இது நீரோடு செல்கின்ற ஓடம் -12

12 தட்டி எழுப்பும் என் மனது - அதை கொட்டிக் கவிழ்த்தது உன் மனது.. ' என்ன மனிதன் அவன்.. ?' உமா பரிமாறிய பதார்த்தங்களை வி...

12
தட்டி எழுப்பும் என் மனது - அதை
கொட்டிக் கவிழ்த்தது உன் மனது..


'என்ன மனிதன் அவன்..?'
உமா பரிமாறிய பதார்த்தங்களை விரும்பிச் சாப்பிட்ட வருணையும் வைசாலியையும் நெகிழ்ந்த மனதுடன் பார்த்த மிருதுளாவுக்குள் கசப்பு தோன்றியது..
பெற்ற பிள்ளைகளுக்கு அன்பையும்.. பாசத்தையும் அறிமுகப் படுத்தாதே என்று ஒருவன் சொல்வானா..? அவன் சொன்னான்..
"ஒர்முறை அதை ருசிச்சுட்டா.. திரும்பத் திரும்ப மனசு அதைத் தேடும்.."
"தேடினா கொடுக்க வேண்டியதுதானே.."
"என்னால அதைக் கொடுக்க முடியாது.. ஸோ.. நீயும்.. அதைக் கொடுக்காதே.."
"இரும்பு மனசு சார் உங்களுக்கு.."
அவளின் கோபாக்னியில் அவன் கண்சிவந்து ரௌத்ரம் கொண்டான்..
"ஆமாம்.. எனக்கு இரும்பு மனசுதான்.. இந்த மனசு ஆரம்பத்திலேயே இருந்திருந்தா.. என்ன அநாதையாத் தவிக்க விட்டுட்டு என் அப்பாவும் அம்மாவும் போயிருக்க மாட்டாங்க.. இந்த இரும்பு மனசு ஒரு கேடயம்.. அந்தக் கேடயம் என் பிள்ளைகளிடமும் இருக்கனும்.. இவங்க அன்பையும் பாசத்தையும் தேட ஆரம்பிச்சுட்டாங்கன்னா இவங்க மனசு பூப்போல ஆகிரும்.. அப்படி ஆகக் கூடாது.."
அவன் கண்களில் ஒரு யுகத்துக்குண்டான கோபம் தெரிந்ததில் அவள் பயந்து போனாள்..
"இன்னைக்கு ஒருநாள் பெர்மிசன் தர்றேன்.. இனி இதுபோல நடக்கக் கூடாது.."
வேக நடையுடன் அவன் போய் விட்டான்.. பிள்ளைகளுக்கு ஒருவாய் சாப்பாடு போடுவதற்கு இத்தனை பேச்சா என்று மனதுக்குள் புகைந்தாள் அவள்.. குழந்தைகளை சாப்பிட வைத்து விட்டு.. அவர்கள் கை கழுவி வாய் துடைத்து..
"அம்மா.. இவங்களை இவங்க வீட்டில விட்டுட்டு வர்றேன்.." என்று அவள் கிளம்பிய போது உமா மறுப்புச் சொல்லவில்லை..
லேசாக முகம் சுளித்த சபாபதியிடம்.
"ஏங்க.. இந்தக் காம்பவுண்டுக்குள்ள இருக்கிறதே ரெண்டு வீடு.. ஒரு பேச்சுத்துணைக்குக் கூட அங்கிருக்கவங்களத்தான் நாம தேடியாகனும்.. இதில அதுக வேற முதலாளி வீட்டுப் பிள்ளைகளா போயிருச்சுக.. ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா இருக்கிறதில தப்பென்னங்க இருக்கு.." என்று எடுத்துச் சொன்னாள்..
"எல்லாம் சரிதான் உமா.. அது பெண்கள் இல்லாத வீடு..." சபாபதி தாடையைத் தடவினார்..
"இது ஆம்பளை இருக்கிற வீடுதான.. நாங்க என்ன தனியாவா இங்கேயிருக்கோம்..? கூட நீங்களும் இருக்கீங்க தான.. அப்புறமும் என்ன வியாக்கினம் வேண்டிக்கிடக்கு..? ஏன்..? அந்த வீட்டில வேலை செய்யற சாந்தாவப் பாத்தா உங்களுக்குப் பொம்பளையாத் தெரியலியா..?"
அவருக்கு அப்படி தெரியவில்லைதான்.. இவர் பார்த்தபோது அந்தச் சாந்தா சேலையை இழுத்துச் செறுகிக் கொண்டு சமையல்கார அங்குசாமியுடன் எகிறி எகிறி சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.. இத்தனைக்கும் அங்குசாமிக்கு ஆதரவாக.. டிரைவர் சீனிவாசனும்.. தோட்டத்தையும்.. காவலையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும் திலகரும் களம் இறங்கியிருந்தார்கள்.. ஆனாலும் அந்த மூவரையும் வாயைத் திறந்து ஒற்றை வார்த்தை பேச விடாமல் சாந்தா ஈடு கொடுத்து வீடு கட்டிய வேகத்தில் அங்குசாமியிடம் எதையோ பேசப் போன சபாபதி அதைப் பேசாமலே பின்வாங்கி விட்டார்..
இதைச் சொன்னால் மனைவியிடம் அவருக்கு தலையிறக்கமாகி விடாதா..? அதனால் மௌனம் காத்து தப்பித்து விட்டார்..
வருணை கையிலும்.. வைசாலியைத் தோளிலும் தாங்கிக் கொண்டபடி மிருதுளா அவன் வீட்டைப் பார்த்துப் புறப்பட்டாள்.. அவன் பேசின பேச்சுக்கு அவன் வீட்டு வாசல்படியை மிதிக்கலாமா என்று அவளது தன்மானம் சுரண்டியது..
'பிள்ளைகளுக்காக..' சுரண்டிய மனதை அவள் சமாதானம் செய்தாள்..
பங்களாவிற்குள் அவள் பிரவேசித்தபோது.. சாந்தா எதற்காகவோ அங்குசாமியை அதட்டிக் கொண்டிருந்தாள்.. இவளைக் கண்டதும்..
"வாங்கம்மா.." என்று பவ்யமானாள்..
"இப்படியே எப்பயும் நீ இருந்தா எப்படியிருக்கும்..?"
ஏக்கத்துடன் கேட்ட அங்குசாமியை முறைத்தாள்..
"ஆமாய்யா.. நான் இளிச்சவாச்சியா.. கேணையா இருந்தா உங்க எல்லாத்துக்கும் தோதா இருக்கும்.." சண்டைக்கும் கிளம்பி விட்டாள்..
"இந்தா புள்ள.. அம்மா புள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க பாரு.. அவங்ககிட்ட என்ன ஏதுன்னு கேப்பியா.. அதவிட்டுட்டு என்கூட மோத வர்றியே.. இந்தச் சண்டையை அப்புறமா போட்டுக்கக் கூடாதா..?"
அங்குசாமி சமயோசிதமாக புயலை திசை திருப்பி விட்டார்.. அது மிருதுளாவை எதிர் கொண்டது..
"என்ன வேணும்மா..? எதுவா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லுங்க.. இந்த வீட்டில ஒன்னுக்கு மூனா ஆம்பளைக வேலை செய்கிறாகன்னுதான் பேரு.. எந்த வேலயயும் உருப்படியா செய்ய மாட்டாக.. நான் ஒத்தப் பொம்பள.. இந்த வீட்ட நின்னு நிறுத்தறேன்.. என் அருமை இதுகளுக்குத் தெரியுதா..?"
"ந்தா.. சாந்தா.. உன் பஞ்சாயத்த ஓட்ட இதுதான் நேரமா..? ராத்திரியில தூக்கம் போடற பழக்கமே உனக்கு இல்லையா..? விடிய விடிய உலாத்திக்கிட்டு இருக்கப் போறியா..?"
"என்னய்யா.. சந்தடி சாக்கில என்னப் பேயின்னு சொல்லுதீகளோ.."
"ஆத்தாடி.. உன்னப் போயி அப்படிச் சொன்னா பேயி கோவிச்சுக்கிட்டு என்ன அடிக்க வந்திராதா தாயி..?"
"யோவ்.."
"போம்மா.. போயி அம்மாவுக்கு புள்ளைகளோட ரூமைக் காட்டு.. அதுகள படுக்க வைச்சிட்டு அவங்க போக வேணாமா..? நம்ம ராமாயணத்த விடியவிடிய பேசிக்கலாம்.. ம்ஹீம்.. இன்னைக்கு சிவராத்திரிதாண்டா அங்குச்சாமி.."
"இருய்யா.. அம்மாவ அனுப்பிட்டு வந்து உங்கள வைச்சுக்கறேன்.." சாந்தாவின் அறை கூவலுக்கு..
"என்னது..?!" என்று அரண்டு போய் விட்டார் அங்குசாமி..
அவரே பாவம் நாற்பதைக் கடந்தவர்.. கட்டைபிரம்-மச்சாரி.. இல்லறத்தை விரும்பாமல் விக்ரமின் தந்தையின் காலத்திலேயே அந்தக் குடும்பத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்.. அவரைப் போய் சாந்தா அவ்வாறு எச்சரித்தால் அவர் பயந்து போய் விடமாட்டாரா.?
"யோவ்.. கவனிச்சுக்கறேன்னு சொன்னேன்ய்யா.."
"அவ்வளவுதானா..?" அவர் ஆசுவாசமாகி நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்..
"உமக்கெல்லாம் ரொம்பத்தான்ய்யா ஆசை.. காலா காலத்தில கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ள குட்டிகளப் பெத்திருந்தா இந்நேரத்துக்கு தாத்தா ஆகியிருப்பீக.."
"இன்னும் ஐம்பதத் தொடல்ல.. அதுக்குள்ள தாத்தாவா..?"
"ஐய்யே.. ரொம்பத்தான் நினைப்பு.. உம்மப் பாத்தா கொள்ளுத் தாத்தா மாதிரியிருக்கு.. இதிலே இவுகள தாத்தான்னு சொல்லக் கூடாதாம்.."
சாந்தாவின் நையாண்டியில் அங்குசாமி சங்கடமடைந்தார்.. அவரின் தலைமுடி முப்பது வயதிலேயே நரை கண்டு விட்டது.. நாற்பதைக் கடந்து விட்ட வெண்முடி வேந்தரான அவரைப் பார்த்து மரியாதை கொடுக்க நினைத்த மிருதுளாதான் குழந்தைகளிடம் அவரைத் 'தாத்தா' என்று அழைக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தாள்.. அதற்கு முன்னால் அந்தக் குழந்தைகள் அவரை பெயர் சொல்லித்தான் அழைத்து வந்தன.. குழந்தைகள் அவருக்கு மரியாதை கொடுத்து சொந்தத்துடன் அழைப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான்.. ஆனால் அதற்காகவெல்லாம் அவர் தடியூண்டும் கிழவராகி விடமுடியுமா..?
"நீ வாயைத் திறந்தா மூடமாட்டேங்கிறது உலகப் பிரசித்தம்.. அத அம்மா முன்னாலதான் காட்டனுமா..? அவங்கள அனுப்பி வைச்சிட்டு கச்சேரிய வைச்சுக்கக் கூடாதா.."
"அம்மா முகத்துக்காக இப்பப் போறேன்ய்யா.."
ஆஹா.. போகிறாளே என்று மகிழ முடியாமல் அவள் திரும்பி வந்து விடுவாளே என்ற பயம் பிடித்துக் கொள்ள.. ம்ஹீம்.. பேயிருக்கும் இடத்தில் வேலைக்கு வந்து விட்டால் இதையெல்லாம் பார்க்க முடியாது என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார் அங்குசாமி..
"நீங்க வாங்கம்மா.."
சாந்தா வழிகாட்டியபடி மாடிப்படியேறினாள்.. அவள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த கதையை சளசளத்தவளின் பேச்சுக்கு 'ஊம்' கொட்டியவாறு அவளைப் பின் தொடர்ந்தாள் மிருதுளா..
"நானு பெரியம்மாவோட ஊருங்க.. பெரியம்மான்னா யாருன்னு தெரியுங்களா..?"
"தெரியாதே.."
"நம்ம ஐயாவோட அம்மாங்க.. லட்சணம்ன்னா லட்சணம்.. அப்படியொரு லட்சணம்.. இன்னைக்குப் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்.. அம்புட்டு அழகா இருப்பாக.. அவுகதான் வருணுக்குட்டி பிறந்தப்ப இதைப் பாத்துக்கன்னு என்னை அழைச்சுக்கிட்டு வந்து வீட்டோட தங்க வைச்சாக.."
"ஏன்..? வருணோட அம்மா இருந்திருப்பாங்கள்ல..?"
மிருதுளாவின் கேள்விக்கு சாந்தா பதில் சொல்ல வில்லை.. அவ்வளவு நேரமும் அங்குசாமியை வாய் திறக்க விடாமல் போர்க்களம் புகுந்தவளுக்கு இதைப்பேச மட்டும் எதற்காக இவ்வளவு தயக்கம் வருகிறது என்று புரியாமல் குழம்பிப் போனாள் மிருதுளா..
"அவுக பார்த்துட்டாலும்.." என்று முணுமுணுத்தவள்.
"விடுங்கம்மா.. அது பெரிய கதை.." என்று முடித்து விட்டாள்..
பெற்ற பிள்ளையைக்கூடப் பார்க்க முடியாத கதை பெரிய கதையாக இருக்க முடியாது என்ற நினைவுடன் குழந்தைகளின் படுக்கையறைக்குள் அவர்களை அழைத்துக் கொண்டு போய் படுக்க வைத்தாள் மிருதுளா..
தூக்கம் கண்களைச் சுழற்ற... மிருதுளாவின் கையணைவில் தொங்கியபடி வந்தவர்கள் படுத்ததும் உறங்கிப் போனார்கள்..
'பாவம்..' அவள் மனதில் இரக்கம் வந்தது..
தாயில்லாமல்.. தகப்பனை அணுக முடியாமல் தனிமையில் வாழும் அந்தக் குழந்தைகளின் மீது அவளுக்கு பரிதாபம் ஏற்பட்டது.. கவனமாக போர்த்தி விட்டு நிமிர்ந்தவள்..
"இவங்க தனியாவா தூங்குவாங்க..?" என்று சாந்தாவிடம் கேட்டாள்..
"இல்லம்மா.. நானும் இந்த ரூமிலதான் படுத்துத் தூங்குவேன்.. புள்ளைகள தனியா விட முடியுமா..?"
சாந்தா அறையின் ஓரமாக மெத்தையுடன் இருந்த கட்டிலைக் காட்டினாள்..
"தூங்கறது மட்டும்தான் இங்க.. மத்தபடி எனக்குன்னு ஒரு ரூமக் கொடுத்திருகாக.. அது கீழே இருக்கு.." விளக்கம் சொன்னாள்..
"ஓ..."
அந்தவகையில் விக்ரம் குழந்தைகளை பாதுகாவலில்லாத தனிமையில் விட்டு விடவில்லை என்பதில் அவளுக்கு ஆறுதலாக இருந்தது...
அது குழந்தையின் பாதுகாவலைக் குறித்து ஏற்பட்டதா.. இல்லை.. அவன் ஒன்றும் அவள் நினைக்கும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனல்ல என்பதினால் ஏற்பட்டதா என்று அவளுக்கே தெரியவில்லை..
லேசாகச் சிணுங்கியபடி வைசாலி புரண்டு படுத்தாள்.. சாந்தா குனிந்து அவள் கன்னம் தட்டிக் கொடுத்தாள்..
"நான் போய்க்கறேன் சாந்தா.. நீ குழந்தைகள் பக்கத்தில் இரு.."
சாந்தாவை அங்கேயே இருக்க வைத்துவிட்டு மிருதுளா வெளியில் வந்தாள்.. மறுநாள் வேலைக்கு கிளம்ப வேண்டுமானால் இரவில் நன்றாக தூங்கி எழுந்திருக்க வேண்டுமென அயர்வான அவள் உடல் சொல்லியது.. கனத்த இமை கெஞ்சியது..
அன்று முழுவதும் வீட்டிலிருந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைப்பதும்.. குழந்தைகளின் பின்னால் ஓடியாடுவதுமாக இருந்ததில் அவள் சிறிது நேரம்கூட ஓய்வெடுக்கவில்லை...
தளர்ந்த நடையுடன் வந்த கொட்டாவியை அடக்கியபடி மாடிப்படிகளில் கால் வைத்தவள் சற்றுத் தொலைவில் தெரிந்த காட்சியில் அப்படியே நின்று விட்டாள்..
ஹாலின் கடைக் கோடியிலிருந்த பால்கனியில் தனித்து நின்றபடி இருளை வெறித்துக் கொண்டிருந்தான் விக்ரம்..
'இந்நேரத்தில தன்னந்தனியா அங்கே நின்னுக்கிட்டு என்ன பண்றான்..? பால்கனியில விளக்கும் எரியல..'
அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இருள் சூழ்ந்திருக்க அவன் கோட்டோவியமாகத் தெரிந்தான்.. அந்த இருளிலும் அவனை அவள் அடையாளம்
கண்டு கொண்டது எப்படியென்று அவளுக்கு இனம் விளங்கவில்லை.. எதனால் அவள் பால்கனியை நோக்கி அவள் பார்வையைத் திருப்பினாள்..? குழந்தைகளைப் படுக்க வைக்க வந்தவள்.. வந்த வேலை முடிந்தவுடன் சடுதியில் கிளம்ப வேண்டியதுதானே..? அதை விட்டு விட்டு பால்கனியின் இருளுக்குள் ஏன் பார்வையைச் செழுத்தினாள்..?
பால்கனியிலிருந்து கனத்த அவனின் குரல் ஏதோ வொரு பாடலைச் சுமந்து கொண்டு வந்தது..
'என்ன பாடறான்..?'
அவனருகில் போ என்று சொன்னது அவள் மனசு.. வேண்டாம் என்று தடுத்தது அவள் அறிவு.. புத்தியை மனசு பகைத்தது.. அவன் என்னதான் செய்கிறான் என்பதை அவனருகில் போய் பார்த்து விட வேண்டுமென்ற இச்சை அவள் மனதில் மேலோங்கியது.. கைதேர்ந்த உளவாளியைப் போல அவள் அடிமேல் அடியெடுத்து வைத்து அவனை நெருங்கினாள்...
விக்ரம் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.. கைகளை முன்னால் மடித்துக் கட்டி.. கால்களை லேசாக அகற்றி.. ஆண்மை ததும்ப அவன் நின்றிருந்த தோற்றத்தில் அவளது கன்னி மனம் தடுமாறியது.. அவனருகில் செல்லச் செல்ல.. அவன் மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்த பாடல் மிகத் தெளிவாக அவள் காதுகளில் ஒலித்தது..
"சட்டம் ஏமாந்து
                போனாலும் போகும்..
     தர்மம் எப்போதும்
                பழிவாங்கித் தீரும்..
     நீ உனக்காக உருவாக்கும் நியாயம்..
                அது அநியாயம் ஆனாலும் ஆகும்.."
மிருதுளா நின்று விட்டாள்.. அந்த இரவும்.. ஆளரவற்ற அந்தத் தனிமையும்.. கடினமான குரலில் அவன் பாடிய பாடலும் அவள் மனதைப் பிழிந்து கசக்கின.. அந்தப் பாடல் வரிகளில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை அவள் கண்டாள்..
அந்தப் பாடல் அவன் ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வந்ததைப் போல ஒலித்துக் கொண்டிருந்தது.. இருள் சூழ்ந்த இரவில் அவனைப் போன்ற பிரபலமான பெரிய மனிதன் தனிமையில் நின்று கொண்டு இதுபோன்ற பாடலை மனதைப் பிழியும்படி பாடிக் கொண்டிருப்பதன் பொருள் என்ன..?
"தெய்வம்தான் அன்றிருந்த ராமன்..
                அவன் பொய்மானைத் தேடியது வேதம்..
     எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்..?
               எந்தக் குற்றங்கள் எதனாலே தீரும்..?"
மிருதுளா சுவரோடு சாய்ந்து விட்டாள்.. அந்தப் பாடல் அவளை சாய்த்து விட்டது.. அது எழுப்பிய வினாக்களுக்கு அவளிடம் விடையில்லை.. இருந்தும் அந்தப் பாடல் உணர்த்திய உணர்வலைகளில் அவள் அடித்துச் செல்லப்பட்டாள்.. அதன் வரிகளில் தெரிந்த வேதனையின் வலியில் மனம் அழுந்தினாள்..
"இது நீரோடு செல்கின்ற ஓடம்..  
               இதில் நியாயங்கள் யார்சொல்லக் கூடும்..?
     எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்..?
               எந்தக் குற்றங்கள் எதனாலே தீரும்..?
     இது நீரோடு செல்கின்ற ஓடம்..
              இதில் நியாயங்கள் யார்சொல்லக் கூடும்..?"

மிருதுளாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. ஏனோ.. அவனது அந்தத் தனிமையைக் கலைக்கக் கூடாதென்று அவள் மனம் சொல்லியது.. அவள் வந்த சுவடு தெரியாமல் பின்வாங்கினாள்.. சந்தடியில்லாமல் மாடிப்படிகளில் இறங்கியவள் வீட்டை நோக்கி ஓடி விட்டாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -12
இது நீரோடு செல்கின்ற ஓடம் -12
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy