எண்ணியிருந்தது ஈடேற -7

7 ' எதில்தான் சொதப்புவது என்றில்லையா.. ?' தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள் நந்தினி.. தற்கொலைக்கு முயற்ச்சிப்...

7


'எதில்தான் சொதப்புவது என்றில்லையா..?'
தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள் நந்தினி.. தற்கொலைக்கு முயற்ச்சிப்பது என்பது என்ன சாதாரண விசயமா..? ஒரு தடவை சொதப்பி அகப்பட்டு விட்டால் மறுபடியும் அதை முயற்ச்சிப்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே.. கட்டுக்காவல் அதிகமாகி விடுமே..
'ரிகர்சல் பார்த்திருக்கனும்..' அபத்தமான சிந்தனை தோன்றியது..
தாண்ட முடியாத அகழி முன் மாட்டிக் கொண்டால் அறிவார்ந்த சிந்தனைகள் தோன்றாது.. அபத்தமான சிந்தனைகள்தான் தோன்றி வைக்கும்.. பிரச்னையின் பிரம்மாண்டம் அறிவை மழுங்கடித்து விடும்..
நந்தினிக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.. நிற்க முடியாமல் உடல் தொய்ந்தது.. உத்ராவின் மீது சாய்ந்தாள்.. கிடைத்தது வாய்ப்பு என்று அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட உத்ரா..
"இதைத்தான் பண்ணி வைச்சுத் தொலைச்சாம்மா.." என்றாள்..
"இதைன்னா..?" அகிலா கழுத்தைச் சாய்த்துப் பார்த்தாள்..
'பார்க்காதே.. பார்க்காதே..
                ஹையைய்யோ பார்க்காதே..'
உத்ரா மனதுக்குள் பதட்டமாக பாடி வைத்தாள்.. அகிலா மகளின் பக்கத்தில் வந்து அவளைப் பார்க்காமல் நந்தினியைப் பார்த்து வைத்தாள்..
'பிழைச்சேன்..' உத்ராவின் சுவாசம் சீரானது..
"என்னடி இவ சீக்கு வந்த கோழியைப் போல சவங்கிக் கிடக்கிறா..?" அகிலா விசாரித்தாள்..
"என்னன்னு தெரியலைம்மா.. காய்ச்சல் போல இருக்கு.. கோட்டைக்குப் போக படியேறின களைப்பில மயக்கம் போட்டு விழுந்திட்டா.. முகத்தில தண்ணியைத் தெளிச்சு கோட்டையை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.. இப்ப வீட்டுக்குப் போயிரலாம்ன்னு இழுத்துக்கிட்டு வந்துட்டேன்.." சமர்த்தாக பதில் சொன்னாள் உத்ரா..
"நல்ல காரியம் பண்ணினே.. மழை வேற ஊத்திக்கிட்டு இருக்கு.. கோட்டையில இருந்திருந்தா சொட்டச் சொட்ட நனைஞ்சிருப்பீங்க.. காய்ச்சல்கார உடம்போட மழையில நனைஞ்சிருந்தா என்ன ஆகிறது..? ஊரான் வீட்டுப் பெண்.. நம்மளை நம்பி விருந்தாளியா வந்திருக்குது.. பத்திரமா கவனிச்சு ஊருக்கு அனுப்பி வைக்கனும்.. மாடிக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போயி படுக்க வை.. நான் சூடா காபி கொடுத்தனுப்பறேன்.."
அகிலா விசாரணையை நிறுத்தி விட்டு காபி கலக்கப் போய் விட்டாள்.. கலகலப்பும் கல்யாணம் வீட்டின் சந்தடியுமாக இருந்த சூழ்நிலையில் கலந்து சிரிக்க முடியாமல் தோழியைப் பற்றிய கவலை மனதில் அரிக்க அவளைத் தாங்கிப் பிடித்தபடி மாடிக்கு அழைத்துச் சென்றாள் உத்ரா.. படுக்கையில் படுத்ததும் உடலைச் சுருட்டிக் கண்களை மூடி விட்டாள் நந்தினி.. அவள் தூங்குகிறாள் என்று நம்பி அறையை விட்டுப் போகாமல் அங்கே கிடந்த சோபாவில் தோழியைப் பார்த்தபடியே சுருண்டு படுத்தாள் உத்ரா..
சூடான காபி வந்து விட்டது.. இடையில் எழுந்து கொள்ள முற்பட்ட நந்தினி உத்ராவைப் பார்த்ததும் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டாள்.. காபியைக் குடித்து விட்டுப் படு என்று உத்ரா உலுக்கி எழுப்பியதில் எழுந்து உட்கார்ந்து ஜன்னலைப் பார்த்தாள்.. மழை கொட்டிக் கொண்டிருந்தது.. சூடான காபி மழையின் குளிருக்கு இதமாக தொண்டையில் இறங்கியது..
அறைக்குள் அடைந்து கிடக்க என்னவோ போல் மனதுக்கு புழுக்கமாக இருந்தது.. அறையை விட்டு வெளியே வந்தாள்..
"எங்கேடி போற..?" அவசரமாய் பின் தொடர்ந்தாள் உத்ரா..
திருமண நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் தோழியைப் பதட்டப்பட வைத்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்வுடன்..
"ஸாரி.." என்றாள் நந்தினி..
"உன் ஸாரி, சுடிதாரையெல்லாம் நான் கேட்கலை.. பயமுறுத்தாம இரு தாயே.. அது போதும் எனக்கு.. நீ செஞ்சு வைக்க இருந்த வேலையை நினைச்சா நெஞ்சே நடுங்குது.. என் வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.. உன்னை விட்டுட்டு என்னை ஒரு வழியாக்கிருவாங்க.. உனக்குப் புண்ணியமாப் போகும் நந்தினி.. எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம்.. பொறுமையா இரு.."
"இது பேசி சரி பண்ற விசயமில்லைடி.."
"அதுக்கு தற்கொலைதான் சொலுசனா..? வேற வழி கண்டு பிடிக்கலாம் நந்தினி.."
"இருந்த ஒரு வழியும் சொதப்பிடுச்சே.."
"அடிச்சேன்னா பாரு.. உனக்கு நானிருக்கேன் நந்தினி.. ஏதாச்சும் யோசிக்கலாம்.. பினாத்தமா இரு.."
எதை யோசிப்பது..? மாற்று வழி என்ன இருக்கிறது..? அனைத்து வழிகளும் அடைபட்டு விட்ட நிலையில் மாற்று வழியை எங்கே அவள் தேடுவாள்..?
பால்கனியில் இருந்து பார்த்த போது காட்டாற்று வெள்ளம் போல சாலையில் மழைவெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது.. இன்னதென்று வரையறுக்க முடியாத புதுவித நிறத்துடன் இருந்தது மழைநீர்..
எங்கோ தூரத்தில் இடியிடிக்கும் சப்தம் கேட்டது.. மின்னல் வானில் தங்கக் கோடுகளாக தகதகத்து மின்னியது.. மாலை மயங்கிய அந்த இருள் வேளையில் வீதி விளக்குகளையெல்லாம் ஊதி அணைத்து விட்டுப் போனது பெருங்காற்று..
ஊழிக் காற்றின் வெள்ளமாக ஊற்றிக் கொண்டிருந்தது மழை.. மின்சாரம் இல்லாவிடினும் இன்வெர்ட்டர்களின் உபயத்தினால் வீடுகள் தோறும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.. உத்ராவின் வீட்டுக் கொண்டாட்டத்தை மழையால் தடை செய்ய முடியவில்லை..
பால்கனியின் ஊஞ்சலில் அமர்ந்து மழையைப் பார்த்தாள் நந்தினி.. தள்ளிப் பெய்த மழையின் சாரல் வீச்சு அருவி வீச்சைப் போல அவள்மீது பட்டு நனைத்தது..
உத்ராவின் வீட்டு உற்சாகம் அவள் மனதை தொற்றவில்லை.. கோலாகலத்தில் பற்றற்றுப் போன துறவியின் மனநிலையில் அவளிருந்தாள்.. அழுது அழுது காய்ந்த சருகாக உலர்ந்திருந்தாள்..
தாரை தாரையாக நீர்த்திரையாய் கொட்டிக் கொண்டிருந்த மழையின் ஊடே துளைத்து நுழைந்தது அவள் பார்வை.. தோட்டத்து மரக்கிளையில் பறவையொன்று எவருக்காகவோ காத்திருப்பதைப் போல மழையில் நனைந்து கொண்டிருந்தது.. நடுங்கிக் கொண்டிருந்த அதன் விழிகள் மழையின் குளிருக்கு இதமாக போர்த்திக் கொள்ளப் போர்வையை வேண்டின.. போர்வையுடன் அதன் பக்கத்தில் போனால் எப்படியிருக்கும் என்று உத்ராவிடம் கேட்டாள்..
"அபத்தமா இருக்கும்.." தயவு தாட்சண்யம் பார்க்காமல் முகத்தில் அடிப்பதைப் போல பதில் சொன்னாள்..
இதுபோன்ற பதில்களை உடனுக்குடனாக வழங்குவதில் உத்ராவுக்கு நிகர் உத்ராதான்.. வேறு எவரும் மிஞ்ச முடியாது என்ற அவளது தெனாவெட்டை..
"செஞ்சியில இல்லைன்னு சொல்லு.." என்று முறியடித்தாள் நந்தினி..
"அப்படின்னா..?"
"தஞ்சையில என் தம்பி இருக்கான்.. அவனோ ஒற்றைச் சொல்லுக்கு உன்னால இல்ல.. யாராலேயும் பதில் சொல்லிற முடியாது.. அப்பேற்பட்ட கில்லாடி அவன்.."
தம்பியின் நினைவில் அவள் மௌனமானாள்.. திரும்பவும் அவன் முகத்தைப் பார்க்க முடியுமா என்ற நிராசை அவளது நெஞ்சில் சூழ்ந்தது.. தஞ்சைக்குத் திரும்பினால் தம்பியைப் பார்க்கலாம் தான்.. தம்பியைப் பார்ப்பதோடு அது நின்று விடாதே.. வெந்நிலாவின் மாமன் மகளின் மகனைத் திருமணம் செய்து கொண்டு பெல்ட் அடி வாங்குவதில் போய் அது முடிந்து விடுமே..
"இந்தக் காலத்தில் பெல்ட் அடியா..? உன் தம்பி சும்மாக்காச்சும் பயமுறுத்தியிருப்பாண்டி.. மண்டூகம் மாதிரி புலம்பாதே.. ஹஸ்பெண்டைக் கைக்குள்ள போட்டுக்கிட்டா நாம பெல்ட்டைத் தூக்கி விளாசிரலாம்.. இதெல்லாம் ஒரு மேட்டரா..?" இலகுவாகச் சொன்னாள் உத்ரா..
"அவன் துப்பாக்கியும் வைத்திருக்கானாம்டி.. அவனோட அம்மாவும் தங்கையும் அவனோட கோபத்தைப் பத்திக் கதை கதையாச் சொன்னாங்களாம்.." நந்தினியின் உடல் நடுங்கியது..
"நீயெல்லாம் என்ஜினியரிங் படிச்சிருக்கேன்னு வெளியே சொல்லிராதே.. இப்படியாடி குலை நடுங்குவ.. பெல்ட்டாம்.. ரிவால்வராம்.. ஏண்டி இப்படி இருக்க..?"
"உனக்குப் புரியலை உத்ரா.."
நந்தினியின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.. மழை பொழிவத நின்று போயிருந்தது.. மின்சாரம் வந்திருந்தது.. குளுமையான ஈரக்காற்று பால்கனியிலிருந்து தோழிகளின் உடல்களை வருடிக் கொடுத்து குளிர்வித்துக் கொண்டிருந்தது...
சில்லென்ற அந்த சீதோஷ்ண நிலையில் உத்ராவின் நினைவு வருங்காலக் கணவனைத் தேடியது.. அவனைப் பற்றிப் பேச அவள் விரும்பினாள்.. அவனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அவன் மீதான அவளது ஈர்ப்பு எத்தகையது என்பதை உணர்த்த என்று பெயரிட முடியாத நிறைய சங்கதிகளை நந்தினியிடம் கொட்டி விடத் துடித்தாள்..
நிர்க்கதியாய் நிற்பவளைப் போலக் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பவளிடம் உத்ரா என்னத்தைப் பகிர்ந்து கொள்வது..?
அகிலா வந்துவிடக் கூடாது என்ற அச்சத்துடன் மாடிப் படிகளை பார்த்துக் கொண்டாள்.. நந்தினியின் புலம்பலையும் கண்ணீரையும் அகிலா பார்த்து விட்டால் வேறு வினையே வேண்டாம்..
"இது கல்யாண வீடும்மா.. அந்த நினைப்பு உன் மனசில இருக்கா..?" என்று நந்தினியிடம் கேள்வி கேட்பதில் ஆரம்பித்து..
"ஏண்டி அறிவுகெட்டவளே..! உனக்கு இவ துணைப் பெண்ணா..? இல்லை, இவளுக்கு நீ துணைப் பெண்ணா..? இவ பின்னாடியே முக்காலியைத் தூக்கிக்கிட்டு அலையற..? இவ என்னடான்னா இது கல்யாண வீடுங்கிறதை மறந்து கண்ணீரும் கம்பலையுமா மூலையில உட்கார்ந்து மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்கா.. நீ மடியில போட்டு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்கிற.. நல்லாயிருக்குடி நீ கல்யாணம் பண்ணிக்கிற லட்சணம்.. உனக்குத் துணைப் பெண்ணா இருக்க வேற பிரண்டே கிடைக்கலையா..? இவதான் கிடைச்சாளா..? இவ பக்கத்தில உட்கார்ந்ததுக்கிட்டு கண்ணீரைத் துடைச்சு விட்டுக்கிட்டு இருக்கத்தான் இவளை செஞ்சிக்கு
வரச் சொன்னியா..? உன்னைக் கட்டிக்கப் போகிற மாப்பிள்ளை மட்டும் இதைப் பார்த்திருக்கனும்.. மகிழ்ந்து போயிருப்பார்.." என்று உத்ராவை விட்டு விளாசுவதில் வந்து முடித்திருப்பாள்..
"மெதுவா அழுடி.. வீட்டில இருக்கிற உறவுக்காரங்க காதில விழுந்து வைச்சிரப் போகுது.." நந்தினியின் அழுகையை அவளது கைகளிலும் கால்களிலும் விழுந்து அடக்க முயன்று தோற்றாள் உத்ரா..
"உன்னை யாருடி செஞ்சிக் கோட்டையில இருந்து விழுகப் போனவளோட கையைப் பிடிச்சுத் தரதரன்னு இழுத்துக்கிட்டு வரச் சொன்னது..? கண்டுக்காம விட்டிருந்தா அப்படியே போயிருப்பேனில்ல..? உனக்கும் இந்தக் கஷ்டம் இருந்திருக்காது.."
நந்தினியின் பொருமலில் உத்ராவின் மனம் புண்ணானது.. தோழி படும் துயரைக் காண அவளுக்குச் சகிக்கவில்லை..
"அடிச்சேன்னா பாரு.." கைகளை உயர்த்தினாள்..
"அடிடி.. அப்பாவும் இதைத்தான் செய்தார்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவனும் இதைத்தான் செய்யப் போறான்.. நீயும் உன் பங்குக்கு ஏதாவது செய்யனுமில்ல..? அடிச்சு நொறுக்கு.."
"என்னடி இப்படிப் பேசற..?"
மனம் தாளாமல் தோழியை மடியில் சாய்த்துக் கொண்டாள் உத்ரா.. என்ன செய்து நந்தினியின் கண்ணீரை நிறுத்துவது என்று அவளுக்குப் புரியவில்லை.. அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டிருந்த விம்மல்களில் குலுங்கிக் கொண்டிருந்த நந்தினியின் முதுகை
ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள்.. நந்தினியின் விம்மல் நின்றபாடாயில்லை.. எதைச் சொல்லி நந்தினியைத் தேற்றுவது என்ற யோசனையில் ஆழ்ந்தாள் உத்ரா..
"சின்னக் குழந்தை போல பயந்து நடுங்கற நந்தினி.."
"என் பயமே வேற உத்ரா.. நீ பெல்ட்டால் விழுகிற அடியைப் பத்தியும், ரிவால்வரில வர்ற குண்டைப் பத்தியும் மட்டுமே பேசற.. அதுக்கு நான் பயப்படறேன்னு நினைக்கிற.. இல்லைடி.. என் சுயமரியாதை அழியப் போகுதேன்னு நான் பயப்படறேன்.. அடிமையைப் போல வாழவேண்டி வந்துருமோன்னு நடுங்கறேன்.."
"நந்தினி..?" உத்ரா திகைத்துப் போனாள்..
இது போன்ற ஒரு கோணத்தில் ஏன் அவள் நினைத்துப் பார்க்கவில்லை..? அவளது வருங்காலக் கணவனைப் பற்றிய இன்பமான நினைவுகளில் அவள் மூழ்கியிருக்கிறாளே.. அவன் பெல்ட்டால் அடிப்பவனாகவும் ரிவால்வரால் சுடுகிறவனாகவும் இருந்தால் அவளால் தாங்கிக் கொண்டு அவனைக் காதல் பார்வை பார்க்க முடியுமா..?
"நான் மனுஷியா இல்லை நான்கு கால் ஜீவனா..? பெல்ட்டாலே அடிச்சுத்தான் என்னைக் கன்ட்ரோலில் வைச்சுக்கனும்னா அன்பு, பாசம், காதல் என்கிற இதெல்லாம் எதுக்கு உத்ரா..? அதெல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போயிராதா..? அப்படிப்பட்ட வாழ்க்கை என்னை அவமானப்படுத்தும் உத்ரா.. என்மேலேயே எனக்கு மரியாதை இருக்காது.. இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்திரும்.. அதுக்குப் பேசாம நான் செத்துப் போயிரலாம்.."
விக்கித்துப் போனாள் உத்ரா.. தான், தன் திருமணம் தன் காதல் உணர்வுகள் என்று தன்னிலேயே புதைந்து தோழியின் துயரத்தை அவள் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டாளே..
"சாவுதான் பிரச்னைகளுக்கானத் தீர்வுன்னா இந்த உலகத்திலே யாருமே உயிருடன் இருக்க முடியாது.. பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை நந்தினி.. எல்லோருக்கும் அவங்கவங்க லெவலிலே பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.. அதை எதிர்த்து நின்று ஜெயிக்கிறதிலதான் வாழ்வின் தாத்பர்யமே அடங்கியிருக்கு.. நீ பிரச்னைகளைச் சந்திக்கப் பயப்படற கோழையில்லைடி.. எனக்கு உன்னைத் தெரியும்.. இதுக்கான மாற்று
வழி என்னங்கிறதைப் பத்தி யோசிக்கலாம்.. இப்போதைக்கு இதை ஆறப்போடுடி..
உன் ஊருக்குத் திரும்ப இன்னும் மூணு நாள் ஊடே இருக்கில்ல.. அதுக்குள்ள இதுக்கொரு வழியை நான் கண்டு பிடிக்கிறேன்.. என்னை நம்பு.."

வாய் வார்த்தையாகச் சொல்லாமல் மனதிலிருந்து சொன்னாள் உத்ரா.. தோழியின் வார்த்தைகளில் தைரியம் வரப்பெற்ற நந்தினி கண்ணீரைத் துடைத்தபடி எழுந்தாள்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -7
எண்ணியிருந்தது ஈடேற -7
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy