இது நீரோடு செல்கின்ற ஓடம் -2

2 பேச வந்த வார்த்தைகளை.. பேசிவிட்டுப் போய்விடு... அவள் மனதின் நிம்மதியைப் பற்றி ' ஒல்லி ' க்கு எப்படித் தெரிந்தது என்று...

2
பேச வந்த வார்த்தைகளை..
பேசிவிட்டுப் போய்விடு...


அவள் மனதின் நிம்மதியைப் பற்றி 'ஒல்லி'க்கு எப்படித் தெரிந்தது என்று ஆற்றாமைப் பட்டுப் போனாள் மிருதளா..
எடுத்தது கண்டார் இற்றது கேட்டார் என்பதைப் போல அவள் மனதுக்குள் 'அப்பாடி..' என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டு முடிப்பதற்குள் அதைக் கலைக்க அவளுடைய ஃபைலை 'ஒல்லி' கைப்பற்றுவார் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
ஒல்லிக்கு 'சிடுமூஞ்சி' என்ற நாமகரணத்தைச் சூட்டலாமா.. என்று மிருதுளா யோசித்தாள்..
இப்படியா ஒரு மனிதர் சிரிக்கக் கூலி கேட்பார்..?
அப்படி அவர் கூலி கேட்டாலும் கொடுத்து விடுவதற்கு மிருதுளா தயாராகத்தான் இருந்தாள்..
அந்த மனிதர் கூலிக்கெல்லாம் அயர்கிற ஆளாகத் தெரியவில்லை.. சிரிப்புக்கும் அவருக்கும் காத தூரமாக இருந்தது.. இதில் வேறு ஃபைலை புரட்டியபடி அவளை வெட்டவா.. இல்லை குத்தவா என்று ஊடும் பாடும் பார்த்து வைத்தார்..
'என்ன தவறு செய்தேன் - அதுதான்..
                எனக்கும் புரியவில்லை...'
மிருதுளாவின் மனதில் அகஸ்த்மாத்தாக பாடல் ஒலித்து வைத்தது..
"எக்ஸ்பீரியன்ஸ் இல்லை போல.." ஒல்லி கண்களை உருட்டினார்..
'இந்த மனிதர் சும்மா பார்த்தாலே குலை நடுங்குது.. இந்த லட்சணத்தில கண்ணை உருட்ட வேற செய்யனுமா..' மிருதுளா நொந்து போய் விட்டாள்..
"இல்லை சார்.." நடுங்கியபடி பதில் சொன்னாள்..
"இப்பத்தான் பி.எட் முடிச்சிருக்காங்க போல... பிரஷ் கேண்டிடேட்.." 'கிட்டி'யாகப் பட்டவர் நடுவில் அமர்ந்திருந்த 'வளந்தானி'டம் பரிந்துரை செய்தார்..
மிருதுளாவிற்கு அவர் பால் நன்றி பெருகியது..
'யாரைப் பெற்ற அப்பாவோ தெரியலை.. தானா உதவி செய்யறார்.. இவர் நல்லா இருக்கனும்..' மனதுக்குள் கசிந்தாள்..
ஆசிரியை வேலையில் முன் அனுபவம் இல்லாத ஆசிரியை என்பதை அப்போதுதான் புத்தம் புதிதாக வந்திருக்கும் ஆசிரியை என்ற அடைமொழியுடன் குறையாகத் தோன்றும் ஒரு விவரத்தை நிறையாக மாற்ற அவரையன்றி யாரால் முடிந்திருக்கும்..?
'கிட்டி.. கில்லாடிதான்..' மெச்சிக் கொண்டாள்..
"அதைத்தான் நானும் சொல்றேன்.. படிச்சவுடனே வேலைக்கு வந்திட்டா டீச்சர்ன்னு மனசில தோணுமா.. இல்லை ஸ்டூடண்டுன்னு மனசில தோனுமா..? இன்னும் இவங்க ஸ்டுடண்ட்ங்கிற வட்டத்தில இருந்து வெளியே வந்திருக்க மாட்டாங்க.. நம்ம ஸ்டூடண்ஸை கட்டி மேய்க்க பக்குவப்பட்ட ஒரு டீச்சரால்தான் முடியும்.. அதுக்கு பல வருசங்களா டீச்சரா வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனும்..."
ஒல்லி கிட்டியை விரோதியைப் பார்ப்பதைப் போல பார்த்தபடி வளந்தானிடம் சொன்னார்.. வளந்தான் பதில் சொல்லவில்லை...
"அஃப்கோர்ஸ்.. அதே சமயம்.. ஸ்டூடண்டின் சைகாலஜியைப் புரிஞ்சு வைச்சிருக்கிற டீச்சராய் இவங்களால இருக்க முடியும்.. இன்னும் இவங்க ஸ்டூடண்ட்ங்கிற வட்டத்தில இருந்து வெளியே வரலைங்கிறது அதுக்கான பிளஸ் பாயிண்ட்.. இவங்ககிட்ட ஸ்டூடண்ட்ஸ் பிரண்ட்லியா பழகலாம்.. அவங்க மனசில இருக்கிறதை ஷேர் பண்ணிக்கலாம்.."
கிட்டி வளந்தானிடம் பேசிக் கொண்டே போக ஒல்லி அதை இடை மறித்தார்..
"இவங்க வந்திருக்கிறது பாடம் சொல்லிக் கொடுக்க தமிழ் செல்வன் சார்.. ஸ்டூண்ஸோட வீடு கட்டி விளையாடறதுக்காக இல்லை.. டீச்சர் கூட எதுக்காக ஸ்டூடண்ட் பிரண்ட்லியா பழகனும்..? அவங்க மனசில என்ன இருக்கும்ங்கிறது நமக்குத் தெரியாதா..? உருப்படாத சினிமாவும்.. எஸ்.எம்.எஸ்ஸீம்.. இன்டர்நெட்டும்
இருக்கும்.. அதைப் போய் இவங்ககிட்ட அவங்க ஷேர் பண்ணிக்கனுமா..? விளங்கிரும்.."
ஒல்லி கிட்டியை தாளித்துக் கொண்டிருக்க.. அதையுணராமல்..
'ஓ.. கிட்டியின் பெயர் தமிழ் செல்வனா..? சூப்பர் நேம்..' என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா..
வளந்தான் ஒல்லியை ஓர் பார்வை பார்த்தான்.. தமிழ்செல்வனாகப்பட்ட கிட்டியையும் ஒரு பார்வை பார்த்தான்.. பேசவில்லை..
'இவன் என்ன பேசாமடந்தையா..?'
பார்வை ஒன்றே போதுமா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் மிருதுளா.. அந்த ஒரு பார்வை ஆயிரம் ஆணைகளுக்குச் சமம் என்பதை அவனது கடுமையான கண்கள் உணர்த்தியதில் அவன் பக்கம் பார்க்காமல் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்..
"நோ.. நோ.. மிஸ்டர் மீனாட்சி சுந்தரம்.. நம்ம ஸ்டூடண்ட்ஸைப் பற்றி நாமே குறைவா நினைக்கக் கூடாது.. டீச்சருக்கும்.. ஸ்டூடண்ட்ஸீக்கும் மத்தியில்
ஓர் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும்.. ஒரு டீச்சரைப் பிடிக்கலைன்னா.. அவங்க நடத்தற பாடத்தையே ஸ்டூடண்ட்ஸீக்கு பிடிக்காம போயிடற அபாயம் இருக்கு.."
"என்ன சார்.. என் பாடத்தை ஸ்டூடண்ட்ஸ் ஒழுங்காப் படிக்கிறதில்லைங்கிறதை குத்திக் காட்டறிங்களா..?"
"கெமிஸ்ட்ரி கொஞ்சம் டிரை சப்ஜெக்ட்தான்.. அதைப் படிக்க ஸ்டூடண்ட்ஸ் கஷ்டப் படத்தான் செய்வாங்க.. அதுக்காக உங்களை அவங்களுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிவிட முடியாது சார்..."
"பிடிக்கனும்ங்கிற அவசியமும் இல்லை.. என்னை எதுக்காக அவங்களுக்குப் பிடிக்கனும்..? படிக்கிறவன் தலையில மசாலா இருந்ததுன்னா ஒழுங்காப் பாடத்தைப் படிச்சுட்டுப் போறான்.. அதுக்காக அவனைத்தூக்கி என் மடியில உட்கார வைச்சு.. நிலாவைக் காட்டி சோற்றை ஊட்டிக்கிட்டே பாடம் சொல்லித்தர முடியுமா..?"
மீனாட்சி சுந்தரத்தின் படபடப்பான பேச்சிற்கு பதில் சொல்லாமல் தமிழ் செல்வன் சிரித்து வைத்தார்.. வளந்தான் திரும்பி மீனாட்சி சுந்தரத்தைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.. அவனின் அந்தப் பார்வையில் அவரது  பேச்சு நின்று விட்டது..
"நீங்க போகலாம்.. செலக்ட் ஆனா தபால் வரும்.."
அவன் ரத்தின சுருக்கமாக பேசி அவளை அனுப்பி வைத்து விட்டான்..
'ஒரு வழியா வாயைத் திறந்தான்.. தூத்துக்குடி கடல்லதான் முத்திருக்குன்னு சொல்லுவாங்க.. இவன் என்னவோ இவன் வாய்க்குள்ளயில்ல முத்திருக்கிறதைப் போல இந்த பிலிம் காட்டறான்.. இவன் பேசினா முத்து உதிர்ந்துருமாக்கும்..'
எப்படியும் இந்த வேலை கிடைக்கப் போவதில்லை என்ற விடுதலை உணர்வோடு அவள் சிங்கத்தின் குகையை விட்டு வெளியே வந்தாள்..
"எப்படி பதில் சொன்னம்மா..?" என்ற சபாபதியின் கேள்விக்கு..
"தெரியலைப்பா.." என்று பதில் சொன்னாள்..
"என்னம்மா..?" அவருக்குப் புரியவில்லை..
"நிஜமாவே தெரியலைப்பா.. இன்டர்வியு பண்ணியது மூன்று பேர்.. அதில நடுவில் இருந்த வளந்தான்தான் செலக்சன் அத்தாரிட்டி போல.. மத்த ரெண்டு பேரில ஒருத்தர் ரொம்ப பிரண்ட்லியா இருந்தார்.. எனக்குச் சப்போர்டிவ்வா பேசினார்.. இன்னொருத்தர் முசுட்டுத்தனமா இருந்தார்.. என்னை வேலைக்கு எடுக்கக் கூடாதுன்னு ஒத்தைக் காலில நின்னார்.."
"அந்த வளர்ந்தவர் என்ன சொன்னார்..?"
"நீங்க போகலாம்.. செலக்ட் ஆனா தபால் வரும்ன்னார்.. எனக்கென்னவோ நம்பிக்கையில்லைப்பா.."
"ஏன்ம்மா..?"
"எக்ஸ்பீரியன்ஸ் இல்லையேப்பா.. ஸ்கூலைப் பார்த்தீங்கள்ல..? எவ்வளவு பெரியஸ்கூல்..! இந்த ஸ்கூலில் ஹையர் செகன்டரி கிளாஸஸ் எடுக்கும் பாட்டனி டீச்சர் எக்ஸ்பீரியன்ஸ்ஸா இருக்கனும்னு அந்த ஒல்லிக்குச்சி நரசிம்மன் சொன்னதில தப்பே இல்லைப்பா.."
"அவர் பெயர் நரசிம்மனாம்மா..?"
"ஊஹீம்.. மீனாட்சி சுந்தரம்ப்பா.."
"நீ நரசிம்மன்னு சொன்னியேம்மா.."
"மனுசன் சிரிக்கக் கூலி கேட்கிறார்ப்பா.. எனக்கென்னவோ அவருக்கு இந்தப் பெயர்தான் ஷீட் ஆகுமுன்னு தோணுது.."
சபாபதிக்கு சிரிப்பு வந்தது.. வந்ததுதான் வந்தோம்.. கடற்கரையைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவர்கள் கடற்கரைக்குப் போனார்கள்.. துறைமுகத்தை ரசித்து விட்டு திருச்செந்தூருக்கு பஸ் ஏறினார்கள்.. அங்கே செந்தூர் முருகனை சேவித்து விட்டு சென்னைக்கு ரயிலேறினார்கள்..
"என்னாச்சுடி.." என்று கேட்ட லீலாவிடம்..
"ஊத்திக்குச்சுடி..." என்று நிச்சயத்துடன் கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டிச் சொல்லி அவள் வயிற்றில் பாலை ஊற்றினாள் மிருதுளா...
"விடுடி.. இப்பத்தான ஆரம்பிச்சிருக்குது..? சீக்கிரமாய் உனக்கு ஒரு நல்லவேலை கிடைச்சிரும்.." லீலா அகன்றாள்..
"இன்னைக்குத்தான் அவ நிம்மதியாத் தூங்குவாப்பா.."
சபாபதியைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்து சிரித்தாள் மிருதுளா..
உற்சாகம் வந்தால் அவள் அப்படித்தான் சிரிப்பாள்.. அவளின் அந்தச் செயலில் பக்கத்திலிருப்பவர்களையும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொள்ளும்..
"ஆமாண்டி.. அவதான் உன்கிட்ட வந்து அவளுக்கு நிம்மதியா உறக்கம் வரலைன்னு சொல்லி மருந்து கேட்டா.." உமா மகளை செல்லமாக கடிந்து கொண்டாள்..
"உண்மையிலேயே நான் சொன்ன செய்திதான் அவ தூக்கத்துக்கான மருந்தும்மா.." என்று தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மிருதுளா...
தூத்துக்குடி என்ற ஊருக்கு நேர்முகத் தேர்விற்கு போய் விட்டு வந்த நினைவே இல்லாமல் உற்சாகமாக வளைய வந்து கொண்டிருந்தவளை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு விட்ட செய்தியைத் தாங்கிய கடிதம் வந்து ஆனந்தத் திகைப்பில் ஆழ்த்தியது..
"அப்பா.. ஜ கான்'ட் பிலிவ் திஸ்..."
குழந்தையாய் குதித்தவளை உட்கார வைத்து உமா திருஷ்டி சுற்றிப் போட்டாள்..
"ஊத்திக்குச்சுன்னு சொன்ன..?" ஏமாற்றத்துடன் கேட்டாள் லீலா...
"அன்னைக்கு அப்படித்தாண்டி நினைச்சேன்.. எப்படி இந்த அதிசயம் நடந்ததுன்னு எனக்கே பிடிபடலை.. இட்'ஸ் எ மிராக்கிள்.." என்றாள் மிருதுளா..
"இப்படிச் சொல்லிச் சொல்லியே ஜெயித்துக்கிட்டு இரு..."
லீலா அளவற்ற பொறாமையுடன் சொல்லிவிட்டுப் போனதும்..
"அதில் இவளுக்கென்னடி அத்தனை வருத்தம்..?" என்று எரிச்சல் பட்டாள் உமா..
"விடுங்கம்மா.. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.. எனக்கு படிப்பை முடிச்சவுடனே வேலை கிடைச்சிருக்கு.. அந்த சந்தோசத்தைக் கொண்டாடு-வீங்களா.. அதை விட்டுட்டு தேவையில்லாம அவளைப் பற்றிப் பேசி எதுக்காக நம்ம எனர்ஜியைக் குறைச்சுக்கனும்..?"
மிருதுளா சொல்வதும் சரிதான் என்று பட்டதில் அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி அவர்கள் யோசித்தார்கள்..
சபாபதி தனியார் கம்பெனியொன்றில் வேலை பார்த்து வந்தார்.. பூர்வீக நிலங்களை உடைய கிராமத்தில் பிறந்தவர் என்பதினால் வருடம் தவறாமல் குத்தகைப் பணம் வந்து விடும்..
மற்றபடி சபாபதியின் சம்பளம் குறைந்த அளவில் தான் இருந்தது.. அதில் மூன்று ஜீவன்கள் உண்டு.. உறங்கி எழுந்திருக்கலாம்.. அதிகப்படியான வசதிகளை நினைத்துப் பார்க்க முடியாது...
உமா சிக்கனமானவள்.. கவணரின் சம்பளத்திலும் மீதம் பிடித்துவரும் திறமைசாலி.. குடும்பத்தை கணவர் கொண்டு வந்து கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் நடத்தியபடி.. வருடா வருடம் கிடைக்கும் குத்தகைப் பணத்தை சேர்த்து வைத்தாள்.. நாளடைவில் சின்னதாக ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டாள்.. அடுத்து வந்த நாள்களில் குத்தகைப் பணத்தை போட்டு வீட்டைக் கட்ட வைத்து விட்டாள்...
"பத்தாதுக்கு பேங்க் லோன் போட்டுக்கலாம்ங்க.."
"திருப்பிக் கட்டனுமே உமா.."
"கடன் வாங்கினா திருப்பிக் கட்டத்தான் வேணும்.. இது ஒரு கேள்வின்னு கேட்க வந்திட்டிங்க பாருங்க.."
"வாங்கற சம்பளம் குடும்பம் நடத்தத்தான் சரியாயிருக்கு.."
"அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டா எப்படி..? நான் நடத்தறதினாலே குடும்பம் நடத்தச் சரியாயிருக்கு.. இதுவே வேறு யாருமா இருந்திருந்தா.. குடும்பம் நடத்தறது இழுபறியாயிருந்திருக்கும்.."
"எனக்கு நீதானேடி பெண்டாட்டி..?"
"இத்தனை வருசத்துக்குப் பின்னால இப்படியொரு சந்தேகமா..?"
"பின்னே எதுக்காகடி வேற யாரையும் குடும்பம் நடத்த வரச்சொல்ற..?"
"சாருக்கு அப்படியொரு நினைப்பிருக்கா..? அழகுதான்.. உங்களப்போயி நல்ல மனுசர்ன்னு நினைச்சேன் பாருங்க.. என்னைச் சொல்லனும்.. உங்க சம்பளத்தை நம்பி லோனை வாங்கச் சொல்லல.. கட்டற வீட்டை ரெண்டு போர்சனா கட்டுவோம்.. நாம கொடுக்கிற வாடகையை எடுத்து வைப்போம்.. நாம வாடகைக்கு விட்டிருக்கிற போர்சனில வர்ற வாடகையை சேர்த்துப் போட்டுக்குவோம்.. லோனைக் கட்டுவோம்.. பத்தாததுக்கு உங்க குத்தகைப் பணம் வருமில்ல.."
உமா கணக்குப் போட்டு வீட்டைக் கட்ட வைத்தாள்.. மாதா மாதம் குடியிருக்கிற வீட்டுக்கு வாடகையைக் கட்டுவதைப் போல பேங்க் லோனைக் கட்ட வைத்தாள்.. வருடா வருடம் வரும் குத்தகைப் பணத்தை அப்படியே பேங்கில் கொட்டி அசலைக் குறைத்துக் கொண்டே வந்தாள்.. அவளின் கெட்டிக்காரத்தனத்தில் மிருதுளா பத்தாம் வகுப்பில் காலடி வைத்த போது வங்கிக்கடன் முழுவதுமாக அடைந்து போயிருந்தது..
"நீ கெட்டிக்காரிடி.." மனைவியை சிலாகித்தார் சபாபதி..
அவருடன் வேலை பார்ப்பவர்கள் ஒண்டுக் குடித்தனங்களில் அல்லாடும் போது அவர் மட்டும் சொந்தமாக வீட்டையும் கட்டி அதில் ஒரு போர்சனை வாடகைக்கும் விட்டிருந்தால் தன் மனைவியை அவர் சிலாகிக்க மாட்டாரா என்ன..?
சென்னையை விட்டு வெளியூருக்கு குடி பெயர வேண்டிய அவசியம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த சபாபதிக்கு ஏற்படாது என்ற தைரியத்துடன் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த உமா.. மிருதுளாவுக்கு தூத்துக் குடியில் வேலை கிடைத்ததில் யோசனைக்கு ஆளானாள்..
"என்னங்க செய்யலாம்.." கணவரை அவள் யோசனை கேட்டபோது..
"நீ சொல்கிறதைச் செய்திரலாம்.." என்றார் மனைவி சொல்லே மந்திரமென்று வாழும் அவர் கணவர்..
"நான் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கறேன்ப்பா.."
மிருதுளா சொல்வதை ஏற்றுக் கொள்வதா.. வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் உமா..
தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் சபாபதியினால் சென்னையை விட்டு நகர முடியாது.. அவரைத் தனியாக விட்டு விட்டு உமாவாலும் நகர முடியாது..
அதற்காக ஒரே மகளை தூத்துக்குடியில் லேடிஸ் ஹாஸ்டலில் தங்க விடுவதா..?
"இவ நாக்கு உணக்கைங்க.. வத்தக்குழம்பும் அப்பளமுமா இருந்தாலும் என் கைப்பக்குவத்தில சாப்பிடனும்னும்பா..." உமா கவலைப் பட்டாள்..
"அதை மாசம் ஒருதடவை வந்து சாப்பிட்டாப் போச்சு.." மிருதுளா தைரியம் கொடுத்தாள்..
"இவ ஹாஸ்டலிலே இருந்ததே இல்லைங்க.. என்.ஸி.ஸி. கேம்ப்புக்கு போன முதல் நாளிலேயே வீட்டு ஞாபகம் வந்து ஓடி வந்துட்ட ஆளுங்க இவ.." உமா கண்ணைத் துடைத்துக் கொண்டாள்..
"ஐய்யே..! அது ஸ்கூல் டேஸ்ம்மா.. இப்ப அப்படியில்ல.. நான் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிற டீச்சரம்மாவாக்கும்.. இப்ப 'ஹோம் சிக்' கெல்லாம் வராது.." சமாதானப் படுத்தினாள் மிருதுளா..
"இவ இல்லாம வீடு.. வீடா இருக்குமா..?" அடுத்த பல்லவியை உமா ஆரம்பித்த போது நிதானமாக அவளைப் பார்த்தார் சபாபதி..
"இவளுக்குக் கல்யாணமாகி புருசன் வீட்டுக்குப் போயிட்டான்னா நீயும் நானும் தனியாத்தானே இருந்தாகனும் உமா..?"
அவரது கேள்வியில் பெண்ணைப் பெற்றவர்கள் வாழ வேண்டிய வாழ்வின் நிதரிசனம் உமாவுக்குப் புரிந்தது.. துக்கம் தொண்டையை அடைக்க அவள் தடுமாறினாள்..
"அதை அப்பப் பார்த்துக்கலாம்ங்க..."
"அதுக்கான பயிற்சி இதுன்னு நினைச்சுக்கலாமே உமா..."
உமாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவளின் பிடிவாதத்தால் சபாபதி வேலைக்கு லீவ் போட வேண்டுமென்றும்.. அவர்கள் மிருதுளாவுடன் தூத்துக்குடிக்குப் பயணப் பட வேண்டுமென்றும் முடிவானது..
"போனதும் ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுக்கலாம்.. மிருதுளா வேலைக்குச் சேரட்டும்..
நாம சுத்துப் பக்கம் விசாரிச்சு நல்லதா ஒரு லேடிஸ் ஹாஸ்டலைப் பார்த்து அதில இவ தங்கறதுக்கான ஏற்பாட்டைப் பண்ணி இவளைப் பத்திரமா தங்க வைத்துட்டு திரும்பி வரலாம்..."
சபாபதிக்கும் உமாவின் யோசனை சரியென்றே பட்டது..

தூரந்தொலைவில் வேலை பார்க்கப் போகும் பெண்ணை தனியே அனுப்பி வைப்பதா..?

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -2
இது நீரோடு செல்கின்ற ஓடம் -2
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/idhuneeroduselkinraodam2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/idhuneeroduselkinraodam2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy