இது நீரோடு செல்கின்ற ஓடம் -17

17 நீ தூங்கும் தாலாட்டை.. நான் பாடிக் காட்டவா.. ? அவளின் மனதைப் படித்ததைப் போலச் சொல்லிய சங்கீதாவின் வார்த்தைகளில் மனம் கலங்கினா...


17
நீ தூங்கும் தாலாட்டை..
நான் பாடிக் காட்டவா..?

அவளின் மனதைப் படித்ததைப் போலச் சொல்லிய சங்கீதாவின் வார்த்தைகளில் மனம் கலங்கினாள் மிருதுளா.. சங்கீதாவின் கண்களில் தெரிந்த உணர்வுகளின் கலவை எதைச் சொல்கிறது என்று தெரியாமல் குழம்பினாள்..
"டெர்ரர் நெருப்பு.. மிருதுளா.. அதனாலதான் எல்லாரும் தூரமா ஒதுங்கி நிற்கிறாங்க.. நீயும் அப்படி நிற்கிறதுதான் உனக்கு நல்லது.."
"அப்பா அவர் கம்பெனியிலே சூப்பர்வைசரா வேலைக்கு சேர்ந்திருக்கார் சங்கீதா.. அதுக்கான குவார்ட்டர்ஸா டெர்ரரோட பங்களா காம்பவுண்டுக்குள்ள இருக்கிற தோட்ட வீட்டைக் குடுத்திருக்காங்க.. பக்கத்திலேயே டீச்சர் இருக்கிறதாலே அவரோட பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க கேட்டுக் கிட்டாங்க.. அப்பாகிட்டத்தான் கேட்டாங்க.. அப்பாதான் ஒப்புக்கச் சொன்னார்..."
மிருதுளா சங்கீதாவின் முகம் பார்க்காமல் சொன்னாள்.. அதைச் சொல்லும் போது அவளிடம் தெரிந்த தடுமாற்றத்தையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த சங்கீதாவின் முகத்தில் எனக்கு உன்னைத் தெரியாதா என்ற கேள்வி தெரிந்தது.. குறுநகையோடு தோழியை பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவள்.. அவள் பேசி முடித்ததும்..
"இதை ஏன் என் கண்ணைப் பார்த்துச் சொல்ல உன்னால முடியல மிருதுளா..?" என்று கேட்டாள்..
"சங்கீதா.." மிருதுளா திகைத்தாள்..
"பழகினது கொஞ்சநாளா இருந்தாலும்.. நாம பிரண்ட்ஸா ஆகிட்டோம்கிற உரிமையில சொல்றேன்.. டெர்ரரை விட்டு நீ தள்ளியே நில்லு.."
மிருதுளா பேசவில்லை.. மௌனமாக இருந்தாள்.. அவளது மனதின் சிணுக்கம் சங்கீதாவுக்குப் புரியாமல் இல்லை.. தோழியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்ற யோசனையுடன் அவள் தொடர்ந்து பேசினாள்..
"டெர்ரரோட கல்யாணத்துக்கு அப்புறமா அவர் வீட்டிலே எதுவுமே சரியாக இல்லையாம் மிருதுளா.. தங்கதுரை சாரும்.. சுபா மேடமும் எவ்வளவோ தடுத்துப் பார்த்திருக்காங்க.. இவர் கட்டினா அந்த நீபாவைத்தான் கட்டுவேன்னு ஒற்றைக் காலில் நின்னாராம்.. வேற வழியில்லாம சாரும் மேடமும் சம்மதிச்சாங்களாம்.. இது எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேட்கறியா..? நீதான் சென்னக்காரி.. நான் இந்த தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவள்.. பெரிய வீட்டின் நியுஸ் எப்படியும் இறக்கை முளைச்சு ஊர் முழுக்க பரவிடும்.. அதிலயும் சுபா மேடத்தோட பிரண்டு.. எங்கம்மாவோட பிரண்டுக்கு ஒன்னு விட்ட சின்னம்மா மகள்.."
"தலையைச் சுத்தது.."
"இதுக்கு மட்டும் வாய் திறந்திருவியே.. தலையைச் சுத்தறதை விட்டிரு.. கிடைச்ச நியுஸை மட்டும் பிடிச்சுக்க.. அவங்க வீட்டிலே ஏதோ சரியில்ல மிருதுளா.. நீ ஜாக்கிரதையாய் இரு..."
'யாரிடம்..?' என்று தன் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் மிருதுளா..
அவள் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..? கண்டவுடன் மயங்கிப் போனாளே.. அந்த விக்ரமிடமா ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்..? அந்த வசியக்காரன் தான் அவள் மனதை வசியம் பண்ணி வைத்திருக்கிறானே..!
அன்று இரவில் அவளுக்குத் தூக்கம் வரவில்லை.. மறுநாள் காலையில் தோட்டத்தில் நடந்து விட்டு வரப் போனவளின் முன்னால் பிரசன்னமானான் விக்ரம்.. அவனைக் கண்டதும் பார்வையை விலக்கி ஆப்பிள் பழ மரத்தைப் பார்த்தவளை சினத்துடன் பார்த்தான்..
"உனக்கெல்லாம் இவ்வளவு தெரியுது..."
அவனின் கோபத்தில் இவன் யாரிடம் பேசுகிறான் என்று சுற்று முற்றும் பார்த்தாள் மிருதுளா.. அந்தத் தோட்டத்தில் குருவிகளும்.. மைனாக்களும்.. இன்னும் அவளுக்குப் பெயர் தெரியாத பட்ஷிகளும்தான் இருந்தன.. மறந்தும் ஒரு மனிதஜீவன் கூட அங்கில்லை...
'இவன் இருக்கிறப்ப தைரியமா யார் இங்கே வருவாங்க..?' உதட்டைச் சுழித்தவள்..
"என்னையா சொன்னீங்க..?" என்று கேட்டாள்...
"இங்கே வேற யாரு இருக்கிறது..? நீயும் நானும் மட்டும்தானே இருக்கோம்..?" மட்டம் தட்டுவதைப் போல அவன் கேட்டான்..
"இல்லையே சார்.. மரம்.. செடி.. கொடி.. குருவி.. மைனான்னு எத்தனை ஜீவராசிக இருக்குதுக.. அதுகளை விட்டுட்டிங்களே சார்.." அவள் தன் மேதா விலாசத்தைக் காட்டினாள்..
"குசும்பு..?"
"அப்படின்னா என்ன சார்..?"
அப்பாவியாய் விழித்து இமை கொட்டியவளிடம்..
"இதுதான் அது.." என்றான் அவன் வெகுநிதானமாக..
"எனக்கொன்னும் அப்படித் தெரியலை சார்.." அவள் மறுத்தாள்..
"உனக்குத் தெரியாது.. ஆமாம்.. நான் மட்டும் எதிராளி.. உன்கூட இரண்டு நாளைக்கு முன்னாலே பேசிக்கிட்டு வந்தானே யாரு அவன்..?"
அவனது பெயர் நினைவுக்கு வராமல் ஒற்றை விரலால் ஒருபக்க நெற்றியைத்தட்டி விக்ரம் யோசிக்க ஆரம்பிக்க..
"குணசீலன்..!" என்று எடுத்துக் கொடுத்தாள் மிருதுளா..
"'டாண்'ணு பெயர் நினைவுக்கு வருதே.. அவ்வளவு குளோசா..?" விக்ரம் நெற்றிக் கண்ணைத் திறந்தான்..
"தேவைதான் சார் எனக்கு.. ஒத்தை விரலாலே டொக்கு.. டொக்குன்னு தட்டி நெத்தியிலே ஓட்டை போட்டு விடப் போறிங்களேன்னு பரிதாபப்பட்டு பெயரைச் சொன்னா அதுக்கும் கடிக்க வர்றீங்க.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா..."
"தெரிஞ்சிருந்தா..?"
"மார்னிங் வாக் வராமலே ஸ்கூலுக்கு கிளம்பிப் போயிருப்பேன்.."
"நேற்றுப் போனயே.. அதைப் போலவா..?"
அவனது கேள்வியில் அவள் விழிகள் உயர்ந்து அவன் விழிகளைப் பார்த்தன.. சடுதியில் விலகினாலும்.. அந்த ஒரு மனித்துளியில் அவனைப் பார்த்த விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் மனம் நனைந்தான் அவன்.. அவள் விழிகள் விரியத் திறந்து அவனை விழுங்க வருவதைப் போன்ற பிரமை அவனுக்கு உண்டானது..
'நேற்றுப் போலன்னு சொன்னா..? இவன் என்னை எதிர்பார்த்தானா..?' அவள் மனதில் தாம்தரிகிடதோம் என்று தாளம் வந்தது...
அவள்மீது பூமாரி பெய்வதைப் போல அவள் உணர்ந்தாள்.. விக்ரம் முதல்நாள் காலையில் தோட்டத்துக்கு வந்திருக்கிறான்.. அவள் வருவாளா என்று எதிர்பார்த்திருக்கிறான்.. இந்த நினைவு தந்த தித்திப்பில் அவள் மனமெல்லாம் உற்சாகம் வெடித்து சிதறியது..
"நேற்று ஸ்கூலுக்கு நேரமாகிருச்சுன்னு கிளம்பிப் போயிட்டேன்.. மார்னிங் வாக் வர டயமில்லை.."
"நம்பிட்டேன்..."
"அப்படின்னா.. என்ன அர்த்தம்..? நான் என்ன பொய்யா சொல்றேன்...?"
"இதை புருவ் பண்ணி எனக்கென்ன ஆகப் போகுது..? ஸ்கூலில் ஜாயின் பண்ணி முழுதா இன்னும் ஒருமாதம் கூட முடியலை.. அதுக்குள்ளே வெத்து வேட்டெல்லாம் உனக்கு பிரண்டா..?"
"வெத்து வேட்டா..? யாரது..?"
அவன் யாரைச் சொல்கிறான் என்று தெரியாமல் குழம்பினாள் மிருதுளா..
"இதுகூடத் தெரியலையா..? இல்லை அவனைப் பார்த்தா வெத்து வேட்டா உனக்குத் தெரியலையா..?" விக்ரம் இடக்காக கேட்டான்..
"நிஜமாவே தெரியலை.."
"ஓ.. அப்ப உன்கூட பேசிட்டு வந்தவன நீ ஹீரோவா நினைச்சிருக்கனும்.." கடுப்புடன் அவன் சொல்ல..
"ஓ.. நீங்க குணசீலனைச் சொல்கிறிங்களா..?" என்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் மிருதுளா..
"என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு..?" அவன் அதற்கும் கோபமானான்..
"பாருங்க சார்.. சிரிப்பு வந்தா சிரிச்சிரனும்.. அதுதான் என் பாலிஸி.. எனக்கு சிரிப்பு வருது.. சிரிக்கிறேன்.. உங்களுக்கும் சிரிப்புக்கும்தான் ஏணி வைச்சாலும் எட்டாதே.. அதனாலே நீங்க தள்ளி நின்னு வேடிக்கை பாருங்க.."
"தள்ளி நிக்காம கிட்ட வந்து உன் கையையா பிடித்தேன்..?"
எரிச்சலுடன் கேட்டவனை தலைசாய்த்து ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள் மிருதுளா.. ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது.. அவள் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தாள்..
"இரண்டு நாளாவே நீங்க கையைப் பிடித்து இழுக்கறதிலேயே குறியாய் இருக்கீங்களே.. என்ன சார் விசயம்..?"
"என்னது..?" அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
"மனசில இருக்கிறதுதான் வார்த்தையிலே வரும் சார்.. என்ன..? உங்க மனதிலே என் கையைப் பிடித்து இழுக்கனும்கிற ஆசை மலையளவுக்கு இருக்கும் போல இருக்கே.."
அவளின் கிண்டலான அந்தப் பேச்சில் வசீகரிக்கப் பட்டான் விக்ரம்.. இப்படிப் பேசுபவளின் கையைப் பிடித்து இழுத்து வைத்தால்தான் என்ன என்ற எண்ணக்கீற்று அவன் மனதில் ஓடியது..
'அப்படிச் செய்தா என்ன செய்வா..?'
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விக்ரமா என்று கேட்டு வைத்தாலும் வைப்பாள் என்ற நினைவில் அவன் இதழோரம் துளியளவு சிரிப்பு எட்டிப் பார்த்தது..
"அட..! உங்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா..?" அவள் ஏகத்துக்கும் ஆச்சரியப்பட்டுப் போனாள்...
"எனக்குச் சிரிக்கத் தெரியாது.. ஓகே..! அந்த கப்சா மன்னனுக்குச் சிரிக்கத் தெரியும் போல.. அதனாலதான் அவன்கிட்ட முப்பத்திரண்டு பல்லையும் காட்டி ரசிச்சுச் சிரிச்சுக்கிட்டு வந்தயா..?"
'கொடுமை..! அவன் பேச்சை ரசிச்சுச் சிரிச்சுட்டாலும்...'
என்ன சொல்லி அவள் நிலையை புரிய வைப்பது என்று தெரியாமல் அவள் பற்களை நறநறத்தாள்..
"சிரிச்சேன்.. அதை மட்டும் சொல்லுங்க.. ரசிச்சுச் சிரிச்சேன்னு சொல்லாதீங்க.. நான் ரசிச்சுச் சிரிச்சதை நீங்க பார்த்தீங்களா..?" அவள் சண்டைக்குப் போய் விட்டாள்..
வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தவளை ஏற இறங்க பார்த்தான் விக்ரம்.. அவளது மூக்கு நுனி சிவந்திருந்ததில் அவளது கோபத்தின் அளவை அறிந்து கொண்டவனின் மனதில் சாரல் அடித்தது...
'இது எதுக்கு..?'
அவன் உஷாரானான்.. தேவையில்லாத எந்தத் தென்றல் காற்றையும் அவன் வாழ்க்கையின் வாசலுக்குள் வரவேற்க கூடாது என்று மனதில் கொண்டிருந்த சங்கலபத்தை நினைவுறுத்திக் கொண்டவனாக அந்த இதத்தை வழியனுப்ப முனைந்தான்..
'இவ அந்த குணசீலன் கூட எப்படிப் பேசினா எனக்கென்ன..?'
நினைத்துப் பார்த்தவனுக்கு அந்த நினைவே பிடிக்கவில்லை..
'அதெல்லாம் அப்படி விட்டு விட முடியாது..'
அவன் மனது கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியது..
'இவ என் முகத்தப் பார்க்க மாட்டா.. உர்ருன்னு முறைப்பா.. அவன்கிட்ட மட்டும் முகத்தைப் பார்த்துச் சிரித்துச் சிரித்துப் பேசுவா.. இதை என்னன்னு கேட்காம விடக் கூடாது..'
"பிடிக்கலைன்னா என்ன வேணும்னா சொல்லிருவீங்களா..?"
"இரு.. இரு.. இப்ப யாருக்கு.. யாரைப் பிடிக்கலை..?"
"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை.."
"எனக்கு எதுக்கு உன்னைப் பிடிக்கனும்..?"
"வேணாம் சார்.. காலங்கார்த்தால கடுப்பைக் கிளப்பாதீங்க.. இப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கனும்னு நான் சொன்னேனா..? பிடிக்கலைன்னா ஒதுங்கிப் போக வேண்டியதுதானே..?"
"வேணும்னா என் பங்களாவை காலி பண்ணிட்டு வேற பக்கம் குடிபோயிரவா..?"
அவன் சிரிக்காமல் கேட்டான்.. அவள் இமைக்காமல் பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்த அவன் பார்வை அவள் பார்வையை கவ்விக் கொள்ள முயல.. அவள் அவசரமாக வேறு பக்கம் பார்த்து தப்பித்தாள்.. அவனுக்குள் ஏமாற்றம் கவிந்தது..
'ஏன் பார்க்க மாட்டேங்கிறா..?'
அந்தக் கேள்விக்கு அவனுக்கு விடை வேண்டியிருந்தது.. அவளோ அதற்குப் பதில் ஊர்பட்ட உறண்டைகளை இழுத்து அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவனுடைய தோட்ட வீட்டில் அவர்கள் குடியிருப்பதைச் சொல்லிக் காட்டுகிறானா என்று கேட்டாள்..
"நீதானே ஒதுங்கிப் போகச் சொன்ன..?" விக்ரம் நியாயம் கேட்டான்..
"நீங்க பெரிய நியாயவாதிதான் சார்.. உங்களைக் கண்டநாள் முதல் இந்த நாள் வரைக்கும் நீங்க நியாயம் பிளக்கிற விதத்தை நான் பார்த்துக்கிட்டுத்தான இருக்கேன்.. அதிலயும் நீங்க நியாயம் சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சவுடனே உங்க ஸ்டாப் எல்லாம் ஓடி ஒளியறாங்க பாருங்க.. காணக் கண்கோடி வேணும்.. அதில இருந்தே நீங்க எப்பேர்பட்ட நியாயவாதின்னு தெரியுதே.."
"ஓஹோ..?"
அவன் உதட்டைச் சுழித்தபடி அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்..
'தோடா..! பார்வையெல்லாம் பலமாயிருக்கு.. இந்தப் பார்வை எதுக்காம்..?'
"நீயும் என் ஸ்டாப்தானே..?"
"இல்லைங்கறிங்களா..?"
"மத்தவங்க ஓடி ஒளியறாங்கள்ல.."
"அதில ஒரு பெருமையா..?"
"நீயேன் ஓடி ஒளிய மாட்டேங்கிற..?"
"அதைத்தானே நேத்துச் செஞ்சேன்.. இன்னைக்கும் அதைச் செய்திருக்கனும்.. ஆசை யாரை விட்டது..?"
"ஊம்..? யார் மேலே ஆசைப்படற..?"
"நிச்சயமா உங்க மேல ஆசைப்படலை சார்.. இந்த தோட்டத்து மேலேதான் ஆசை வைச்சிருக்கேன்.. காலையில் கொஞ்சநேரம் நடந்தா நல்லாயிருக்கும்ங்கிற ஆசையில கிளம்பி வந்துட்டேன்.. அது தப்புங்கிறதை புரிய வைச்சிட்டிங்க.. இதோ போயிடறேன்.."
அவள் போகத் திரும்பினாள்.. விக்ரமின் முகம் கடுமையானது..
"நில்லு.." என்றான்..
"எதுக்கு..?"
"என் கேள்விக்கு பதிலைச் சொல்லிட்டுப் போ.."
"என்ன கேள்வி..?"
"என்னைப் பாத்தா பூச்சாண்டி போல இருக்கா..?"
"என்ன..?"
மிருதுளா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.. இப்போதும் அவன் பார்வை அவள் பார்வையைக் கவ்வியது தான்.. இருந்தாலும் அவள் பார்வையை விலக்கிக் கொள்ள வில்லை.. அப்படியொரு ஆதங்கம் கூட அவன் மனதில் வருமா என்ற அளவில்லாத ஆச்சரியத்துடன் அவன் முகத்தையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்..
மற்றவர்களால் 'டெர்ரர்..' என்று அழைக்கப்படும் அவனை 'பூச்சாண்டி'யின் ரேன்ஜில்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவன் அறியாமல் இருக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.. அது அவனுக்கு தேவையானதாகவும் இருந்திருக்கலாம்..
ஆனால்... அவளிடம் மட்டும் ஏன் அவன் பூச்சாண்டியாக இல்லாமல் இருக்க விரும்புகிறான்..?
அவள் மனதுக்குள்ளே ஒரு குயில் கூவியது.. அதன் இனிமையிலே மிருதுளா கரைந்தாள்.. அவன் கேட்ட கேள்வியின் தித்திப்பு அவள் நெஞ்சில் நிறைந்தது..
'இவனைப் பார்த்தா பூச்சாண்டியைப் போலவா இருக்கு..?'
"இல்லை.." முகம் சிவக்கச் சொன்னாள் மிருதுளா..
"யு ஆர் லுக்கிங் லைக் எ வெரி ஹேண்ட்சம் ஹீரோ.."
தன்னையறியாமல் சொல்லி விட்டவள்.. தன் தவறை புரிந்தவளாக நாக்கைக் கடித்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடி விட்டாள்..
புள்ளி மானாக துள்ளி ஓடுபவளைப் பார்த்தபடி விக்ரம் அசையாமல் நின்று விட்டான்.. அவள் முகத்தில் தெரிந்த வெட்கமும்.. அது உணர்த்திய உண்மையும் ஈரக்காற்றாக அவன் மனதை வருடியது..
'யார் இவள்..? எங்கிருந்து வந்தாள்..?'

கேள்வி அவன் மனதில் சுழன்றது.. வீட்டை நோக்கி நடந்த போது அவனையுமறியாமல் அவன் விசில் அடித்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -17
இது நீரோடு செல்கின்ற ஓடம் -17
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy