஸ்.. ஆர்த்தி.. அதனால் அவருக்கும் அம்மாவிற்கும் இடையே மாமாவின் பாசம் வருவதை அவர் விரும்பவில்லை. தன் காதல் மனைவி தன்னை விட அவளுடைய அண்ணன் மேல் அதிகப் பாசம் வைத்து இருப்பதை அவர் விரும்பவில்லை. அம்மாவின் பாசத்தைப் பங்கு போட மாமா வருவதை தடை போட முடியவில்லை. எனவே அவரால் அடிக்கடி வர முடியாதபடி தஞ்சாவூரி லிருந்து மும்பைக்கு டிரான்ஸ்பர் வாங்கினார்.."
"மும்பைக்குப் போனால் பாசம் விட்டுப் போய் விடுமா..?"
"அப்பா விட்டுப் போக வைத்தார்.. அம்மா மாமாவுடன் போனில் பேசத் தடை விதித்தார். கடிதமும் போடக் கூடாது. மாமா போன் பேசினால் கட் பண்ணி விடுவார்.. அவரிடம் இருந்து கடிதம் வந்தால் படித்துப் பார்க்க விடாமல் கிழித்துப் போட்டு விடுவார்.."
"ஏறக்குறைய உங்கள் அம்மாவை உங்கள் அப்பா சிறை வைத்திருக்கிறார்.. இது அதிகப்படி இல்லையா..?"
"அதிகப்படிதான்.. அதற்கும் ஓர் நியாயம் அப்பா பக்கம் இருக்கிறதே.."
"பெண்டாட்டியை சிறை வைக்கும் அளவிற்கு என்ன நியாயத்தை அவர் கண்டு விட்டார்.." கோபத்துடன் வினவினாள் ஆர்த்தி..
"ஆர்த்தி.. மும்பைக்கு டிரான்ஸ்பர் என்றதும் அம்மாவின் வாய் சும்மா இருந்திருக்கலாம்.. நீங்கள் வேண்டுமானால் மும்பைக்குப் போங்க.. நான் பிள்ளை களைப் படிக்க வைத்துக் கொண்டு இங்கேயே இருக்கிறேன்னு சொல்லிட்டாங்க.."
"போச்சு.. போங்க.. ஏன் அப்படிச் சொன்னாங்க.."
"அண்ணன் பாசம்தான் வேறு என்ன..? அப்பா மலையேறி விட்டார்.."
"மலையேறா விட்டால்தான் அதிசயம்.. அப்புறம் என்ன ஆச்சு..?"
"அப்பா அம்மாவிடம் கட் அன்ட் ரைட்டாய் சொல்லி விட்டார். நான் என் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போகிறேன். உன் அண்ணனுக்கு தங்கையாக இல்லாமல் என் பெண்டாட்டியாக மட்டும் இருப்பதாக இருந்தால் மட்டுமே என் பிள்ளைகளுக்கு நீ அம்மாவாய் இருக்க முடியும்ன்னு அப்பா கூறி விட்டதும் அம்மா வேறு வழியில்லாமல் மும்பைக்கு வந்தாங்க.."
"ஸோ.. இப்போதும் நமக்காக இல்லாமல் பிள்ளை களுக்காகத்தான் பெண்டாட்டி வந்திருக்கிறாள்ன்னு உங்க அப்பாவுக்கு மனத்தாங்கல் ஆகி விட்டது. ஆம் ஐ கரெக்ட்..?"
"ஸெர்ட்டன்லி.. இந்த நிலையில் என் பதினாறாவது வயதில் என் அம்மாவின் அம்மா அதாவது என் பாட்டி மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வந்தது. என் அப்பா வேறு வழியில்லாமல் குடும்பத்தை மாமாவின் ஊருக்கு அழைத்து வந்தார். பாட்டிக்கு உடம்பு ரொம்பவும் மோசமாக இருந்தது. அப்பாவும், கவிதாவும் தஞ்சாவூரில் என் பெரியப்பா வீட்டில் தங்கியிருக்கிறோம் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். நானும், அம்மாவும் மாமாவின் ஊரிலேயே இருந்தோம்..."
"நீங்களும் உங்கள் தங்கை மாதிரி உங்கள் அப்பாவுடன் போயிருக்கலாமே..."
"அம்மாவை தனியாய் விட்டு விட்டுப் போவதா..?"
"தனி என்ன.. அவர்கள் பிறந்த வீட்டில் விட்டு விட்டுத்தானே போகிறீர்கள்.."
"அவர்களுக்கு அது பிறந்த வீடு. எங்களுக்கு என் அம்மாவின் பிறந்த வீடு.. அம்மாவை தனியே விட்டு விட்டு நானும் வருவதை அப்பாவே விரும்ப மாட்டார். யு நோ ஒன் திங்க் ஆர்த்தி. அப்பா அம்மாவை இன்னும் காதலிக்கிறார்.."
"அதீதமான காதல் இருக்குமிடத்தில்தான் வன்முறை பிறக்கும் போல..."
"யு ஆர் கரெக்ட்.. உடலைக் காயப்படுத்துவது மட்டுமல்ல.. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். அப்பா தஞ்சாவூரிலிருந்து திரும்பும் முன்னர் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற என் மாமன் மகளுக்கும் எனக்கும் திருமணம் நடத்த முடிவெடுத்து நடத்திவிட்டார்கள் என் அம்மாவும், மாமாவும்.."
"நீங்கள் மறுக்கவில்லையா..?" ஆர்த்தி துடிக்கும் இதயத்தோடு கேட்டாள்.
"இல்லை.. ஏன் மறுக்க வேண்டும்..? எனக்கு என் மாமா மகளைப் பிடிக்கும்.."
"என்ன.." ஆர்த்தி தன் பெரிய விழிகளை அகல விரித்தாள்.
"ஆமாம் ஆர்த்தி.. என் மாமா பெண்ணுக்கு நான்கு வயதாக இருக்கும்போது அவளை நான் மிரட்டுவேன்.. என் னிடம் வரவே பயந்து அழுவாள். திரும்பவும் எட்டு வயதில் அவளைப் பார்க்கும் போது மூக்கை உறிஞ்சிக் கொண்டு இரட்டைப் பின்னலில் ரிப்பன் வைத்துக் கட்டிக் கொண்டு.. அந்தப் பின்னலும் அரைகுறையாய் பிரிந்து கிடக்கும்.. கொஞ்சம் கிட்ட வந்து பேசினாள்.. அங்கிருந்த பத்து நாள் களும் அவளைச் சீண்டி வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பேன்.. குழந்தையில் பயந்தது போல் இல்லாமல் இப்போது ரோசமாய் நின்று முறைப்பாய் பதில் கொடுப்பாள்."
"முறைப்பாளா..." ஆர்த்தி ரசித்துச் சிரித்தாள். கிரிதரனும் அந்த நாளின் நினைவில் புன்னகத்தான்.
 "முறைப்பெண் இல்லையா.. முறைத்துக் கொண்டு தானே இருக்க வேண்டும்.. அவளை எனக்குப் பிடிக்கும் ஆர்த்தி.. அம்மா சொல்வதுதான் எனக்கு வேத வாக்கு.. அவள் பிறந்தவுடன் 'இவள் தான் உன் பெண்டாட்டின்னு' அம்மா சொன்னாங்க.. கொஞ்சினேன். என் பதினாறு வயதில் எட்டு வயதான அவளைக் காட்டி 'கட்டுடா தாலியை' என்றார்கள். கட்டி விட்டேன்.."
"அப்படிப்பட்டவர் அப்பா கூப்பிட்டதும் பின்னாலேயே போய் விட்டீர்களே.."
"வேறு என்ன செய்வது..? ஆர்த்தி.. அதை நானும், அம்மாவும் எதிர்பார்த்தோம். மாமாவைப் பிடிக்காத அப்பா மாமாவின் பெண்ணை மருமகளாய் ஏற்றுக் கொள்வாரா..? அத்தோடு என் அப்பாவின் அனுமதி இல்லாமல் நான் தாலி கட்டியதும் தவறுதானே.. அதற்குப் பரிகாரம் பண்ண வேண்டாமா..?"
"அந்த அறியாப் பெண்ணின் கழுத்தில் அவள் அறியாத வயதில் தாலியைக் கட்டினீர்களே.. அதற்கு என்ன பரிகாரம் பண்ணினீர்கள்.. சார்.. உங்களுக்கு அப்போது பதினாறு வயது. ஓரளவு விவரம் தெரிந்த வயது. அந்தப் பெண்ணுக்கு எட்டு வயது சார்.. அவள் கழுத்தில் என்ன வென்று அவள் அறியாத தாலியைக் கட்டி விட்டுவிட்டு வந்து விட்டீர்களே.. இந்தப் பாவத்தை எங்கே போய் கழிப்பீர்கள்..." ஆர்த்தி உணர்ச்சி வசப்பட்டாள்.
"அவளை விட்டு விட்டு வந்தது உண்மைதான்.. ஆனால் அவளைத் தேடி நான் போகவில்லையென்று சொன்னேனா..?" கிரிதரன் கேட்டான். இப்போது ஆர்த்தி திகைத்தாள்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -13
உயிரே உனைத்தேடி -13
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy