இது நீரோடு செல்கின்ற ஓடம் -3

3 நீலவானம் சொன்னது.. நீகூட அதைப் போலத்தான் என்று.. கடற்காற்றை ரசித்தபடி சாய்ந்திருந்த மிருதுளாவின் தோளில் மிருதுவாகத் தட்டினாள் ...

3
நீலவானம் சொன்னது..
நீகூட அதைப் போலத்தான் என்று..


கடற்காற்றை ரசித்தபடி சாய்ந்திருந்த மிருதுளாவின் தோளில் மிருதுவாகத் தட்டினாள் உமா..
"என்னங்கம்மா..?"
"முகத்தை உள்ளே இழுத்துக்க.. ஊதக் காத்து..! உடம்புக்கு சரிப்பட்டு வராது.."
"அதெல்லாம் ஒன்னும் செய்யாது.."
"உன்னைத் திருத்தவே முடியாது.."
உமா சலித்துக் கொண்டாள்.. மிருதுளாவுக்கு கடல் காற்றை மிகவும் பிடிக்கும்.. சபாபதியின் ஓய்வு நாள்களில் அவரை வற்புறுத்தி கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போக வைப்பாள்.. அவளுடைய கல்லூரியில் தோழிகள் சேர்ந்து வெளியே போக வேண்டுமென்று ஐடியா கேட்டால் கடற்கரைக்குப் போகலாமே என்று சொல்வாள்...
"ஏய்ய்.. இவகிட்ட ஏதும் ஐடியா கேட்காதீங்கடி.. அனுமார் கூடக் கடலைத் தாண்டிட்டாரு.. ஆனா இவ மட்டும் அந்தக் கடலை தாண்டி வரவே மாட்டேங்கிறா.."
அவள் தோழிகள் விளையாட்டாக சொல்வார்கள்.. அப்படிப்பட்ட கடல்பித்துக் கொண்ட மிருதுளாவை கடற்காற்று என்ன செய்து விடும்..?
அது செல்லமாக அவள் முகம் வருடிக் கொடுத்து முடிதொட்டு விளையாடியது.. தூத்துக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும்..
"இங்கே நல்லதா எந்த ஹோட்டல் இருக்குன்னு விசாரிங்களேன்..." என்றாள் உமா..
"போன தடவை இன்டர்வியூக்கு மிருதுகூட வந்தப்பவே விசாரிச்சுவைச்சுட்டேன் உமா.. வா.." என்ற சபாபதி ஒரு ஆட்டோவை கைதட்டி அழைத்தார்..
அவரின் முன் யோசனை நடவடிக்கையில் மெச்சிப் போன உமா..
"உங்க அப்பாவுக்கு பணத்தை திடம் பண்ணத்தான் தெரியாது.. மத்த விசயங்கள்ல எல்லாம் கெட்டிதான்.." என்று மகளிடம் சொன்னாள்..
"அப்பா எல்லா விசயத்திலும் கெட்டிதான்.." என்றாள் மிருதுளா..
சபாபதி சொன்ன ஹோட்டல் நாகரிகமாகவும்.. கண்ணியமாகவும் காட்சியளித்தது.. வரவேற்பில் சபாபதி பணத்தைக் கட்டி செய்ய வேண்டிய முறைகளை செய்து சாவியைப் பெற்றுக் கொண்டு வரும் வரை அங்கிருந்த சோபாவில் அமர்ந்து காத்திருந்த போது உமாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்தாள் மிருதுளா.. அதில் கவிந்திருந்த பிரிவுத் துயரில் அவள் மனம் நெகிழ்ந்தது.. தாயின் சோகத்தில் அவள் மனம் கனத்தது..
அவளுக்கு மட்டும் அந்த வேதனை இல்லையா..? பிரிந்திருக்க வேண்டுமென்று அவள் ஆசைப்படுகிறாளா என்ன..?
சபாபதி சென்னையில் வேலை பார்க்கிறார்.. மிருதுளாவுக்கோ தூத்துக்குடியில் வேலை கிடைத்திருக்கிறது..
இந்த நிலையில் இருவரில் ஒருவருடன்தான் உமா இருந்தாக வேண்டும்.. மிருதுளா ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளலாம்.. சபாபதியை எந்த ஹாஸ்டலில் தங்கச் சொல்வது..?
சபாபதி அறைச்சாவியுடன் வந்து விட்டார்.. அவர்கள் அறைக்குப் போய் பயணக் களைப்பு நீங்க சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டுக் குளித்து தயாரானார்கள்..
"எட்டரை மணிக்குப் போனாப் போதும்மா.."
கைப்பபையில் உத்தியோக நியமன உத்தரவை எடுத்து வைத்தபடி சொன்னாள் மிருதுளா.. அழகான காட்டன் சேலையில் கண்களை உறுத்தாத பேரழகுடன் இருந்த மகளை பெருமையுடன் பார்த்துக் கொண்டாள் உமா..
"இன்னும் நேரமிருக்கு.. ஏங்க.. சாப்பிட்டுட்டு.. பக்கத்தில் இருக்கிற கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்டுட்டு மிருதுளா வேலைக்கு போகட்டுமே.."
"அதுவும் சரிதான்.."
சபாபதி ஒப்புக் கொண்டதில் அவர்கள் வேக வேகமாக காலை உணவை முடித்துக் கொண்டார்கள்.. அருகிலிருந்த விநாயகரின் கோவிலுக்குப் போய் வணங்கி விட்டு ஆட்டோவைப் பிடித்து பள்ளியின் வாசலில் மிருதுளாவை இறக்கி விட்டார்கள்..
"இதுதான் நீ வேலை பார்க்கப் பேற ஸ்கூலா..?"
பிரம்மாண்டமான பள்ளி வளாகத்தைப் பார்த்தபடி கேட்டாள் உமா... பெருமையுடன் தலையசைத்த மிருதுளா..
"நீங்களும் கூடவாங்களேன்ம்மா.." என்றாள்..
"அது நல்லாயிருக்காதும்மா.."
இறங்க முனைந்த உமாவை தடுத்து விட்டார் சபாபதி..
"ஏன்ப்பா..?" ஏமாற்றத்துடன் கேட்டாள் மிருதுளா..
"இங்கே நீ பாடம் எடுக்கப் போகிற டீச்சர்ம்மா... நீ பிள்ளைகளுக்கு பாதுகாவலா நிற்கனும்.. உனக்குத் துணைக்கு நாங்க வந்தா.. அவங்களுக்கு துணையா நீ எப்படி நிப்ப..?"
"அப்பா.."
"நீ தனிச்சு நிற்கிற இடம் வந்தாச்சும்மா.. இங்கே உனக்கான அடையாளம் ஆரம்பமாகுது... செய்கிற வேலையை மனப்பூர்வமா செய் மிருதுளா.. கடவுள் உன் பக்கமிருப்பார்.." சபாபதி ஆசிர்வதித்தார்..
மிருதுளா மனம் நெகிழ பெற்றவர்களுக்கு கையாட்டி விட்டு பள்ளி வளாகத்தினுள் நடந்தாள்...
அதற்கு முன்னாலும் அவள் அவர்களைப் பிரிந்து நடந்திருக்கிறாள்தான்.. முதன் முதலாக அவளது மூன்றாவது வயதில் பிரி கேஜியில் சேர்த்து விட்டபோது அவளது தளிர்விரல்கள் உமாவின் விரல்களின் பிடியிலிருந்து பிரிந்தன.. அம்மா எதற்காகவோ இடுப்பி லிருந்து இறக்கி விட்டிருக்கிறாள் என்ற நினைவுடன் நின்ற குழந்தை அவள் பிரிந்து வெளியே நடந்த போது அழுதது..
உமா துடித்துப் போய் விட்டாள்.. மிருதுளாவைத் துக்கிக் கொண்டு வந்து விடலாமா என்று பரிதவித்தாள்.. அன்றும் சபாபதிதான் அவளை அமைதிப்படுத்தினார்..
"அவ விளையாடப் போயிருக்கான்னு நினைச்சிக்க உமா.. நாலைஞ்சு மணி நேரம்.. அதுக்கப்புறமா அவ நம்மகிட்ட திரும்பி வந்துரப் போறா.."
நாலைந்து மணி நேரம் என்பது மெல்ல மெல்ல உயர்ந்து பகற்பொழுது முழுவதும் என்று ஆனது.. மிருதுளாவும் வளர்ந்து பிரிகேஜியிலிருந்து பட்டப் படிப்பிற்கு தாவினாள்.. ஆனால் அப்போதெல்லாம் படிக்கப் போகும் மகள் மாலையில் வீடு திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கை உமாவிடம் இருந்தது..
இப்போது..?
"மிருது வளர்ந்துட்டா.." கண்களைத் துடைத்துக் கொண்டாள் உமா..
"குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கிற வரைதான் தாய்ப் பறவையின் சிறகுக்கடியில் அதுக ஒன்றியிருக்கும் உமா.."
"மிருதுளாவுக்கு சிறகு முளைச்சிருச்சில்ல.."
"ஆமாம்.. அதைப் புரிஞ்சுக்கிட்டு அவ சிறகை விரித்துப் பறக்க நாம் வழிவிட்டு விலகி நிக்கனும்.."
அவர்கள் அமர்ந்திருந்த ஆட்டோ அரை வட்டமடித்து ஹோட்டலை நோக்கித் திரும்பி விட்டது..
மிருதுளா தலைமை ஆசிரியரின் அறையைத் தேடி போனபோது எதிரில் அவளை நேர்முகத் தேர்வின் போது பார்த்திருந்த பியூன் வந்தான்..
"வணக்கம் டீச்சரம்மா.. இன்னைக்குத்தான் வேலையில் சேர்ந்தீகளா..?" என்றான்..
அவனை அடையாளம் கண்டு கொண்ட மிருதுளா புன்முறுவலுடன்..
"ஆமாம்.. ஹெச்.எம்.ரூம் எங்கேயிருக்கு..?" என்றாள்..
"வாங்க.. கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.."
அவளுடன் இணையாக நடந்தவனின் முகத்தில் அவளுடன் இணையாக நடக்கும் சந்தோசம் தெரிந்தது.. ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டான்.. இது போன்ற கள்ளப் பார்வைகளை உடனடியாக அறிந்து கொள்ளும் சூட்சும உணர்வுகளைக் கொண்டவர்கள் பெண்கள் என்று அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
மிருதுளா அவன் பார்வையால் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.. எதிரில் வந்த ஒரு பெண்..
"நடேசா.." என்று பியூனை அழைத்தாள்..
"என்ன டீச்சர்.." நடேசன் நின்று விட்டான்..
"எங்கே போற..?"
"புதுசா வந்திருக்கிற டீச்சரை ஹெச்.எம்.ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.."
அவன் மிருதுளாவைப் பார்த்தான்.. அவளோ அவனைப் பார்க்காமல் அந்த டீச்சரைப் பார்த்தாள்.. சிநேகிதத்துடன் புன்னகைத்தாள்..
அவளின் அந்தப் புன்னகைக்குப் பலன் இருந்தது..
"ஹலோ.. ஐ ஆம் சங்கீதா.. ப்ளஸ் ஒன்.. பிளஸ் டூக்கு மேத்ஸ் டீச்சர்.." என்றாள் அவள்..
"ஐ ஆம் மிருதுளா.. நியு ஜாயினிங் பாட்டனி டீச்சர்.."
மிருதுளா கை நீட்டினாள்.. அவள் கைபற்றிக் குலுக்கிய சங்கீதாவை பொறாமையுடன் பார்த்த நடேசனின் மனதில் தானும் பெண்ணாய் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் தோன்றியது...
'அப்படியிருந்திருந்தா இந்த புது டீச்சர் கையைப் பிடிச்சுக் குலுக்கோ.. குலுக்குன்னு குலுக்கியிருக்கலாமே..'
"ஹெச்.எம்மை பார்த்துட்டு வாங்க.. லெசர் பீரியடில பேசலாம்.."
நட்புடன் சொல்லி விட்டு நடந்து விட்டாள் சங்கீதா..
"நீங்க வாங்க டீச்சர்..."
சங்கீதா அகன்று விட்ட சந்தோசத்துடன் மீண்டும் மிருதுளாவுக்கு வழிகாட்டும் பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டான் நடேசன்..
'இன்னைக்கு ஒரு நாளைக்குத்தான் வழி காட்ட முடியும்.. பொழுது சாயறதுக்குள்ள இந்தக் கட்டிடத்துக்-குள்ள எத்தனை கிளாஸ் ரூம்க இருக்குது.. எத்தனை டீச்சர்கள் வேலை பார்க்கிறாங்கங்கிற அத்தனை புள்ளி விவரத்தையும் இவங்க கண்டு வைச்சிர மாட்டாங்களா..?'
பெண்களின் அந்த மதி நுட்பத்தில் அவன் மனம் பொறாமை கொண்டது.. அது எப்படித்தான் எதுவும் தெரியாததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு இந்தப் பெண்கள் எல்லாம் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ என்று அவன் ஆற்றாமைப்பட்டுப் போனான்..
"இது தாங்கம்மா ஹெச்.எம்மோட ரூம்.." அவன் கை காட்டினான்..
"தேங்க்ஸ்.."
பல்வரிசை தெரிய சிரித்து அவள் உதிர்த்த ஒற்றை நன்றிச் சொல்லில் நடேசனின் மனம் இற்று அவள் காலடியில் விழுந்தது..
'என்னமா அழகாச் சிரிக்குது.. இந்தப் பொண்ணு.. ம்ஹீம்.. யாருக்கு கொடுத்து வைச்சிருக்கோ..'
அவனின் ஏக்கப் பொருமலை கண்டு கொள்ளாமல் அறைக் கதவில் ஒற்றை விரலால் 'டொக் டொக்' எனத் தட்டினாள் மிருதுளா..
"யெஸ்.. கமின்.." என்றபடி நிமிர்ந்து பார்த்தவர்.. 'கிட்டி' என அவள் அடைமொழி கொடுத்திருந்த தமிழ் செல்வன்..
'இவரா...!'
மிருதுளாவின் கண்கள் பிரகாசித்தன.. மனிதாபி மானம் கொண்ட நட்பான புன்னகையை சிந்தும் அருமையான மனிதரின் கீழ் வேலை பார்க்கப் போவதில் அவள் மகிழ்ந்து போனாள்...
"வணக்கம் சார்.." அவசரமாக கை குவித்தாள்..
அதே நட்பான புன்னகையுடன் அவள் வணக்கத்தை அங்கீகரித்த சின்னத் தலையசைவுடன்..
"வணக்கம்.. உட்காருங்க.." என்றார் தமிழ்செல்வன்..
"வேலையில் சேர வந்திருக்கேன் சார்.."
"யு ஆர் வெல்கம்..."
அவள் நீட்டிய வேலைக்கான நியமன உத்தரவை வாங்கிக் கொண்டார் தமிழ்செல்வன்.. எப்போது வந்தாள்.. எங்கே தங்கியிருக்கிறாள் என்று பொதுவாக விசாரித்தார்..
"அப்பாம்மா கூட வந்திருக்காங்க சார்.. இப்போதைக்கு ஹோட்டல் ரூமில தங்கியிருக்கோம்.. இங்கே நல்லதா லேடிஸ் ஹாஸ்டலைப் பார்த்து என்னைத் தங்க வைச்சுட்டு அவங்க சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிருவாங்க சார்.."
இதைச் சொல்லும் போது அவள் கண்களில் பிரதிபலித்த ஏக்கத்தை அவரின் கூரிய விழிகள் கிரகித்துக் கொண்டன..
"உங்க பேரண்ட்ஸீக்கு நீங்க ஒரே பெண்ணுன்னு இன்டர்வியூவில சொன்னீங்க.. இல்லையா..?"
"யெஸ் சார்.. அதனாலதான் அவங்க என்னைத் தனியா விடறதுக்கு ரொம்பவும் யோசிக்கிறாங்க.. ம்ப்ச்.. ஆனா தனியா இருந்துதானே ஆகனும்..? வேலை எனக்கு முக்கியம் சார்.."
"அஃப் போர்ஸ்.. அஃப் போர்ஸ்.. பை தி வே உங்க அப்பா எங்கே வேலை பார்க்கிறார்..? அவர் கவர்ண்மெண்ட் ஸ்டாஃப்பில்லன்னும் இன்டர்வியுவில சொல்லியிருக்கீங்க.."
"யெஸ் சார்.. அவர் பிரைவேட் கம்பெனியிலதான் வொர்க் பண்றார்.."
"ஐ ஸீ.. சேலரி அதிகமோ.."
"குறைவுதான் சார்.. பட்.. பேமிலி மெம்பர்ஸ் கம்மிங்கிறதினாலயும்.. அப்பாவுக்கு கிராமத்தில இருக்கிற நிலங்கள்ள இருந்து குத்தகைப் பணம் வர்றதினாலயும் எங்களாலே மேனேஜ் பண்ணிக்க முடிஞ்சது.."
"ஓ..."
தமிழ்செல்வன் லேசான புன்னகையுடன் டேபிள் வெயிட்டை உருட்டினார்.. அவரது அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எதுவென்று அறிவது மிகக் கடினம் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா..
ஆனால் எது ஒளிந்திருந்தாலும் அது அடுத்தவரை அழிக்கும் ஆயுதமாக இருக்காது என்ற நம்பிக்கையை மட்டும் ஒளிவீசும் அவரின் கண்களும் நட்பாக எவரையும் சிநேகித்து விடும் அவரின் புன்னகையும் அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன...
"நீங்க இங்கேயே வீடு எடுத்துத் தங்கிக் கொள்ளலாமே.. லேடிஸ் ஹாஸ்டலுக்கு அது பெட்டரில்லையா..? ம்ம்ம்..?"
அவர் வெகு இயல்பாக வினவினார்.. மிருதுளாவின் கண்களில் அது முடியாதே என்ற ஏக்கம் கோடிட்டு மறைவதை அவரது கணக்கிடும் விழிகள் கண்டு கொண்டன..
"எப்படி சார்..? அப்பாம்மா இல்லாம நான் மட்டும் தனியா வீடு எடுத்து தங்கியிருக்கிறதுங்கிறது.. இட்ஸ் நாட் பாஸிபிள் சார்.."
"யெஸ்.. யெஸ்.."
அதற்கும் அவர் சின்னப் புன்னகையை சிந்தினார்.. சபாபதி என்ன படித்திருக்கிறார் என்று கேட்டார்.. அவர் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில் அவர் என்ன பதவியை வகிக்கிறார் என்றும் கேட்டார்..
மிருதுளா அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னாள்.. லேசான தலையசைவுடன் அவளுக்கு விடை கொடுத்த தமிழ்செல்வன்..
"கரெஸ்பாண்டென்ட் வந்திருக்கார்.. நீங்க அவரை மீட் பண்ணிட்டு அடுத்த பீரியடில கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாப் போதும்.." என்றார்..
"ஓகே சார்.. நான் எந்தக் கிளாஸில் பாடம் எடுக்கனும் சார்..?" பவ்யமாக கேட்டாள் மிருதுளா..
"இன்னைக்கு ப்ளஸ் ஒன் பர்ஸ்ட் குருப் கிளாஸில இருந்து ஆரம்பிங்க.. ஒன் அவர்ல உங்களுக்கான டைம் டேபிள் உங்க கைக்கு வந்திரும்.."
"ஓகே சார்.."
மிருதுளா கிளம்ப யத்தனித்தாள்..
"மிருதுளா.." தமிழ்செல்வன் அழைப்பில்..
"சார்.." என்று தேங்கி நின்றாள்..
"கரெஸ்பாண்டென்ட் பிஸியானவர்ம்மா.. அவருக்கு நிறைய பிஸினெஸ்கள் இருக்கு.. இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி.. கோகனட் ஆயில் மேனுபேக்சரிஸ் கம்பெனி.. புட் புரொடக்ட்ன்னு நிறைய பிஸினெஸ்களைப் பார்க்கிறவர்.. இந்த ஸ்கூல் அவரோட தாத்தா ஆரம்பிச்சது.. இவர் கைக்கு வந்திருக்கிறது என்கிறதினால மட்டும் இங்கே என்றைக்காவது ஒருநாள் வந்துட்டுப் போவாரு.. உன் லக்.. இன்னைக்கு இந்த நேரத்தில இங்கே வந்திருக்கார்.. லேட் பண்ணிராம போய் பார்த்திரு.. இல்லைன்னா அவரைப் பார்க்கிறதுக்கு நீ நாள் கணக்கில் வெயிட் பண்ணி அப்பாயிண்ட்மென்ட் வாங்கியாகனும்.."
"ஆகட்டும் சார்.. உடனே அவரைப் பார்த்துடறேன்.."
மிருதுளா மரியாதையுடன் சொல்லி விட்டு தலைமை ஆசிரியரின் அறைறை விட்டு வெளியே வந்து நடந்தாள்.. காத்திருந்த நடேசன் வேகமாக ஓடி வந்து சேர்ந்து கொண்டான்..
"டீச்சர்ஸின் வெயிட்டிங் ரூமுக்கு உங்களைக் கூப்பிட்டுக்கிட்டுப் போகவாம்மா..?"
"இல்லை நடேசன் சார்.."
"என்னம்மா சொன்னீங்க.."
அவள் சார் என்று அழைத்ததில் புளகாங்கிதம் அடைந்து விட்டான் நடேசன்.. அவன் விழிகளில் பொங்கிய நெகிழ்ச்சியில் நடிகர் திலகம் வந்த போக அவன் மனதைத் தொடும் படியாக அப்படியென்னத்தைச் சொல்லி விட்டோமென்று மிருதுளா பயந்து போனாள்..
"என்ன ஆச்சு நடேசன் சார்..?"
"என்னையாம்மா சார்ன்னு கூப்பிட்டிங்க..?" அவன் நாத்தழுதழுக்க...
'இதுதான் விசயமா..?' என்று அவள் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
ஆனாலும் அவளை விட வயதில் பெரியவனான நடேசனை பெயர் சொல்லி அழைப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை..
"உங்களைத்தான் சார்ன்னு கூப்பிட்டேன்.. சார்ன்னு கூப்பிடாம மேடம்ன்னா கூப்பிட முடியும்..?" அவள் தலையை விரல்களால் தாங்கியபடி கேட்டாள்..
"ஹி.. ஹி.." அவன் வழிந்தான்..
'முடியலை..' அவளுக்கு கண்ணைக் கட்டியது..
"கரெஸ்பாண்டென்ட்டைப் பார்க்கனும்.. அவர் எங்கேயிருப்பார்ன்னு சொல்கிறிங்களா..?" என்று அலுப்புடன் கேட்டாள்..
"என்னது..? கரெஸ்பாண்டென்டைப் பார்க்கப் போகிறிங்களா..?"
அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு பயம் பீடித்துக் கொண்டது..
'என்னடா இது.. கரெஸ்பாண்டென்டைப் பார்க்கப் போகனும்னுன்னு தான சொன்னேன்..? பேய்.. பிசாசைப் பார்க்கப் போகனும்ன்னா சொன்னேன்..? அதுக்கு எதுக்காக இவன் இந்த அளப்பறையைக் காட்டறான்..' அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்..
"ஆமாம்.. நடேசன் சார்.. ஆமாம்.. கரெஸ்பாண்டென்டைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன்.. அதுக்கு எதுக்காக இப்படியொரு பில்ட்-அப்பைக் கொடுத்துப் பயமுறுத்தறிங்க..?"
அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை 'ஐயோ பாவம்..' என்ற ரீதியில் இரக்கப் பார்வை பார்த்து வைத்தான் நடேசன்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -3
இது நீரோடு செல்கின்ற ஓடம் -3
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy