எண்ணியிருந்தது ஈடேற -2

                                          2 நந்தினியின் மனதிலும் கனவு இருந்தது.. வரப்போகும் கணவனைக் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது.....

                                          2


நந்தினியின் மனதிலும் கனவு இருந்தது.. வரப்போகும் கணவனைக் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது.. அவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கற்பனை இருந்தது.
அழகான, கம்பீரமான ராஜகுமாரன் ஒருவன் குதிரையில் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு போக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்..
அந்த ஆசைக் கனவுகளின் மொத்த உருவமாய், இதோ அவளருகில் ஒருவன் படியேறிக் கொண்டிருக் கிறான்.. ஆசையுடன் அவளைப் பார்க்க வேறு செய்கிறான்..
இருந்தும் என்ன பண்ண..?
நந்தினியின் மனதில் 'ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்..' என்ற நிராசையான பாடல் வரிகள் ஒலித்தன.
"குதிரை சப்தம் கேட்கிறதைப் போல இருக்கில்ல..?"
நந்தினியைப் பார்த்தபடி உத்ராவிடம் அவன் கேட்ட கேள்வியில் நந்தினிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
'என் மனசில இருக்கிறது, இவனுக்கு எப்படித் தெரிஞ்சது..?'
விழிகளை விரித்தவளை உன்னிப்பாகப் பார்த்தவனிடம்..
"எனக்கொன்னும் கேட்கலையே.. ஏண்டி உனக்குக் கேட்டுச்சா...?" என்று தலையாட்டி மறுத்தபடி நந்தினியிடம் கேள்வி கேட்டாள் உத்ரா..
"உனக்கே கேட்காதப்பா எனக்கு மட்டும் கேட்டிருமா..?" முறைத்தாள் நந்தினி..
அவளது முறைப்பைப் பொருட்படுத்தாமல் இதமாக அவன் சிரித்தான்... பதிலுக்குச் சிரிக்காமல் நந்தினி முகத்தைத் திருப்பிக் கொள்ள.. சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் உத்ரா..
தோழிகளின் பதில் சிரிப்பை எதிர்பார்க்காமல் அவன் பேச்சைத் தொடர்ந்தான்..
"பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கிறப்பக் காதில் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டுமாம்.. அது போலதான் எனக்கும் செஞ்சிக் கோட்டைக்கு வந்திருக்கிறதாலே தேசிங்குராஜாவின் நீலவேணிக் குதிரையோட கனைப்புச் சத்தம் கேட்டதோ.. என்னவோ.."
"உங்களுக்கு நீலவேணிக் குதிரையைப் பத்தித் தெரியுமா..?"
தனது ஊரின் சரித்திர நினைவுச் சின்னமான செஞ்சிக் கேட்டையைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்பதில் உடனடியாக அவனுடன் நட்பு பூண்டாள்
உத்ரா..
உயர்ரக ஜீன்ஸீம், சட்டையும், கண்களில் கூலிங் கிளாஸீமாக இருந்தவன் இந்திப்பட ஹீரோவைப் போல இருந்து தொலைக்கிறான் என்று நந்தினியின் மனம் ஜொள்ளியது.. அவனைப் பார்த்தால் மனதுக்குள் சலனம் ஏற்படும் என்று அவனைப் பார்க்காமல் படிகளைப் பார்த்தபடி ஏறினாள்.. அவனோ விடுவேனா என்பதைப் போல நந்தினியின் முகத்தையே ஆவலுடன் பார்த்தான்.
"தெரிந்ததினாலதான் மும்பையில இருந்து பிளைட் பிடிச்சு செஞ்சிக்கு வந்திருக்கேன்.." என்றாள் உத்ரா..
"ஓ.. நீங்க மும்பைக்காரரா..?" என்றாள் உத்ரா..
'அதான் இந்திப்பட ஹீரோ போல இருக்கான்..' நந்தினி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்..
அதை அவனும் பார்த்து விட்டதில் நந்தினியின் முகம் சிவந்தது.
"மும்பையில் பிஸினெஸ் இருக்கு.. சொந்தமா பிளாட் இருக்கு.. பட்.. நான் மும்பைக்காரனில்லை.."
நந்தினியைப் பார்த்தபடி விவரம் சொன்னான் அவன்.. இந்த விவரங்கள் அவளுக்கானதுதான் என்பதை அவன் பார்வை சொல்லாமல் சொல்லியதில் தவித்துப் போனாள் நந்தினி..
"யார் எங்கேயிருந்தா உனக்கென்னடி.. பேசாம வரமாட்டியா..?" தவிப்பை மறைக்கத் தோழியை அதட்டினாள்..
'அப்படியா..? நான் எங்கேயிருந்தாலும் உனக்கென்று மில்லையா..?' அவனது விழிகள் கேட்டான்..
நந்தினி தடுமாறினாள்.. அவளைக் காந்தம் போலக் கவர்ந்திழுத்த அந்த வசியக்காரனின் வசியத்தில்
மயங்கிப் போனது அவள் மனம்.. அதை மறைக்க யத்தனித்தவளாய்..
'ஆமாம்.. அப்படித்தான்.. எனக்கொன்றுமில்லை தான்..' என்று வெட்டும் விழிப்பார்வை பார்த்தாள்..
'ஊஹீம்..?' நம்பாத பாவனையுடன் அவன் சிரித்துக் கொண்டான்..
"சும்மாயிருக்கயா..? சார் வெளியூர்க்காரர்... எங்க ஊர் செஞ்சிக் கோட்டையைப் பார்க்கப் பிளைட் பிடிச்சுப் பறந்து வந்திருக்கார்.. உன்னைப் போல வந்த இடத்தில கோட்டையைப் பார்த்துட்டுப் போனாப் போகுதுன்னு சுற்றிப் பார்க்கவரலை.." உத்ரா சண்டைக்கு வந்தாள்..
"விடுங்க.. அவங்க ஏதோ மூட்-அவுட்டில இருக்கிறாங்க போல.." அவன் சிபாரிசுக்கு வந்தான்..
அதற்கும் உன் சிபாரிசை நான் கேட்டேனா என்ற ரீதியில் முறைத்து விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள் நந்தினி..
சிறுபிள்ளையின் சேட்டைகளை ரசிக்கும் முகபாவனையுடன் அவளை ரசித்து அவன் பார்த்ததில் அவளது நெஞ்சம் பொங்கியது.. இப்படிப் பார்க்காதே
என்று மறுகினாள்..
'உன் பார்வையை ரசித்து எதிர்பார்வை பார்க்கும் நிலையில் நானில்லை.. எனக்கான காதலனைத் தேடும் சுதந்திரம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.. வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடக்கிப் போடப் போகிறார்கள்.. தற்காலிகமாகத்தான் இந்த விடுதலைக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்... ஓரிரு நாள்களில் திரும்பியாகவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் செஞ்சிக்கு வந்திருக்கிறேன்... தஞ்சைக்கு திரும்பி விட்டால் எனது சிறகுகளை முறிப்பதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும்... அதன் பின்னர் சுதந்திரவானில் சிறகடிப்பதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது..'
அடிபட்ட குழந்தையின் வலியை நந்தினியின் முகம் பிரதிபலித்தது.. அவனது கூரியபார்வை அதை ஆராய்ந்தது.. அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. அந்த முடிச்சை அவிழ்க்கும் உத்தேசமில்லாதவளாய் நந்தினி படியேறுவதிலேயே கவனமாக இருந்தாள்..
"செஞ்சி.. அழகான பெயர்..!"
நந்தினியைப் பார்த்தபடியே அவன் ஜொள்ளியது நிச்சயமாக செஞ்சியெனும் பெயரின் அழகைப் பற்றியதில்லை என்பதை விரல் சுவைக்கும் கைக்குழந்தைகூடச் சொல்லி விடும்..
பக்கியிலும் பக்கியான உத்ராவுக்குத்தான் அது புரியவில்லை.. செஞ்சிவாசியான அவள் அகமகிழ்ந்து போனாள்..
"தேங்க்ஸ்.. நிறையபேர் இதை இஞ்சின்னு சொல்லி வைப்பாங்க.. அப்பல்லாம் எனக்குக் கட்டையைத் தூக்கி அவங்க மண்டையில நாலு போடு போடனும்னு ஆவேசமா இருக்கும்.."
"நல்லவேளை.. என் தலை தப்பிச்சது.."
வரிசைப்பற்கள் தெரிய அவன் சிரித்தான்.. சிரிக்கும் போது அவன் அழகு கூடுவதை உணர்ந்தாள் நந்தினி.. இளம் பெண்கள் மோகிப்பதற்கு ஏதுவாக இருந்தது
அவன் சிரிப்பு... அவன் சிரிக்கும்போது அழகாக இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. இதுவும் ஒர் வலைவீச்சாக இருக்கலாம்.. பெண் மனதில் சலனத்தை தூண்டுவதாக இருக்கலாம்.
'இவனுக்கென்ன.. சிரிச்சு மயக்கிட்டுப் போயிருவான்.. அதுக்கப்புறம் இவனை நினைச்சு ஏங்கித் தொலைக்கனும்.. தேவையா..?'
தேவையே இல்லை எனத் தீர்மானித்தாள் நந்தினி.. சிரித்துக் கொண்டிருந்தவனை உக்கிரமாகப் பார்த்தாள்.. காலையிளம் பனியின் குளுமையோடு தென்றலாக மனம் வருடியவளின் கோபத்தில் அவன் திகைத்துப் போனான்.. என்ன செய்தேன் என்று கேள்வி கேட்கும் தினுசில் அவனது புருவங்கள் உயர்ந்து இறங்கின..
'இம்சை பண்ணாதேடா.. எனக்கும் உனக்கும் என்ன இருக்குன்னு இந்த அழிச்சாட்டியம் பண்ற..?'
அவனைச் சுட்டு விரலை நீட்டிச் சுட்டிக் காட்டி விட்ட தவறை நினைத்து நொந்தபடி நாக்கைத் துருத்தி அரட்டினாள் நந்தினி.. அவன் விழிகளில் பல்ப் எரிந்ததில் இது வேலைக்கு ஆகாது என்று அரட்டுவதை நிறுத்தி விட்டு மலையேற்றத்தில் கவனமானாள்.. அவனோ அவள்மீது மட்டும் கவனமானான்..
"இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்தப்ப ராவணனோட மகன் இந்திரஜித் விட்ட அம்பில லட்சுமணன் மூர்ச்சையாகிட்டார்.. அவரைக் குணப்படுத்த பர்வத மலையில இருந்து மூலிகையை பறிச்சுட்டு வரப்போன அனுமார் பர்வத மலையையே பேர்த்து எடுத்துட்குப் போனாராம்.. அப்படிப் போனப்ப அவர் கையிலிருந்த பர்வத மலையிலிருந்து ஒரு பகுதி விண்டு கீழே விழுந்துச்சாம்.. சிரஞ்சீவியான அனுமார் கையிலிருந்து விழுந்த மலைத் துணுக்கு என்பதால் 'சிரஞ்சீவி' மலைன்னு அதைச் சொன்னாங்களாம்.. காலப் போக்கில் அது 'செஞ்சி'ன்னு மாறிப் போச்சாம்.." செஞ்சியின் பெயர்க் காரணத்தி விவரித்தாள் உத்ரா..
"இண்ட்ரெஸ்டிங்.." என்றான் அவன்..
"இந்த மலையுச்சியில் இருக்கிற ராஜகிரி கோட்டைக்குள் இருக்கிற செஞ்சியம்மன் கோவிலோட பெயரில் 'செஞ்சி'ன்னு இந்த ஊரைக் கூப்பிட்டாங்கன்னும் சொல்லுவாங்க.." அடுத்த கதையைச் சொன்னாள் உத்ரா..
"ஈஸிட்.." என்றவன் மலையுச்சியில் தெரிந்த கோட்டையைப் பார்த்து விட்டு..
"அதுதான் ராஜசிரிக் கோட்டையா..?" என்றான்..
"ஆமாம்.." பெருமையுடன் சொன்னாள் உத்ரா..
அவர்களிருவரின் இணக்கமான பேச்சில் நந்தினிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. ஏனோ.. உத்ரா அவனுடன் சகஜமாகப் பேசுவதில் அவளுக்குப் பிடித்தம் வரவில்லை..
"நீயென்ன கைடா..?" உத்ராவிடம் வெடுவெடுத்தாள்..
'பொறாமை..?' அவன் கண்கள் வினவின..
'ஒரு 'மை'யும் இல்லை..' சுட்டெரிப்பதைப் போல் அவள் பார்த்தாள்..
உத்ராவிடம் அவன் பேசினால் நந்தினி எரிச்சலாகிறாள் என்பதை கண்டு கொண்டவன் உற்சாகமாகி விட்டான்.. அதுவரை நந்தினியை பார்வையிட்டபடி படியேற ஏதுவாக இருக்கிறது என்பதற்காக உத்ராவிடம் வாய் வளர்த்தவன் படுதீவிரமாக கதை பேச ஆரம்பித்து விட்டான்.. அதில் நந்தினியின் கடுப்பு கூடியது..
"வெல்.. தேசிங்குராஜாதான் செஞ்சிக் கோட்டையைக் கட்டினாரா..?" ஆர்வத்துடன் கேட்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டான் அவன்..
நீலவேணிக் குதிரையைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பவன் இதைத் தெரிந்து கொள்ளாமலா செஞ்சிக் கோட்டையைப் பார்க்க விமானம் பிடித்து பறந்து வந்திருப்பான்..?
இதை உத்ராவுக்கு யார் சொல்வது..? பிறந்த ஊரின் பெருமையைக் காது கொடுத்துக் கேட்க ஒருவன் கிடைத்து விட்ட மகிழ்வில் அவள் சளசளக்க ஆரம்பித்து விட்டாள்..
"இல்லைசார்.. ஆனந்தக் கோனார்ன்னு ஒருத்தர் இந்த மலையில ஆடு மேய்த்துக்கிட்டு இருந்தாராம்.. அந்த வழியாப் போன இவரோட கட்டுச் சோத்தைக் கொடுத்துப் பசியாறச் சொன்னாராம்.. பசியாறின முனிவர் போகிற போக்கில இங்கே புதையல் இருக்குதுன்னு கை காட்டி விட்டுப் போனாராம்.. அதை எடுத்த ஆனந்தக் கோனார் கட்டின கோட்டைதான் இந்தச் செஞ்சிக் கோட்டை.. அவரை 'ஆனந்தக் கோன்' அப்படின்னு வரலாறு சொல்லுது சார்.."
"யார்கிட்டடி சொல்லுச்சு..? உன்கிட்டயா..?" ஊடே புகுந்தாள் நந்தினி..
"அடேங்கப்பா.. தஞ்சை பெரிய கோவிலைப் பத்திச் சொல்லறப்ப மட்டும் வரலாறு அதைச் சொல்லுது.. வரலாறு இதைச் சொல்லுதுன்னு அள்ளி விடுவ... செஞ்சிக் கோட்டைன்னா மட்டும் கிண்டல் வருதா..?" உஷ்ணமானாள் உத்ரா..
"பாதியிலே கதையை விடலாமா.. நீங்க கதையைக் கண்டினியு பண்ணுங்க.."
இடை மறித்து உத்ராவின் கோபத்திலிருந்து நந்தினியைத் தப்புவித்தான் அவன்.. நன்றி சொல்லாமல் அவனைக் கோட்டையிலிருந்து குப்புறக் கவிழ்த்துத்
தள்ளி விடுவதைப் போலப் பார்த்து வைத்தாள் நந்தினி.. அவன் சிரித்துக் கொண்டான்..
"பின்னாளில தேசிங்கு ராஜா கைக்கு இந்தக் கோட்டை வந்த பின்னாலதான் பிரபலமாச்சு சார்.."
"தேசிங்கு ராஜாவோட ஃபாதர் மராட்டிய சிங் சிவாஜியோட கேப்டன்தான..?"
"ம்ம்ம்.. தேசிங்கு ராஜாவோட குதிரை நீலவேனி.. அதன் நினைவா நீலாம்பூண்டி கிராமமே இருக்கு சார்.."
"ஓ.."
அவன் உதடுகளைக் குவித்தபடி நந்தினியைப் பார்த்தான்.. அவள் ஒற்றைவிரலை உயர்த்தி அந்தப் பக்கம் பார் என்று எச்சரித்தாள்.. அவன் கண்களில் மின்னல் வந்தது.. நந்தினிக்குள் கோபம் வந்தது..
"தேசிங்கு ராஜா வட இந்தியாவோட ராஜபுதனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இவரோ ட வாளுக்கு மாலை போட்டு மனைவியானவர் ராணிபாய்.. பார்க்காமலே
காதல் செய்த காதல் கோட்டை படம் போல பார்க்காமலே கல்யாணம் செய்து கொண்ட ஹீரோ, ஹீரோயின் வாழ்ந்த இடம் இந்த 'செஞ்சிக் கோட்டை' சார்.."
"வெல்டன்.."
உத்ரா ரசித்துக் கதை சொன்ன விதத்தை மனம் விட்டுப் பாராட்டினான் அவன்.. அது உண்மையான பாராட்டு என்பதில் நந்தினிக்குள் வெடுவெடுப்பு உண்டானது.. அதன் வெம்மையில் முகம் சுளித்தாள்..
"தேசிங்கு ராஜா அரங்கனை வணங்கி உத்தரவு கேட்காம எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டாராம் சார்.. முகலாயரோட போர் செய்யப் புறப்பட்டப்ப செஞ்சிக் கோட்டையில இருக்கிற அரங்கநாதரோட கோவிலுக்குப் போய் உத்தரவு கேட்டாராம்.. அரங்கன் உத்தரவு கொடுக்கலையாம்.. முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாதுன்னு அரங்கனின் உத்தரவை மீறி தேசிங்கு ராஜா யுத்தத்திற்கு கிளம்பிட்டாராம்.. அதில் கோபமான அரங்கன் முகம் திருப்பிக்கிட்டாராம்.." கண்கள் ஜொலிக்கச் சொன்னாள் உத்ரா..
"இப்பவும் அரங்கனின் சிலை முகம் திருப்பிய போஸில்தான் இருக்கிறதா..?" வியப்புடன் அவன் கேட்டான்..
"ஆமாம் சார்.. அரங்கனின் கோவிலுக்கு அரண்மனையில இருந்து சுரங்கப்பாதை இருக்கு.."
ராஜகிரிக் கோட்டையான செஞ்சிக் கோட்டையை அவர்கள் நெருங்கி விட்டார்கள்.. கோட்டையில் நின்றபடி சாலையைப் பார்த்தார்கள்.. வளைந்து நெளிந்து சாம்பல் வண்ண ரிப்ப
ன் போலத் தெரிந்தது சாலை..
"இது காதல் கோட்டை..!"

நந்தினியைப் பார்த்தபடி சொன்னான் அவன்.. நந்தினி பெருமூச்சு விட்டாள்.. அரைத்த மஞ்சளின் நிறத்தைக் கொண்டிருந்தவளின் முகத்தில் சோகம் அப்பயிருந்தது.. அலாதியான அவளது அழகில் அவன் மனம் லயித்தது.. ஆழ்ந்த சிந்தனையுடன் அவளிருந்தாள்.. அது எதற்காக என்று அவன் யோசித்தான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -2
எண்ணியிருந்தது ஈடேற -2
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy