உயிரே உனைத் தேடி ..2

2 கிரிதரன் சுவரிலிருந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தை மீண்டும் பார்த்தான்.. ' ராதாகிருஷ்ணன் ' என்றாலே ' காதல் ' என்ற வார்த்த...

2

கிரிதரன் சுவரிலிருந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தை மீண்டும் பார்த்தான்.. 'ராதாகிருஷ்ணன்' என்றாலே 'காதல்' என்ற வார்த்தை தான் எல்லோரின் மனதிலும் உடனே தோன்றும். தோழமை கலந்த சிறுவயது பாசம் என்பது யாருக்குமே இதுவரை தோன்றியதில்லை.
ராதா கிருஷ்ணனின் பால்ய காலத்துத் தோழி. சிறு பிராயத்திலிருந்தே உடன் வளர்ந்தவள். கிருஷ்ணன் மேல் அளவு கடந்த அன்பை வைத்தவள். அவனது கானத்தின் ரசிகை.
'கானம்'கிரிதரனின் கண்கள் எங்கோ மிதந்தன..
"பாடும்மா.. நீ பாடுவதைக் கேட்கும்போது அந்த சரஸ்வதியே வீணையுடன் கீழே இறங்கி வந்து விட்டது போல இருக்கு.. பாடு..."
"உமா... காபி கொடு.." அலுவலகத்திலிருந்து வந்த செல்வநாயகம் அதட்டுவார்.
"இருங்க.. இப்ப வந்து விடுகிறேன்.."
"ச்சு.. உன்னோடு இது பெரிய தொல்லை உமா.. எப்பப் பார்த்தாலும் வீணையும் கையுமாய் உட்கார்ந்து விடுகிறாய்.. அலுத்துக் களைத்து வரும் மனிதனுக்கு ஒரு காபி கொடுக்க நாதியிருக்கா இந்த வீட்டில்..?"
"இந்தா செல்வா காபி.."
செல்வநாயகம் பேசி வாய் மூடுமுன் அவர் முன் காபிக் கோப்பையை நீட்டுவாள் தமிழ்செல்வி. செல்வநாயகத்தின் அண்ணி..
"நீங்க ஏன் அண்ணி சிரமப்படுகிறீங்க... அவள் கொண்டு வரமாட்டாளா..?"
"என்னவோ.. உனக்குக் காபி கொடுப்பது மட்டும் தான் எனக்குச் சிரமம் என்பது போல் பேசுகிறாயே.. நாள் முழுவதும் ஒருத்தியாய் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறேனே.. அது சிரமம் இல்லையா..?"
நேரம் பார்த்துப் போட்டுக் கொடுப்பாள் அவள். தில்லைநாயகத்தின் மனைவிக்கு உமாமகேஸ்வரியைக் கண்டதும் பிடிக்காமல் போய் விட்டதற்கு காரணங்கள்
பல..
காலம் காலமாய் மைத்துனன் மனைவி மேல் வரும் பகை உணர்வாய் இருக்கலாம். நேற்றுவரை மாமியார், நாத்தனார் என்று யாருமேயில்லாத வீட்டில் மகாராணியாய் வாழ வந்தவளின் அதிகாரத்தையும் உரிமையையும் பகிர்ந்து கொள்ள வந்தவள் என்ற போட்டி உணர்வால் வந்த பங்காளிக் காய்ச்சலாய் இருக்கலாம். உமாமகேஸ்வரியின் அழகையும் அவளது இசையையும் வந்தவர் போனவ ரெல்லாம் பாராட்டிக் கூறியதால் வந்த பொறாமையால் இருக்கலாம்..
ஆயிரம் 'இருக்கலாம்'களில் எந்த 'இருக்கலாம்' அவள் மனதில் இருந்ததோ அது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். மொத்தத்தில் தமிழ்செல்விக்கு உமா மகேஸ்வரியைக் கண்டால் ஆகாது..
தம்பிக்கு பெண் கேட்டுப் போனபோது தனபாலனுக்கும் தில்லைநாயகத்திற்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தைப் பயன்படுத்தி செல்வநாயகத்தின் மனதை கொஞ்சம் கலைத்துவிட்டாள் தமிழ்செல்வி.
"அது என்ன செல்வா. உன் அண்ணன் பேசப்பேச இறங்கி வராமல் அப்படி மலையேறுகிறார் பெண்ணின் அண்ணன்காரர்.. பெண்ணைப் பெற்றது அவங்க வீட்டிலா இல்லை நம்ம வீட்டிலா..?"
"விடுடி.. காதலித்தவளை கை பிடிக்கணும்னா போராட்டம் வரத்தான் செய்யும். போராடாமல் காதல் கை கூடுமா..?"
காதலைப் பற்றி உற்சாகமாய் தில்லைநாயகம் பேச தமிழ்செல்வி பல்லைக் கடிப்பாள்.
"ஏங்க என்னவோ நாம் இல்லாதவங்க போலவும் அவங்க தான் பெரிய மாட மாளிகை கூட கோபுரத்தில் வாழ்கிறவர்கள் போலவும் பேசுகிறீங்களே. நல்லா இருக்குதுங்க உங்க நியாயம்."
"எதுக்குடி இந்தப் போடு போடுகிற.. தமிழு நாம் வசதியானவங்கதான். இல்லைன்னு சொல்லவில்லை. ஆனால் அவங்க நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மாடமாளிகை கூட கோபுரத்தில் வாழ்கிறவர்கள்தான். ஊர் பெரிய பண்ணையார். மிராசு குடும்பம். காதல்ன்னா கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வாங்க.. அதைத் தப்புன்னு சொல்ல முடியாதுடி. உனக்கு என்ன தெரியும் இதைப்பத்தி. எவ்வளவு நகை போடறாங்க, சீர் செய்யறாங்கன்னு எங்க அப்பா அம்மா பார்த்தாங்க. எங்க வீட்டில் எவ்வளவு வசதியிருக்கு. நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன்னு உங்க வீட்டில் பார்த்தாங்க..? இப்பப் பாரு நம்ம செல்வாவின் உத்தியோகத்திற்காகவோ நம் வீட்டு வசதிக்காகவோ அந்தப் பொண்ணுக்கு செல்வாவைப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் பெரிய பண்ணையார் குடும்பத்துப் பெண் என்பதே நமது செல்வாவிற்குத் தெரியாது. இவங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அவங்களுக்காவே விரும்புகிறாங்க.. காதலிக்கிறாங்க.. இதைப் புரிஞ்சுக்கடி."
தில்லைநாயகம் சொல்லல் சொல்ல செல்வ நாயகத்தின் முகம் ஒளிர்ந்தது. மனதில் உமாமகேஸ்வரி தோன்றினாள். மைத்துனனின் முகத்தைப் பார்த்து அவன் மனதைப் படித்துவிட்ட தமிழ்செல்வி அவசரமாய் அவனை உசுப்பேற்றுவது போல் கூறினாள்.
"காதலித்தவனை மறந்து விட்டு அண்ணன்காரன் கை காட்டும் மாப்பிள்ளைக்கு அந்தப் பொண்ணு கழுத்தை நீட்டாதுன்னு எந்த தைரியத்தில் சொல்றீங்க.."
"என்னடி இது இவ்வளவு நேரம் காதலைப் பற்றிக் கதை கதையாய் கேட்டுவிட்டு இப்படி ஓர் வார்த்தையைக் கேட்கிற..?"
"எல்லாம் காரணமாகத்தான். உள்ளூரில் முறை மாமன் வீடு இருக்காம். வீட்டுக்கு ஒரே பிள்ளையாம். பரம்பரை பரம்பரையாய் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிற சொந்தம். பரம்பரை கௌரவம் அது இதுன்னு அண்ணன்காரர் தங்கையை பாசத்தில் கட்டிப்போட்டு விட்டாருன்னா என்ன செய்வீங்க..?"
"இப்ப என்னதாண்டி சொல்ல வருகிறாய்..?"
"அண்ணன்காரர் இறங்கி வரும் வழி தெரியவில்லை. அந்தப் பொண்ணு இறங்கி வரலாமே.."
"எதை விட்டு இறங்கி வரச் சொல்கிறாய்..?"
"வீட்டு வாசல் படியை விட்டு.."
"என்னடி இது குண்டைத் தூக்கி போடுகிற..?"
"நான் குண்டையும் போடவில்லை. நண்டையும் பிடித்துப் போடவில்லை. காதல்ன்னா எல்லார் வீட்டிலயும் நடக்கிற கதைதானே இது..? நம்ம செல்வா மேல் உண்மை யிலேயே அந்தப் பெண்ணுக்கு அன்பிருந்தால் வீட்டை விட்டு வெளியே வரலாமே..?"
செல்வநாயகம் உமாமகேஸ்வரியை அவளது வீட்டுத் தோட்டத்திலேயே தைரியமாகச் சந்தித்தார்.
நிலவின் ஒளியில் தோட்டத்திற்கு வந்த உமா பதறினாள்.
"என்னங்க இது இந்த நேரத்தில் வீட்டுத் தோட்டத்திற்கே வந்து விட்டீங்க...? யாராவது பார்த்தால் என்ன ஆகும்..?"
"உனக்கும் எனக்கும் அப்படியாவது கல்யாணம் ஆகும். இதோ பார் உமா. உன் அண்ணன் முடிவாக என்னதான் சொல்கிறார்..? என் அண்ணன் முறைப்படி வந்து பெண் கேட்டும் பிடிவாதமாக இருந்தால் என்ன அர்த்தம்..?"
"கொஞ்ச நாள் பொறுங்க செல்வா... எல்லாம் சரியாகிவிடும்.."
"எதுவும் சரியாகாது. உனக்கு என் மேல் உண்மையிலேயே காதல் இருக்கிறதா இல்லையா..?"
"இருக்கிறது.."
"அப்படியானால் என்னுடன் வா.."
"வந்து..?"
"நாம் கோவிலில் திருமணம் செய்து கொள்வோம்.."
"அதாவது திருட்டுக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்கிறீங்க.. இல்லையா...?"
"என் அண்ணனும், அண்ணியும் முன்னே நின்று நடத்தும் கல்யாணம் எப்படித் திருட்டுக் கல்யாணம் ஆகும்..?"
"என் அண்ணனுக்குத் தெரியாமல் நான் செய்து கொள்ளும் கல்யாணம் நிச்சயம் திருட்டுக் கல்யாணம் தான்."
"உமா இப்போது என்னோடு வரப்போகிறாயா இல்லையா..?"
"என் உயிரே போனாலும் என் அண்ணனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வர மாட்டேன். என் அண்ணன் என்னை அப்படி வளர்க்கவில்லை. அவரது கௌரவத்தை குலைக்கும் காரியத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.."
"அப்போது ஏன் என்னைக் காதலித்தாய்..?"
"நான் உங்களைக் காதலிக்கவில்லை. உங்கள் காதலை ஏற்றுக் கொண்டேன். நீங்கள்தான் என்னைக் காதலிப்பதாய் சொன்னீங்க..."
தன்னையறியாமல் உமாமகேஸ்வரி சிதற விட்ட வார்த்தைகள் அவை. உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணின் வாயிலிருந்து வெளிப்பட்ட இந்த வார்த்தை களைக் கேட்டதும் செல்வநாயகம் உன்மத்தம் பிடிததவர் போலானார்.
"ஸோ.. உனக்கு என் மேல் காதல் இல்லை. உன் அண்ணன் பேச்சை மீறி வரமாட்டாய். நாளை அவர் கை காட்டும் மாப்பிள்ளையை மணந்து கொள்வாய் அப்படித் தானே..?"
"இல்லை.. உங்களைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன். அண்ணன் என்னை வற்புறுத்தினால் செத்து விடுவேன்."
செல்வநாயகம் சாந்தமானார். அவர் கண்களில் கனிவு வந்தது.
"எதற்காக சாக வேண்டும்..? நாம் வாழப் பிறந்தவர்கள். என்னுடன் வா. உன்னை ராணிபோல் வைத்துக் காப்பாற்றுகிறேன்.."
"இல்லை செல்வா.. என்னை வற்புறுத்தாதீங்க.. உங்களைத் தவிர வேறு யாரையும் நான் மணக்க மாட்டேன். அதற்காக இறக்க வேண்டி வந்தாலும் மற்றவர்கள் சந்தே கிக்காத வண்ணம் ஒரு ஆக்ஸிடெண்ட் போல் லாரி, பஸ்களின் முன்னே விழுவேனே ஒழிய தற்கொலைன்னு மற்றவர்களுக்குத் தெரிய விடமாட்டேன்."
"ஏனென்றால் உன் சாவு கூட உன் அண்ணனின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடாது.."
"ஆமாம்.. சிறு வயதிலேயே என் அப்பா இறந்து விட்டார். அம்மா வீட்டுப் படியைத் தாண்ட மாட்டார்கள். நோயாளி. என்னைத் தாய்க்கு தாயாய் தந்தைக்குத் தந்தை யாய் இருந்து வளர்த்தவர் என் அண்ணன். அவர் விவசாயத்தைப் பார்க்க படிப்பை பாதியில் நிறுத்தினார். என்னை நான் ஆசைப்பட்ட இசையைப் படிக்க வைத்தார். எனக்குக் கல்யாணம் ஆன பின்னால்தான் தனக்குக் கல்யாணம்ன்னு திருமணத்தையே தள்ளிப் போட்டவர் என் அண்ணன். அவர் காலடியில் மண்ணாய் மிதிபடுவேனே ஒழிய அவரைத் தாக்கும் பாறாங்கல்லாய் நான் இருக்க மாட்டேன்.."
'என் அண்ணன், என் அண்ணன்' என்று அவள் பெருமை பேசப் பேச செல்வநாயகத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'என்னை விட இன்னொருவர் மேல் இவள் பாசம் வைப்பதா..' என்ற காதலனின் உரிமை உணர்வு அது.
"போ.. எக்கேடோ கெட்டுத் தொலை. இனி இந்த செல்வநாயகத்தை நினைக்காதே.." கத்திவிட்டுச் சென்று விட்டார் செல்வநாயகம்.
விடிய விடியத் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்த வருக்கு விடியலில் அதிசயம் காத்துக் கொண்டிருந்தது.
உமாமகnஸ்வரியின் அண்ணன் தனபாலன் தங்கை யைப் பெண் கொடுக்க சம்மதம் தெரிவித்து வந்திருந்தார். தில்லைநாயகம் மகிழ்ந்து போனார்.
"என்னவோ போங்க.. என் தம்பியின் காதல் ஜெயித்து விட்டது."
"இல்லைங்க.. என் தங்கை என்மேல் வைத்திருந்த பாசம் ஜெயித்து விட்டது."
தனபாலன் பூரிப்போடு சொல்ல செல்வநாயகத்தின் முகம் சுருங்கியது. தமிழ்செல்வியின் கூரிய கண்கள் அதைக் கண்டு கொண்டன.
"எப்படிச் சொல்கிறீங்க...?" தில்லைநாயகம் வினவினார்..
"நேற்று இரவு உங்கள் தம்பி என் தங்கையைப் பார்க்க என் வீட்டுத் தோட்டத்திற்கே வந்துவிட்டார்.." தனபாலன் இறுகிய முகத்துடன் கூறினார்.
"அடிரா சக்கை.. அவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டானா என் தம்பி..? ஏண்டா செல்வா எப்படி வீட்டுத் தோட்டத்திற்குப் போனாய்..? சுவர் ஏறிக் குதித்தாயா..?" ஆவலுடன் தில்லைநாயகம் வினவ தமிழ்ச்செல்வி தலையில் அடித்துக் கொண்டாள்.
"உங்க தம்பி சுவர் ஏறிக் குதித்த வீரதீரத்தை அப்புறம் விசாரிக்கலாம். முதலில் வந்தவரைப் பேசவிடுங்கள்.." என்று மனைவி ஓர் அதட்டல் போட,
"அதுவும் சரிதான். ஏங்க என் தம்பி உங்க தங்கையை தோட்டத்தில் சந்தித்தால் அதில் காதல்தானே வருகிறது. பாசம் எங்கிருந்து வந்தது..?" என்றார் தில்லைநாயகம் தம்பியை ஏதோ வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்தது போல் மகாப் பெருமையுடன் பார்த்துக் கொண்டு,
"பாசம் என் தங்கையிடமிருந்து வந்தது.." தன பாலனின் பார்வை ஓர் தமையனின் பெருமிதத்தோடு செல்வநாயகத்தைப் பார்த்தது.
"பாருங்க.. என் வீட்டுக்காரருக்கு நேரடியாய் பேசினாலே மண்டையில் ஏறாது. இப்படி சுற்றி வளைத்துப் பேசினால் சுத்தமாய் அவருக்குப் புரியாது. நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாய் சொல்லுங்க..." தமிழ்செல்வி எரிச்ச லுடன் கூறினாள்.
"கேளுங்கள் சார்.. உங்கள் தம்பி நேற்று இரவு என் தங்கையைச் சந்தித்து வீட்டை விட்டு அவருடன் வந்து விடும்படி வற்புறுத்தினார்.." என்றார் தனபாலன்..
"அப்படியா சொன்னான் என் சிங்கத்தம்பி. அதற்கு உங்கள் தங்கை என்ன சொன்னது..?" ஆவலாய் வினவினார் தில்லைநாயகம்.
"என் அண்ணனை மீறி வீட்டை விட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டது நான் வளர்த்த என் அன்புத் தங்கச்சி. அதைக் கேட்டதும் என் மனம் நிறைந்து விட்டது.. உங்கள் வீட்டில் பெண்பிள்ளை இல்லை. ஒரு பெண் வீட்டை விட்டுப்போவது பெற்று வளர்த்தவர்களுக்கு எவ்வளவு அவமானத்தைத் தேடி தரும் என்பதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது. என் தங்கை உங்கள் தம்பிக்காக உயிரை விடத் தயாராக இருந்தாள். ஆனால் வீட்டை விட்டு ஓடி வரத் தயாராக இல்லை. எனக்கு இது போதும் தில்லை நாயகம். என் வளர்ப்புச் சரியில்லையோ என்று மனம் பதறி இருந்தேன். இல்லை.. நான் சரியாகத் தான் அவளை வளர்த் திருக்கிறேன். எனக்கு அது போதும். என் தங்கையை மனம் குளிர உங்கள் தம்பிக்கு மணம் முடித்துத் தருகிறேன்.. சொல் லுங்கள். எப்போது கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்..?"
திருமணம் இனிதாய் நடைபெற்று முடிந்தது. ஆனால் தன் காதல் மனைவிக்கு தன்னை விட அவளது அண்ணன்தான் பெரிது என்ற எண்ணம் செல்வ நாயகத்தின் மனதில் விழுந்து விட்டது. தமிழ்செல்வி அதை நன்றாக அறிந்து வைத்திருந்தாள். அந்த எண்ணம் மறைந்துவிடாமல் தூபம் போட்டு தூண்டி விட்ட வண்ணம் இருந்தாள்..
"செல்வா.. சொல்கிறேன்னு தப்பா நினைக்காதே.. கல்யாணம் ஆன பின்னால் ஒரு பெண்ணுக்கு புருசன்தான் எல்லாமும். வேலைக்குப் போனால் தன் போக்கில்
தன் அண்ணன் வீட்டிற்குப் போகலாம்ன்னு நினைப்பு ஓடும். நீ கேட்க முடியாது. அதுவே வீட்டிலிருந்தால் நீ அழைத்துப் போனால்தான் அண்ணனைப் பார்க்க முடியும். அதுதான் உனக்கு மரியாதை.." தமிழ்செல்வி எடுத்துக் கூறினாள்.
உமாமககேஸ்வரி வேலையை விட்டு நிறுத்தப் பட்டாள்.
"செல்வா.. சொல்கிறேன்னு தப்பா நினைக்காதே. வீட்டுப் பெண்ணுக்கு எதுக்கு வீணையும் பாட்டும்..அண்ணன் சொல்லிக் கொடுத்ததுன்னு அதையே வாசிச்சுக்கிட்டு இருந்தால் புருசனை யார் கவனிக்கிறது.."
உமாமகேஸ்வரி வீணையைத் தொட வாய்விட்டுப்பாட நேரமும் காலமும் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்செல்விக்கு எங்கே எப்படி அடித்தால் உமா மகேஸ்வரியை பாதிக்க வைக்க முடியும் என்று மிக நன்றாகத் தெரியும்..
உமாமகேஸ்வரி தன் அண்ணனை நினைக்கக் கூடாது. அதற்காக செல்வநாயகம் எதையும் செய்வார். தன் மைத்துனனின் மனநிலையை நாடி பிடித்து வைத்திருந்த தமிழ்செல்வி 'செல்வா சொல்கிறேன்னு தப்பா நினைக் காதே..' என்று ஆரம்பித்து தப்புத்தப்பாய் ஓதி வைப்பாள். அவள் வைக்கும் வெடி உமாவின் மேல் வெடிக்கும்.

கிரிதரனின் கண்கள் கலங்கின. யாரை நோவது..? உமாமகேஸ்வரியின் மேல் அதிகக் காதல் வைத்த காரணத்தினால் அவள் மனதை நோகடித்த செல்வ நாயகத்தை எப்படிக் குற்றம் கூற முடியும்..?

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத் தேடி ..2
உயிரே உனைத் தேடி ..2
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/uyireunaiththedi2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/uyireunaiththedi2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy