இது நீரோடு செல்கின்ற ஓடம் -11

11 அலையடிக்கும் என் மனது... அதை அறிந்து கொள்ளாத உன் மனது..           "திருமகள் தேடிவந்தாள்.. - இந்தப்                 புத...

11
அலையடிக்கும் என் மனது...
அதை அறிந்து கொள்ளாத உன் மனது..


          "திருமகள் தேடிவந்தாள்.. - இந்தப்
                புதுமனை குடிபுகுந்தாள்..
            குலமகள் குங்குமத்தில் - தேவி
                கோவில் கொண்டாட வந்தாள்.."
ஒரு பெரிய ஹால்.. இரண்டு பெட்ரூம்கள்.. சின்னதாக சமையலறை.. முன்பக்க வராண்டா.. பின்பக்க முற்றமென இருந்த அந்த அழகான வீட்டினுள்ளே பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. உமா பாலைக் காய்ச்சி இறக்கி.. அதில் சர்க்கரை போட்டு பூஜையறைக்கு எடுத்துச் சென்றாள்..
"சாமி கும்பிட வாங்க..."
அவளது அழைப்பில் வாசலில் வருண்.. வைசாலியுடன் விளையாடிக் கொண்டிருந்த மிருதுளா அவர்களை கைப்பிடியாய் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.. அவள் மனசெல்லாம் மத்தாப்பூ சொரிந்தது.. மழை பெய்த காலையைப் போல பளிச்சென்று இருந்தது அவள் மனது.. தேவையான இடங்களில் ஆணி அடித்துக் கொண்டிருந்த சபாபதி மடித்துக் கட்டியிருந்த வேட்iடிய தலைழய விட்டு.. தலையில் முண்டாசாக சுற்றியிருந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு பூஜையறைக்குள் வந்து நின்றார்..
உமா கற்பூர ஆரத்தி காட்டினாள்.. அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்ட மிருதுளா குழந்தைகளுக்கும் அதைப்போல செய்தாள்.. உமா எல்லோருக்கும் பாலை ஊற்றிக் கொடுத்தாள்.. அதைப் பருகியபடி மிருதுளாவிடம் ஒண்டிக் கொண்டிருந்த வைசாலியையும்.. ஒட்டி அமர்ந்திருந்த வருணையும் பார்த்த சபாபதி..
"இந்தப் புள்ளைக ரெண்டும் உன்கூடவே இருக்குதுகளே... இவங்கள அங்கே தேட மாட்டாங்களா..?" என்று பங்களாவை நோக்கிப் பார்த்துக் கேட்டார்..
"தேட யார் இருக்காங்கப்பா..?" குழந்தைகளுக்கு கேட்டு விடாதபடி மெலிதான குரலில் சொன்னாள் மிருதுளா..
அவள் திட்டம் பலித்தது.. எதற்காக அந்த வார்த்தைகளைச் சொன்னாளோ.. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது..
"பாவம்.." பரிதாபப் பட்டாள் உமா..
"தாயில்லாத பசங்க.."
அவள் குரலில் தாய்மை தொனித்தது.. சபாபதி மௌனமானார்.. அவர் மனதில் இரக்கம் சுரந்தது.. சின்னஞ்சிறு குழந்தைகளை இப்படி தாயற்ற பிள்ளைகளாக்கி விட்டாயே. என்று கடவுளிடம் கேட்டபடி அவர் சாமான்களை ஒழுங்கு பண்ணச் சென்று விட்டார்..
மிருதுளா பிள்ளைகளுடன் தோட்டத்துப் பக்கமாக வந்தாள்.. அவர்கள் குடியிருக்க வந்திருக்கும் கெஸ்ட் ஹவுஸிற்கும்.. விக்ரமின் பங்களாவுக்கும் இடையில் தோட்டம் இருந்தது.. அங்கிருந்து விக்ரமின் பங்களாவைப் பார்த்தபோது அரண்மனையைப் பார்ப்பதைப் போல அவளுக்கு இருந்தது..
'ஒரு வழியாய் அவன்கிட்டச் சொன்னபடி இங்கே குடிவந்தாச்சு..'
அவள் மனதுக்குள் மலையைப் புரட்டி விட்ட களைப்பு இருந்தது..
சபாபதி சென்னையில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு.. வீட்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு.. அங்கிருந்த பொருள்களை லாரியில் ஏற்றி தூத்துக்குடிக்கு வந்து சேர்கின்ற வரைக்கும் அவள் மனது ஒரு நிலையில் இல்லை...
ஏதேனும் ஒரு வினாடியில் சபாபதியின் மனது தடம்புரண்டு பார்த்து வந்த வேலையே போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற சஞ்சலம் அவள் மனதை ஆட்டுவித்தது.. அப்படியேதும் நிகழ்ந்து விடாமல் சபாபதி போன சுருக்கில் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து ஒரு சுபயோக சுபதினத்தில் விக்ரமின் பங்களா வளாகத்துக்குள் இருந்த கெஸ்ட் ஹவுஸில் பால் காய்ச்சி குடியேறி விட்டதில் அவள் மனதில் எதையோ சாதித்து விட்டதைப் போல உற்சாக மழையின் ஊற்று பெய்தது..
அவர்களின் பொருள்கள் இறங்க ஆரம்பித்த போதே வருணும்.. வைசாலியும் அங்கே ஓடிவந்து விட்டார்கள்.. அவர்களின் அந்த உற்சாக வரவேற்பில் ஆளில்லாத தனிமையில் அவர்கள் வாடுவதைப் புரிந்து கொண்ட மிருதுளா அவர்களை அள்ளிக் கொண்டாள்.. அன்பான மனிதர்களின் அருகாமைக்கு அந்தக் குழந்தைகள் ஏங்குவதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
தோட்டத்துப் பூச்செடிகளின் மத்தியிலே குழந்தைகளோடு குழந்தையாய் அவள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது விக்ரமின் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்தது.. அவன் வருவதைக் கவனிக்காமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தபடி காரை விட்டு இறங்கினான் விக்ரம்.. பங்களாவுக்குள் செல்லாமல் தோட்டத்தைப் பார்த்துப் போனான்..
கண்களைத் துணியால் கட்டி மறைத்திருந்த மிருதுளா குழந்தைகளைத் தேடியபடி வந்து அவனைப் பிடித்து விட்டாள்.. தேக்குமரம் போல நின்றவனின் தோள் தடவியவள் அவசரமாக துணியை விலக்கிப் பார்த்தாள்..
"வெரிகுட்.." என்றான் அவன்..
"நீங்களா..?" அவள் தடுமாறினாள்..
"எதிர்பார்க்கலை இல்லையா..? ஆமாம்.. நீயென்ன டீச்சரா.. இல்லை வைசாலியப் போல குட்டிப் பாப்பாவா..?"
நக்கலுடன் கேட்டவனின் பார்வை அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை மேய ஆரம்பிக்க அவள் பற்களை நறநறத்தாள்..
'குட்டிப் பாப்பாவ இப்படித்தான் இவன் பாப்பானா..?'
அவளின் முறைப்பை லட்சியம் செய்யாமல் என் கேள்விக்கென்ன பதில் என்ற பாவனையில் அவன் புருவங்களை உயர்த்தியதில் அவளது கோபம் விலைவாசியைப் போல ஏறிவிட்டது..
"உங்க ஸ்கூலில் குட்டிப் பாப்பாக்களுக்குத்தான் டீச்சர் வேலை போட்டுக் கொடுப்பீங்க போல.. இது எனக்குத் தெரியாம போச்சே..."
அவன் பேசியதைப் போலவே அவளும் பேசிக் காட்டியதில் அவன் ஒரு மார்க்கமாக அவளை பார்த்து வைத்தான்..
"உனக்குத் தெரியாதது நிறைய இருக்கும் போல இருக்கே..."
அமர்த்தலாக அவன் பேசிய விதத்தில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
"ஆமாமாம்.. நீங்கதான் எனக்கு டியுசன் எடுத்து அதையெல்லாம் சொல்லிக் கொடுக்கனும் சார்.." போலி பவ்யத்துடன் சொன்னாள்..
"ஆக.. உன்னை என் புள்ளைகளுக்கு டியூசன் எடுன்னு டியுசன் டீச்சரா வீட்டுக்குள்ள கொண்டு வந்தா.. என்னை உனக்கு டியூசன் எடுக்க வைக்க நினைக்கிற.. கெட்டிக்காரிதான்.." ஒரு மாதிரியான குரலில் அவன் சொன்னான்..
"என் கெட்டிக்காரத்தனத்தை மெச்சிக்கிட்டாலும்.."
மிருதுளா அவன் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு குழந்தைகளை அழைத்தாள்.. அவர்கள் வரவில்லை.. விக்ரமை பார்த்ததும் மரத்தின் பின்னாடி ஒளிந்து கொண்டவர்களை தேடிப் பிடித்து வெளியில் இழுத்தாள்..
"அப்பாவைப் பார்த்ததும் என்னமா ஓடி வந்து கட்டிக்கிறாங்க பாருங்க.. அவ்வளவு பாசத்தைக் கொட்டி நீங்க வளர்த்து வைச்சிருக்கீங்க.." அவன் அனுப்பிய நக்கலை அவன் பக்கமே அவள் திருப்பி விட்டதில் அவன் கண்கள் இடுங்கின..
"ஒழுங்கா வளர்க்கத்தான் உன்னை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.. மைன்ட் இட்.." என்றான்..
"அடக்கி வாசிங்க சார்.. என் அப்பா காதில விழுந்திரப் போகுது.. அவர் என்னவோ உங்களை நல்லவர்.. வல்லவர்ன்னு புகழராம் சூட்டிக்கிட்டு இருக்கார்.. அக்ரிமெண்ட் விவகாரமே அவருக்குத் தெரியாது.. அது மட்டும் தெரிஞ்சிருச்சுன்னு வையுங்க.. உங்க வேலையே வேணாம்ன்னு தூக்கிப் போட்டுட்டு சென்னைக்கு மூட்டை கட்டிருவார்.." இறுகிப் போன முகத்துடன் சொன்னாள் மிருதுளா..
"மிரட்டறியா..?" கடினமான முகத்துடன் வினவினான் விக்ரம்..
"அதை நீங்க செய்வீங்க.. நான் செய்ய மாட்டேன்.." பதிலுக்குப் பதில் கொடுத்தாள் மிருதுளா..
"பிள்ளைகளை கண்காணிப்பாய் பார்த்துக்கனும்னு சொன்னா ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கே.. இதுதான் நீ பிள்ளைகளை கண்காணிப்பாய் பார்த்துக்கிற லட்சணமா..?"
"பார்த்துக்கனும்னு மட்டும் சொல்லுங்க.. கண்காணிக்கனும்னு சொல்லாதீங்க.. இவங்க குழந்தைக சார்.. இவங்களை கண்காணிக்கனும்கிற அவசியம் என்ன இருக்கு..?"
மிருதுளா தோட்டத்தின் புல்வெளியைப் பார்த்தபடி பேசினாள்.. நீச்சல் குளத்தின் பச்சைநிற நீரைப் பார்த்தபடி பேசினாள்.. மரக்கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்தபடி பேசினாள்.. பூச்செடிகளைப் பார்த்தபடி பேசினாள்..
மறந்தும் அவன் முகத்தைப் பார்த்துப் பேசவில்லை.. அதில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.. அவளை விசித்திரமாக பார்த்தான் விக்ரம்..
'திமிரோ..?' அவனுக்குள் கேள்வி எழுந்தது..
அவன் முகம் பார்க்காமல் பேசியவளின் முகத்தில் நிமிர்வுதான் இருந்தது.. திமிர் தெரியவில்லை.. அதில் அவனுக்குள் யோசனை வந்தது.. இதைப்பற்றி இன்னொரு நாள் கவனிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவன்..
"வருண்.. வைசாலி.. பால் சாப்பிட்டிங்களா..?" என்று பிள்ளைகளிடம் கேட்டான்..
"ஓ.." அவர்கள் தலையாட்டினார்கள்..
"அங்குசாமி இல்லைன்னு சொன்னாரே.." என்றான் விக்ரம்..
"அவங்க எங்க வீட்டில பால் சாப்பிட்டாங்க.." இப்போதும் அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் மிருதுளா...
"உங்க வீட்டில சாப்பிட்டாங்களா..?" அவன் முகம் கடுமையானது..
"வாட் இஸ் திஸ் வருண்..?" அவன் மகனை அதட்டினான்..
அதற்காகவே காத்திருந்ததைப் போல வைசாலி உதட்டைப் பிதுக்க ஆரம்பிக்க.. மிருதுளா விக்ரமுடன் சண்டைக்குப் போனாள்..
"எதுக்காக சார் குழந்தைகளை அதட்டறிங்க..?"
"ஹலோ.. அவங்க என் குழந்தைக.."
"யார் இல்லைன்னு சொன்னது..? உங்க குழந்தைகளாவே இருக்கட்டும்.. ஆனா.. என் பொறுப்பில் இருக்கிற குழந்தைகள் சார்.. அவங்களை திட்டுகிறது நீங்களாவே இருந்தாலும் என்னால் அதைப் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது..."
அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி சிடுசிடுத்தவளிடம்..
"நீ எங்கே பார்க்கிற..?" என்று கேட்டு விட்டான் அவன்..
சடுதியில் அவள் கண்கள் அவன் கண்களை சந்தித்து விலகியது.. அவனுக்குள் மின்னலின் கீற்று விழுந்தது.. அந்த ஒரு நொடியில் படபடத்த அவள் இமைகளுக்கு
கீழே தடுமாறிய அவள் மனதை அவளது கண்கள் வெளிப்படுத்தியதை கவனித்து விட்டான் விக்ரம்..
'இவ மனசில என்ன இருக்கு..?' அவனுக்குள் கேள்வி குடைந்தது..
"எங்க வீட்டில்தான் பிள்ளைக இன்னைக்கு சாப்பிடப் போறாங்க சார்.. இதை உங்க அங்குசாமியிடம் சொல்லிருங்க.." சுதாரித்துக் கொண்டு தரையைப் பார்த்தாள் மிருதுளா..
"ஊஹீம்.." கண்டிப்புடன் மறுத்தான் விக்ரம்..
"என்ன ஊஹீம்..?" தலையை சிலுப்பிக் கொண்டு சண்டைக் கோழியாய் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாள் மிருதுளா..
"பாடம் சொல்லிக் கொடுத்து அவங்களைப் பார்த்துக்கிறது மட்டும்தான் உன்வேலை.. அதுக்குத்தான் உனக்கும் சம்பளம் கொடுத்து.. உன் அப்பாவுக்கும் வேலை கொடுத்து.. குடியிருக்க வீட்டையும் கொடுத்திருக்கேன்.. இந்த அதிகப் படியான பணத்தை இழக்காமல் இருக்கனும்னா நீ உன்லெவலை உணர்ந்து இருந்துக்க பழகிக்க.. லெவலைத் தாண்டாதே.."
அவன் பேசிய குரூரப் பேச்சில் அவள் மனது வெடி வைத்த பூமியைப் போல ஆகிவிட்டது.. அவனது அருகாமையில் நிலவு நெருங்கி கைக்குள் வருவதைப் போல உணர்ந்தவள் அடுத்த நொடியில் அதை யாரோ தட்டிப் பறித்து விட்டதைப் போல உணர்ந்தாள்.. அவள் மனதில் துயரம் பொங்கியது..
'பணத்துக்காகவா அப்பாவுக்கு தெரியாம அக்ரிமெண்டில் சைன் போட்டேன்..? பணத்துக்காகவா அப்பாவை வேலையை விடவைச்சேன்..? பணத்துக்காகவா அப்பா மனசை மாத்தி இவன்கிட்ட வேலைக்குச் சேரச் சொன்னேன்..? இத்தனை தகிடுதத்தங்களையும் பண்ணி இவன் வீட்டுத் தோட்டத்துக்குள்ள குடி வந்திருக்கிறேனே.. எதுக்காக..? பணத்துக்காகவா..?'
அவன் தேர்ந்த விற்பன்னனைப் போல பேசியதில் அவள் மனம் குமுறினாள்.. அதற்கான பதிலை அவனிடம் சொல்லாவிட்டால் அவள் மிருதுளா இல்லையே..
நிமிர்ந்து அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்.. துளைக்கும் அவன் பார்வையில் மனது தடுமாறிய போதும் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு நேர்கொண்ட பார்வையுடன் பேசினாள்..
"பணக்காரரில்ல.. அதனால எதைவேணும்னாலும் பணத்தினால விலைக்கு வாங்கிற முடியும்ங்கிற அகம்பாவத்தோட பேசறிங்க.. உங்க பணம் உங்களோட சார்.. நான் உங்க ஸ்கூலில் வேலை பார்க்கத்தான் அப்ளை பண்ணினேன்.. அதுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சேலரியைவிட அதிகமா ஒரு பைசாவைக்கூட நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலை.. நீங்க கேட்ட டியுசன் டீச்சர் வேலையை நான் ஒப்புக்கிட்டதுக்கான காரணம் உங்க குழந்தைகள் சார்.. மத்தபடி அப்பாவை இங்கே வேலைக்கு இழுத்ததும்.. இந்த வீட்டை எங்களுக்கு குவார்ட்டர்ஸா கொடுத்ததும் உங்க சுயநலத்துக்காக சார்.. நாங்க இதைக் கேட்கலை.. இப்பக்கூடச் சொல்லுங்க.. ஒரே செகண்டில அப்பாவும் நானும் வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த வீட்டுச் சாவியை உங்க கையிலே கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்கோம்..."
"திரும்பவும் மிரட்டறியா..?"
"இல்லை.. நாங்க பணத்தை நினைக்காதவங்கங்கிறதை சொல்றேன்.."
"உங்க வீட்டிலெல்லாம் என் பிள்ளைக சாப்பிட மாட்டாங்க..."
"ஏன்..? அம்மாவிடம் நான் சொல்லியாச்சு.. இன்னைக்கு பால் காய்ச்சி குடியேறியிருக்கிறதாலே அவங்க ஸ்பெசல் அயிட்டங்களை சமைச்சிருக்காங்க.. குழந்தைகளை விட்டுட்டு என்னால அதையெல்லாம் சாப்பிட முடியாது.."
"உங்களுக்கு அதெல்லாம் ஸ்பெசல்.. எங்களுக்கு கேசுவல்.. இப்போப் புரியுதா.. உங்களுக்கும் எங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்குன்னு..?"
"ஒரு மண்ணும் இல்லை..."
"எங்க வீட்டுச் சமையலில் இல்லாத எந்த ருசி உங்க வீட்டுச் சமையலில் இருக்கிறது..?"
"பாசத்தின் சுவை..!" என்றாள் மிருதுளா..
"அது அன்பின் சுவை சார்.. அதை எங்க அம்மாவும் நாங்களும் அள்ளிக் கொடுக்கிறதாலேதான் உங்க வீட்டுச் சமையலைச் சாப்பிடாம எங்க வீட்டுச் சமையலைச் சாப்பிடனும்னு உங்க பிள்ளைக நினைக்கிறாங்க.."
சரியான இடத்தில் அவள் அடித்து விட.. அவன் ஆசையாமல் நின்றான்..
"சொல்லுங்க சார்.. இந்தச் சுவை உங்க வீட்டு சமையலில் இருக்கா..?" கர்வத்துடன் கேட்டபோது..
"இல்லை.." என்று தலைஅசைத்தான் அவன்.. கூடவே..

"அந்தச் சுவைகள் அவர்களுக்கு பழக்கமாகக் கூடாது.." என்று கண்டிப்புடன் சொல்லவும் செய்தான்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -11
இது நீரோடு செல்கின்ற ஓடம் -11
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy